இந்திய பட்ஜெட் 2022: அல்வா முதல் சிவப்புப் பை வரை- சுவாரசிய தகவல்கள்

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், NIRMALA SITARAMAN

இந்திய நாடாளுமன்றத்தின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் (நிதிநிலை) கூட்டத்தொடர் ஜனவரி 31ஆஆம் தேதி தொடங்க உள்ளது, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தமது நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, ஓர் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அரசின் உத்தேசிக்கப்பட்ட வரவு செலவுகளின் பட்டியலாகும்.

பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் இந்த மத்திய பட்ஜெட் அறிவிப்பு மீது சொந்த எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்த பட்ஜெட்டில் விலை ஏற்றம் அல்லது வீழ்ச்சியை காண்பதற்கான வரி, சலுகை, திட்டங்கள் போன்ற அறிவிப்பு இடம்பெறுமோ என்ற ஆர்வமே இந்த எதிர்பார்ப்புக்கான காரணம்.

முதலில் இந்த யூனியன் பட்ஜெட் மற்றும் அதன் அம்சங்கள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

யூனியன் பட்ஜெட் என்றால் என்ன?

இந்திய அரசினால் வருவாயாகப் பெறப்படும் பணத்தின் அளவு மற்றும் எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் செலவினமாக செலவழிக்கப்படும் பணத்தை முன்கூட்டியே மதிப்பிடுவது பட்ஜெட் எனப்படும்.

இந்திய அரசியலமைப்பின் 112ஆவது பிரிவு, யூனியன் பட்ஜெட் அல்லது வருடாந்திர நிதிநிலை அறிக்கையை இந்திய அரசின் மதிப்பிடப்பட்ட வரவுகள் மற்றும் செலவினங்களின் அறிக்கையாக வரையறுக்கிறது.

ஒவ்வோர் நிதியாண்டும் ஏப்ரல் 1ல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31ல் முடிவடையும். இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாட்டின் நிதி அமைச்சராக இருப்பவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.

இந்திய பட்ஜெட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்களை இனி பார்க்கலாம்.

1. பட்ஜெட் ஆவணங்களை பிரீஃப்கேஸ் அதாவது பெட்டியில் எடுத்துச் செல்லும் பாரம்பரியம், ஆங்கிலேயர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. 'பட்ஜெட்' என்ற வார்த்தை பிரெஞ்சு வார்த்தையான 'போகெட்' என்பதிலிருந்து வந்தது, அதாவது 'சிறிய பை' என்பது இதன் பொருள்.2. இந்தியாவின் முதல் பட்ஜெட் 1860ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இந்திய வைஸ்ராய் நிர்வாகக் குழுவின் நிதி உறுப்பினரான ஸ்காட்ஸ்மேன் ஜேம்ஸ் வில்சனால் சமர்ப்பிக்கப்பட்டது. அவர் தி எகனாமிஸ்ட் மற்றும் சார்ட்டர்ட் வங்கியின் நிறுவனர். இது 1969 இல் ஸ்டாண்டர்ட் வங்கியுடன் இணைக்கப்பட்டது.

ஆர்.கே.சண்முகம் செட்டியார்
படக்குறிப்பு, ஆர்.கே.சண்முகம் செட்டியார்

3. சுதந்திர இந்தியாவின் முதலாவது பட்ஜெட் 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அன்றைய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியாரால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சண்முகம் செட்டியார் கோயம்புத்தூரில் பிறந்தவர். ஜவாஹர்லால் நேரு அமைச்சரவையில் ஓராண்டு மட்டுமே நிதியமைச்சராக இருந்தவர். 4. பத்து மத்திய பட்ஜெட்டுகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஒரே நபர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மட்டுமே. அடுத்து, ஒன்பது பட்ஜெட்களை தாக்கல் செய்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப. சிதம்பரம்.

5. 2,000ஆம் ஆண்டு வரை, பிப்ரவரி கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், அதே ஆண்டில் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை அவை தொடங்கியவுடனேயே நடக்கும் நிகழ்வாக காலை 11 மணிக்கு மாற்றினார்.6. இந்திய நிதியமைச்சராக அருண் ஜேட்லி 2014இல் இருந்தபோது, 2.5 மணி நேரத்துக்கு நீடித்த பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். அது ஒரு சாதனையாக பார்க்கப்பட்டது.

7. சுதந்திர இந்தியாவில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆவார். இவர் பிரதமராக இருந்தபோது, நிதித்துறையை கவனித்து வந்தார். நிர்மலா சீதாராமன் 2019ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் மூலம் இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், NIRMALA SITARAMAN

8. அந்தக்காலத்தில் சிவப்பு நிறம், பொதுவாக பிரீஃப்கேஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிறம். பட்ஜெட் உரையை தாங்கிச் செல்லும் பாரம்பரிய முறையிலான சிவப்பு ப்ரீஃப்கேஸ் முறைக்கு மூடுவிழா நடத்தி விட்டு, பட்ஜெட் ஆவணத்தை நாடா (சுதேசி 'பாஹி கட்டா') துணியால் சுற்றப்பட்ட தேசிய சின்னத்துடன் கூடிய துணிப்பையில் வைத்து கொண்டு செல்லும் வழக்கத்தை நிர்மலா சீதாராமன் 2019இல் அறிமுகப்படுத்தினார்.

9. இந்திய பட்ஜெட் வரலாற்றில் முதல்முறையாக 2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, காகிதமில்லாத பட்ஜெட் ஆக தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். கொரோனா தொற்று நோய் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. அப்போது ஆவணங்களின்றி தமது டிஜிட்டல் `பட்ஜெட்'-ஐ 'பஹி காட்டா' எனப்படும் கணக்கு லெட்ஜர்கள் அதாவது வழக்கமான பட்ஜெட் ஆவணங்களுக்குப் பதிலாக 'மேட் இன் இந்தியா' டேப்லெட்டில் படித்து முறைப்படி பட்ஜெட்டை பதிவு செய்தார் நிர்மலா சீதாராமன்.

10. 1973-74ல், முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் ராவ் சவான் சுமார் ₹550 கோடி நிதிப் பற்றாக்குறையுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதுநாள்வரை அதுவே அதிகபட்ச பற்றாக்குறையாகும். அப்போது அது 'கறுப்பு பட்ஜெட்' என்று அழைக்கப்பட்டது. 1971இல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் மற்றும் தோல்வியடைந்த பருவமழைக்காலத்துக்கு பிறகு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

11. 2017ஆம் ஆண்டுவரை இந்தியாவில் இரு வேறு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று பொது பட்ஜெட். மற்றொரு ரயில்வே பட்ஜெட். பொது பட்ஜெட்டை நிதியமைச்சரும், ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சரும் தாக்கல் செய்து வரும் வழக்கமே அதுநாள்வரை இருந்தது. அந்த வழக்கத்தை நரேந்திர மோதி அரசாங்கம் 2017இல் மாற்றி இரண்டு துறைகளுக்கும் சேர்த்தே ஒரே பட்ஜெட் ஆக தாக்கல் செய்தது. ஒருங்கிணைந்த ஒரே பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆவார்.12 1958இல், நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜிநாமா செய்தபோது, ​​பட்ஜெட்டைத் தாக்கல் செய்த முதல் பிரதமர் ஜவாஹர் லால் நேரு. பின்னர் 1970-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, ​​நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் ராஜிநாமா செய்தார். அதேபோல், 1987-88இல், நிதியமைச்சர் வி.பி.சிங் ராஜிநாமா செய்த போது, ​​அப்போதைய பிரதமர் ஆக இருந்த ராஜீவ் காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Nirmala Sitaraman

13. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன், நிதியமைச்சகத்தில் 'அல்வா' விழா பாரம்பரியமாக நடத்தப்படுகிறது. பட்ஜெட் அச்சிடப்படும் இடத்தில் இந்த 'அல்வா' தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. இந்த விழா பட்ஜெட் அச்சிடுவதற்கான முன்னோட்ட நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த தயாரிப்புப் பணியில் ஈடுபடும் கடைநிலை ஊழியர் முதல் அமைச்சர் வரை அனைவரும் இந்த அல்வா நிகழ்வை கொண்டாடுவார்கள்.

14. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக, அல்வா கிண்டும் நிகழ்ச்சி தொடங்கியதும், பட்ஜெட் தயாரிப்பு மற்றம் அச்சடிப்புப் பணியில் உள்ள நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், நிதியமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக் வளாகத்திலேயே பூட்டப்படுவார்கள். அவர்களுக்கான வெளியுலக தொடர்பு வசதிகள் துண்டிக்கப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில்தான் அந்த வளாகக் கதவுகள் திறக்கப்படும்.

15. ஆரம்பத்தில் பட்ஜெட் ஆவணங்கள் குடியரசு தலைவர் மாளிகையில் இடம்பெற்றுள்ள அச்சகத்திலேயே அச்சடிக்கப்பட்டன, ஆனால் 1950இல் பட்ஜெட் ஆவண விவரங்கள் வெளியே கசிந்தன. அதன் பிறகு, அச்சிடும் பணி தலைநகரில் உள்ள மின்டோ சாலைக்கு மாற்றப்பட்டது.16. 1980ஆம் ஆண்டு முதல் நிதி அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக் வளாகத்திலேயே பட்ஜெட் பணிக்காகவே நிறுவப்பட்ட ஒரு சிறப்பு அரசு அச்சகத்தில் பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படுகின்றன.

காணொளிக் குறிப்பு, நிர்மலா சீதாராமன் புதிதாக அறிவித்த ரூ.6.29 லட்சம் கோடி கொரோனா நிவாரணம் உதவுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: