மத்திய பட்ஜெட் 2021-22: நிர்மலா சீதாராமன் இந்திய பட்ஜெட் தாக்கல் - எதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? வருமான வரி பற்றி என்ன அறிவிப்பு?

இந்திய பட்ஜெட் 2021-22: நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், LSTV

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய அரசின் 2021-2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த பட்ஜெட் சிறப்பானதாக இருக்கும் என்று சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

வருமான வரியில் மாற்றம் உள்ளதா?

தனிநபர் வருமான வரி விகித மாற்றம் தொடர்பாக நிர்மலா சீதாராமன் எந்த அறிவிப்பையும் தமது பட்ஜெட் உரையில் வெளியிடவில்லை.

வட்டி மற்றும் ஓய்வூதியம் மூலம் வரும் வருவாயை மட்டுமே நம்பி இருக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.

இந்திய அரசின் நிதி பற்றாக்குறை

2020-2021ஆம் நிதி ஆண்டில் இந்திய அரசின் நிதி பற்றாக்குறை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவிகிதமாக உள்ளது என்று நிதியமைச்சர் தமது பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.

சென்ற ஆண்டு பட்ஜெட் உரையில் இது 3.5 சதவீதமாக மட்டுமே இலக்கு வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

2021-22ஆம் நிதியாண்டில் இந்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்க வேண்டும் என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ் நாட்டுக்கு பட்ஜெட்டில் என்ன திட்டங்கள்?

தமிழகத்தில், 3,500 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக 1.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மதுரை - கொல்லம் இடையிலான நெடுஞ்சாலை திட்டமும் இதில் அடக்கம்.

கேரளாவுக்கு 65,000 கோடி ரூபாயும் மேற்கு வங்க மாநிலத்துக்கு 25,000 கோடி ரூபாயும், அசாம் மாநிலத்துக்கு 34,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

தமிழ்நாட்டைப் போலவே இந்த மூன்று மாநிலங்களிலும் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

63,246 கோடி ரூபாய் செலவில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2021-2022 உரையில் அறிவித்துள்ளார்.

கடலோரத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழகத்தில் கடற்பாசி பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ஐந்து பெரிய மீன்பிடி துறைமுகங்கள் அமைப்பதற்காக நிதியமைச்சர் வெளியிட்ட ஊர்களின் பட்டியலில் சென்னையும் உள்ளது.

நிர்மலா சீதாராமனின் முக்கிய பட்ஜெட் அறிவிப்புகள் என்ன?

budget highlights in tamil

பட மூலாதாரம், Getty Images

  • இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக டிஜிட்டல் வழியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் இதற்காக 3,768 கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது.
  • பெட்ரோல் மீது லிட்டருக்கு 2.5 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 4 ரூபாயும் வேளாண் 'செஸ்' வரி விதிக்கப்படுகிறது.
  • ஆரம்ப, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரத் துறை சேவைகளுக்காக ஆத்மனிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா திட்டத்தின்கீழ் அடுத்த ஆறு ஆண்டுகளில் 64,180 கோடி ரூபாய் இந்திய அரசால் செலவிடப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • தூய்மை இந்தியா 2.0 நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும். அதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.41 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும்.
  • கொரோனா வைரஸ் தடுப்பூசிக்காக 35,000 கோடி ரூபாய் இந்திய அரசால் ஒதுக்கப்படுகிறது.
  • இந்த நிதியாண்டில் சுகாதாரம் மற்றும் உடல்நலம் சார்ந்த சேவைகளுக்காக 2.23 லட்சம் கோடி ரூபாய் செலவிட இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • 2.87 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புறப் பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்படும். இது இந்திய அரசின் குடிநீர் வழங்கல் திட்டமாகும்.
  • 2021-22ஆம் நிதி ஆண்டுக்கான இந்திய அரசின் மூலதன செலவினங்கள் அதிகரிக்கப்படுவதை நான் முன்மொழிகின்றேன். அதற்காக 5.54 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார் நிதியமைச்சர். சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு, அரசுக்கு வருவாய் தரக்கூடிய சொத்துகளை வாங்குதல் உள்ளிட்டவற்றுக்கு அரசால் செலவு செய்யப்படும் தொகை அரசின் மூலதனச் செலவினம் எனப்படும்.
  • வாகனங்களால் உண்டாகும் மாசை குறைக்க, தனிநபர் பயன்பாட்டுக்காக 20 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக 15 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை உரிமையாளர்கள் தாமாக முன்வந்து, அவற்றை உடைக்க ஒப்படைக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
  • நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மின் விநியோக நிறுவனங்களுக்கு சேர வேண்டிய தொகை வழங்குவதற்காக 3.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும்.
  • 20,000 கோடி ரூபாய் மூலதனத்தில் வளர்ச்சி மேம்பாட்டு நிதியளிப்பு நிறுவனம் நிறுவப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இது கடன் கொடுக்க வேண்டிய இலக்காக ஐந்து லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது.
  • பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக 20,000 கோடி ரூபாய் நிதியளிக்கப்படும்.
  • 2101-2022ஆம் நிதியாண்டில் இந்திய ரயில்வே துறைக்கு 1,10,055 கோடி ரூபாய் செலவிடப்படும். அதில் 1,07,100 கோடி ரூபாய் மூலதனச் செலவினமாக இருக்கும்.
  • எரிசக்தி துறைக்கு 3.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. எரிவாயு விநியோகச் சங்கிலியில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 100 நகரங்கள் இணைக்கப்படும்.
  • பொதுப் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் பேருந்துக்காக இந்திய அரசு 18,000 கோடி ரூபாய் நிதி வழங்கும்.
  • 10 லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் குடியிருக்கும் 42 நகர்ப்புற பகுதிகளில் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
  • 2021-2022ஆம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் திரட்ட இந்திய அரசு வைத்துள்ள இலக்கு 1.75 லட்சம் கோடி ரூபாய். எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கலாம் என்பது குறித்த புதிய பட்டியலை இந்திய அரசு தயார் செய்யும்.
  • காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு 49 சதவிகிதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
  • இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்கு விற்பனை இந்த ஆண்டு வரும் நிதியாண்டில் அறிவிக்கப்படும்.
  • 2021-2022ஆம் நிதியாண்டில் 16.5 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க வேண்டும் என இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது
  • கிராமப்புற உள்கட்டமைப்பு காண நிதி 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
  • சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் துறைக்கான ஒதுக்கீடு 15,700 கோடி ரூபாய். இது சென்ற பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.
  • இந்தியாவின் 32 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் அட்டை மூலம் பலன் பெறுபவர்களில் 69 கோடி பேர் அல்லது 86% பேர் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
  • புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் குறைந்த செலவில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கான திட்டங்கள் ஆகியவை வரிவிலக்கு பெறுவதற்கான காலக்கெடு மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது .
  • 45 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வாங்கியவர்கள் வரிவிலக்கு பெறுவதற்கான வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து 3.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: