பட்ஜெட் 2021: நரேந்திர மோதியின் தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா - ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களா?

பட மூலாதாரம், நரேந்திர மோதி
- எழுதியவர், ஜூபைர் அகமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
சமீபத்தில் நடந்த உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மெய்நிகர் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவை தற்சார்புள்ள நாடாக ஆக்குவதற்கான தனது உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்.
"இந்தியா தற்சார்பு பெறவேண்டும் என்ற தீர்மானத்துடன் முன்னேறி வருகிறது. தற்சார்புக்கான இந்தியாவின் குறிக்கோள் உலகமயமாக்கலை புதியவகையில் வலுப்படுத்தும். மேலும் இந்த இயக்கத்திற்கு தொழில் துறை 4.0 (நான்காவது தொழில்துறை புரட்சி) மூலம் உதவி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று பிரதமர் கூறினார்.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசின் இந்த 'கொள்கை மாற்றம்' முறையாக நாட்டை தன்னிறைவு பாதையில் இட்டுச்செல்லும் நோக்கம் உடையது. திங்களன்று சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் இதற்கு பிறகான முதல் பட்ஜெட்டாக இருக்கும்.
இந்த ஆண்டு மற்றும் அடுத்த சில ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கவனம் இந்தியாவை தன்னிறைவு பெறச்செய்வதில் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். பட்ஜெட்டில், இறக்குமதி செய்யும் பல பொருட்களின் மீதான வரி அதிகரிக்கப்படக்கூடும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க முடியும். தற்சார்பு இந்தியா என்பது நரேந்திர மோதி அரசின் குறிக்கோளாகும். இதை அடைவதற்கு அரசு இயந்திரங்கள் தீவிரமாக செயல்படுவதாகத் தெரிகிறது.
கடந்த ஆண்டு மே 12 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோதி 30 ஆண்டுகால தாராளவாத, உலகமயமாக்கல் பொருளாதார கொள்கைக்கு கடிவாளம் இட்டு நாட்டை தற்சார்பு பெறச்செய்யும் கொள்கை அறிவிப்பை வெளியிட்டார். 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டத்தை அவர் அறிவித்தார்.
அதை அவர் 'தற்சார்பு இந்தியா திட்டம்' (ஆத்மநிர்பார் பாரத்) என்று அழைத்தார். இந்த நிகழ்வின் மீது கவனத்தை ஈர்க்க பிரதமர் மோதி ஆங்கிலத்தில் ஒரு முழக்கத்தை அளித்தார். அது தான் "வோக்கல் ஃபார் லோக்கல் ".
உள்நாட்டில் பொருட்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை பிரதமர் வலியுறுத்தினார். தன்னிறைவு பெற்ற இந்தியா உலகின் விநியோகச் சங்கிலியில் வலுவான மற்றும் சிறந்த பங்கை வகிக்க முடியும் என்று அவர் நம்பினார்.

பட மூலாதாரம், Getty Images
டாவோஸ் மாநாட்டில் தனது உரையில் இதற்கு ஓர் உதாரணம் அளித்த அவர், இந்தியா, கொரோனாவுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது என்றும் அவை தேவையுள்ள பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
இந்தியா தற்சார்பை நோக்கி நகரும் நிலையில் கொரோனாவுக்கு எதிராக மேலும் தடுப்பூசிகளை அது உருவாக்கும் என்று அவர் கூறினார்.
தற்சார்பு இயக்கம்
கடந்த ஆண்டு மே 12 முதல், "தற்சார்பு இந்தியா" என்ற கருத்தை பிரசாரம் செய்யாத எந்த அமைச்சரும் மோதியின் அரசில் இருந்திருக்க மாட்டார்கள்.
இந்த இரண்டு வார்த்தைகளும் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளின் காதுகளின் தேன் மழை பொழிந்தன. நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் இதை ஓர் அரசு இயக்கமாக எடுத்துக்கொண்டு முன்னெடுத்து செல்கின்றனர்.
திங்களன்று சமர்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில், அரசின் பெரும்பாலான செலவுகள், சலுகைகள் மற்றும் புதிய கொள்கைகள் இந்தியாவை தற்சார்பு பெறச்செய்வதில் கவனம் செலுத்தும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்கான பிரதமரின் கனவு மற்றும் லட்சியத்தை நனவாக்கும் வகையிலான முன்முயற்சி கொண்ட ஒரு பட்ஜெட்டை சமர்பிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முழு முயற்சியை மேற்கொள்வார்.
கடந்த ஆண்டு மோதி அரசு 'உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை' என்ற ஊக்கத்திட்டத்தை அறிவித்தபோதே,நாட்டை தன்னிறைவு பெறச்செய்யும் முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், இந்திய நிறுவனங்கள் உள்நாட்டில் பொருட்கள் தயாரித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 4 முதல் 6 சதவிகிதம் வரை வரிச் சலுகை கிடைக்கும்.
மின்னணு மற்றும் மருந்து உற்பத்தி துறைகள் முதலில் இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. பின்னர் நவம்பர் 11 ம் தேதி, வேறு 10 துறைகளை இதன்கீழ் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்திற்கு அரசு 2.60 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்தது.
தொழில்துறையினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தொடர்ச்சியாக மூன்று ட்வீட்களை வெளியிட்டார். அதில் அவர் இந்த திட்டத்தை ஒரு கேம் சேஞ்சர் என்று அழைத்தார். ஒரு ட்வீட்டில், "நான் 'கேம்-சேஞ்சர்' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் இது பொருத்தமானது. என்னைப் பொருத்தவரை திட்டத்தின் இயக்கவியலை விட முக்கியமானது என்னவென்றால், தொழில்துறை மீதான அணுகுமுறையில் இது ஒரு வியத்தகு மாற்றம் " என்று தெரிவித்திருந்தார்.
ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
பல நிறுவனங்களும், தொழிலதிபர்களும் தற்சார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா என்ற இரண்டு திட்டங்களும் ஒன்றுதான் என்பது போல அந்த இரண்டு சொற்களையும் ஒரே மூச்சில் பயன்படுத்துகிறார்கள்.
இது கவலைக்குரிய விஷயம். 2014 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நரேந்திர மோதி செங்கோட்டையில் அறிவித்த 'மேக் இன் இந்தியா' , ஒரு தோல்வியடைந்த முயற்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் "வாருங்கள், இந்தியாவில் உருவாக்குங்கள்" என்று பிரதமர் கூறினார். இந்தியாவை சீனா போன்ற உலகின் உற்பத்தி மையமாக மாற்ற அவர் விரும்பினார்.
ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில், இந்தத் திட்டம் காகிதத்தில்தான் அதிகமாக உள்ளது.
"கடந்த ஆறு ஆண்டுகளில் உற்பத்தித் துறையின் முக்கிய அளவுகோல்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை" என்று மேக் இன் இந்தியாவின் தோல்விகளை சுட்டிக்காட்டும் சிட்டி குழும ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கிறது.
அறிக்கையில் தோல்விக்கான காரணங்கள் குறித்துத் தெரிவிக்கையில், குறிப்பிட்ட துறையில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, 25 க்கும் மேற்பட்ட துறைகளை அதன் எல்லைக்குள் கொண்டுவருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது மருந்து உற்பத்தி,மின்னணு, பாதுகாப்பு, உணவு மற்றும் வாகன உற்பத்தி போன்ற தொழில்கள் மட்டுமே தற்சார்பு இந்தியா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
பொதுவாக, தற்சார்பு இந்தியா திட்டம் மற்றும் மேக் இன் இந்தியா திட்டம் ஒரே போன்ற திட்டங்கள் என்றும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்கள் இவை என்றும் வல்லுநர்கள் நம்புகின்றனர். ஆனால் மேக் இன் இந்தியாவை விட தன்னிறைவு இந்தியா ஒரு சிறந்த யோசனை என்று பல வல்லுநர்கள் கூறுகின்றனர். அது வெற்றிகரமாக அமையுமா இல்லையா என்பது சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரியவரும்.
தற்சார்பு இந்தியாவா, லைஸென்ஸ் ஆட்சி இந்தியாவா?
தற்சார்பு இந்தியா இயக்கத்தில் பல குறைபாடுகள் இருப்பதாக சிலர் கருதுகின்றனர். அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் ஊடகங்களுடன் பேசியபோது, தற்சார்பு இந்தியா இயக்கம் குறித்து கவலை தெரிவித்ததோடு, இது சுயபாதுகாப்புவாத சகாப்தத்திற்கு திரும்புவதற்கான முயற்சி என்றும் கூறினார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டிற்குள் நுழைவதை அரசு தடுத்த காலத்தை அவர் குறிப்பிடுகிறார். இந்திய நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க இறக்குமதியில் சுங்கவரி அதிகமாக இருந்தது. அவர்கள் போட்டியை எதிர்கொள்ள வேண்டியதில்லை. அந்த நேரத்தில், உள்நாட்டு பொருட்களின் விலை அதிகமாக இருந்தது மற்றும் தரம் குறைவாக இருந்தது.
ஊழல் அதிகமாக இருந்தது. மற்றும் ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்க பல துறைகளின் ஒப்புதல் மற்றும் உரிமத்தைப் பெற வேண்டியிருந்தது. இதன் காரணமாக புதிய திட்டத்தைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தியா அந்த சகாப்தத்திற்கு திரும்புகிறதோ என்று அரவிந்த் சுப்பிரமணியம் அஞ்சுகிறார்.
தற்சார்பு இந்தியா பற்றிக் குறிப்பிடுகையில், "இது பொருளாதாரம் குறித்த மூன்று தசாப்தங்களின் ஒருமித்த கருத்தை மாற்றியமைக்கிறது. நமது பொருளாதாரத்தின் ஒருமித்த கருத்து என்னவென்றால், அதை நாம் படிப்படியாக வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறப்போம் என்பதுதான். அதுதான் நமது மேம்பாட்டின் அடிப்படை. தற்சார்பு பெறுவதன் மூலம் நமது பொருளாதாரம் வேகமாக வளரும் என்று நமது கொள்கை வகுப்பாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தாராளமயமாக்கல் ஒரு சிறந்த வழி என்பதற்கு எதிர்மறையாக இது இருக்கிறது," என்று கூறுகிறார்.
போட்டித் திறனை முடிவுக்கு கொண்டுவந்துவிடுமா?
'பேட் மனி' உட்பட பல புத்தகங்களின் ஆசிரியரும் பொருளாதார வல்லுனருமான விவேக் கவுல், தற்சார்பு இந்தியா திட்டத்தின்பால் பெரிதாக ஈர்க்கப்படவில்லை. அவர் அதைப் பற்றி கவலைப்படுகிறார்.
"தற்சார்பு இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் வழி, தவிர்க்க முடியாத அதிக வரியை (இறக்குமதி மீது) சுட்டிக்காட்டுகிறது. உள்ளூர் பொருட்களை தயாரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதானது, இந்தியர்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தும்," என்று விவேக் கவுல் கூறுகிறார்.
"மறுபுறம், உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக இந்திய நிறுவனங்கள் ஆகவேண்டும் என்றும் கூறப்படுகிறது. போட்டி இல்லாமல் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக நீங்கள் எவ்வாறு மாற முடியும்? நீங்கள் நாட்டிற்குள் போட்டியிடவில்லை என்றால், நீங்கள் எவ்வாறு போட்டி திறனுடன் இருக்கமுடியும்? "என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
தற்சார்பு என்பது சுயபாதுகாப்புவாதம் என்றால், இந்தியாவுக்கு பல பிரச்சனைகள் இருக்கும் என்று விவேக் கவுல் குறிப்பிடுகிறார்.
"1991-க்கு முன்னர், இந்தியாவில் உள்ள இந்திய நிறுவனங்கள் உள்நாட்டு சந்தைக்கு உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்பட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் தரம் மோசமாக இருந்தது, விலையும் அதிகம். ஏனெனில் போட்டி இல்லை. 'லைசென்ஸ்' ஆட்சி இருந்தது, ஊழல் நிலவியது. 1991-ல் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது, நாம் அதிக முன்னேற்றம் கண்டோம். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், "என்று விவேக் கவுல் சுட்டிக்காட்டினார்.
ஆனால் இன்றைய இந்தியா லைஸென்ஸ் ஆட்சி காலத்திலிருந்து வேறுபட்டது என்றும் அந்த சகாப்தத்திற்கு நாம் மீண்டும் செல்ல மாட்டோம் என்றும் சில வல்லுநர்கள் நம்புகின்றனர்.
இந்தியா இன்று உணவில் தன்னிறைவு பெற்றுள்ளது. தொழில்நுட்பத்தில் பல நாடுகளை விட மிகவும் முன்னணியில் உள்ளது. மின்னணு பொருட்களின் உற்பத்தி இந்திய உற்பத்தி துறையின் வெற்றிக் கதைகளில் ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏற்றுமதி 6.4 பில்லியன் டாலரிலிருந்து 11.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
தற்சார்பு என்பது சீன இறக்குமதிக்கு எதிரான பிரசாரமா?
இந்தியாவின் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதாலும், சீனப் பொருட்கள் பொதுவாக புறக்கணிக்கப்படுவதாலும், சீனாவிற்கு எதிராக ஏராளமான அதிருப்தி நிலவுகின்ற இந்த நேரத்தில் தற்சார்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவிடம் இருப்பதாக இந்திய அரசு கவலை கொண்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில், சீனாவிலிருந்து இறக்குமதி 70 பில்லியன் டாலர். இதை கணிசமாகக் குறைக்க இந்தியா விரும்புகிறது.
சீன பொருட்கள் புறக்கணிப்பிற்காக இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை என்று டெல்லியில் உள்ள ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்டின் சீன விவகாரங்களில் நிபுணர் டாக்டர் பைசல் அஹ்மத் கூறுகிறார்.
"தற்சார்பு என்பது தேசிய போட்டித்தன்மையின் நன்மைகளை ஊக்குவிப்பதாகும். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இந்தக் கருத்து கொள்கை அளவில் இருந்தபோதிலும், தற்போது தற்சார்பு இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுநோய் பரவியுள்ள இந்த காலகட்டத்தில் உலகளாவிய விநியோகச் சங்கிலியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு எதிரானது அல்ல. இயந்திரங்கள், மின்னணு பொருட்கள், பாதுகாப்பு உற்பத்தி, கனரக தொழில், உணவு பதப்படுத்துதல் மற்றும் பிற முக்கிய துறைகளில் ஊக்கம் அளிப்பதற்கானதாகும். இதன் நோக்கம், வளர்ச்சிக்கு வழிவகுத்து இந்தத்துறைகளில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்யக்கூடிய உள்நாட்டு உற்பத்தி திறன்களை ஊக்குவித்தல் ஆகும்,"என்று அவர் மேலும் கூறினார்.
ஆனால், நாடு முழுவதும் இருந்து ஆறு கோடி வர்த்தகர்களை உள்ளடக்கிய அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம் (சிஐஐடி), சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதை நோக்கமாகக் கொண்டு தற்சார்பு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக "இந்தியன் கூட்ஸ் அவர் பிரைட்" ( இந்திய பொருட்கள் எங்கள் பெருமை) என்ற பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.
இதன் நோக்கம், சீன பொருட்களை புறக்கணித்தல் மற்றும் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற ஆனால் இந்தியாவில் எளிதில் தயாரிக்கக்கூடிய 3,000 பொருட்களின் பட்டியலைத் இது தயாரித்துள்ளது.
இந்த பட்டியலில் பொம்மைகள், சமையலறை பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்கள் உள்ளன. சங்கத்தின் குறிக்கோள் என்னவென்றால், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன இறக்குமதியைக் குறைப்பதுதான். ஆனால் இந்தப் பணி அவ்வளவு சுலபமாக இருக்காது. பண்டிகை காலத்தின்போது சீன பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது
தேசியவாதம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் - இது ஒரு கருத்தியல் மாற்றமா?
மறுபுறம், சில விமர்சகர்கள் தற்சார்பு இயக்கத்தை,மோதி அரசின் தேசியவாதம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் பல நாடுகள் பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனமாகி, உலகமயமாக்கலுக்கு பதிலாக தங்கள் நாட்டிற்குள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்கத் தொடங்கின என்று இஸ்ரேலிய எழுத்தாளர் நாடவ் அயால் ' தி ரிவோல்ட் அகெயின்ஸ்ட் க்ளோபலைசேஷன்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அவரைப் பொறுத்தவரை, தேசியவாதத்தின் பரவலால் உலகமயமாக்கல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஒரு பின்னடைவைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக பல நாடுகள் உள்நாட்டு பொருட்கள் மற்றும் உள்நாட்டு சந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
பிரதமர் மோதி மே 12ஆம் தேதி தற்சார்பு இந்தியா திட்டத்தை அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இதே கருத்தை ஆதரித்திருந்தார். ஆரம்பத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ்-இன் யோசனை என்னவென்றால், ஒவ்வொரு துறையிலும் நாடு தன்னிறைவு பெற வேண்டும் என்பதுதான்.
தற்சார்பு - இந்தியாவின் எதிர்காலம்
தற்சார்பு இந்தியா என்பது இந்திய மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று இந்திய தொழில் மற்றும் வர்த்தகத்தின் முக்கியசிறப்பு அமைப்பான அசோசாம் (இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ்) கருதுகிறது. அதை முழுமையாக செயல்படுத்த சில ஆண்டுகள் ஆகும். ஆனால் இது ஒரு நல்ல முன்முயற்சி என்று கூறி அசோசாம் அதை வரவேற்றுள்ளது.
"இந்தியாவில் திறமை மற்றும் திறன்களுக்கு பஞ்சமில்லை. இந்திய நிறுவனங்களுக்கு சரியான ஊக்கம் வழங்கப்பட்டால், அவை வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடமுடியும். 'வோக்கல் ஃபார் லோக்கல்' மூலம் இந்தியாவை உள்நாட்டு உற்பத்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்வதே எங்கள் நோக்கம் ," என்று தற்சார்பு இந்தியா குறித்து ஜனவரி 28 ம் தேதி நடைபெற்ற வலைதள மாநாட்டில் இந்த அமைப்பு தெரிவித்தது.
ஆனால் இப்போது, மின்னணு மற்றும் வேறு சில தொழில்களில் இந்திய நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் குறிப்பாக சீன நிறுவனங்களுடன் போட்டியிடுவதில் நிறைய சவால்களை எதிர்கொள்கின்றன.
உதாரணமாக ஏர் கண்டிஷனிங் துறையை எடுத்துக் கொள்வோம். கடந்த ஆண்டு அக்டோபர் வரை, இந்தியாவின் மொத்த ஏர் கண்டிஷனிங் யூனிட் நுகர்வுகளில் 35 சதவிகிதம் சீனாவிலிருந்து வந்தது. அதேபோல் மொபைல் போன்கள், டிவி செட்கள் போன்றவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் ஏ.சி. இறக்குமதி மீது அரசு தடை விதித்துள்ளது.
உற்பத்தித் திறனை அதிகரிக்க இந்திய நிறுவனங்கள் இப்போது புதிய தொழிற்சாலைகளை விரிவுபடுத்துகின்றன. ஆனால் அவைகள் இப்போதும் சீனாவிலிருந்துதான் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. மூலப்பொருட்களில் தன்னிறைவு சில ஆண்டுகளில் அடையப்படலாம். ஆனால் கேள்வி என்னவென்றால், போட்டி இல்லாத நிலையில், அதிக விலை மற்றும் தரம் குறையும் அபாயம் உள்ளது. இதை இந்திய நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் அவர்களிடம் மாற்று வழி ஏதும் இருக்காது.
பிற செய்திகள்:
- பெங்களூரு மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் - அதிமுக கொடியால் சர்ச்சை
- தமிழர்களின் சூழலியல் அறிவை பறைசாற்றும் சங்க இலக்கியங்கள்
- "வெளிநாட்டவர்களுக்கும் இனி குடியுரிமை" - ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பால் யாருக்கு பயன்?
- பாக்ஸிங் க்ளவுஸ் வாங்க காசில்லை; முதல் போட்டியிலேயே தங்கம் - மஞ்சு ராணியின் கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













