உலக சுற்றுச்சூழல் தினம்: மரம் நடுவது எப்படி - தெரிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள்

மரம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஹெலன் ப்ரிக்ஸ்
    • பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்

மரம் நடுவதற்கான 10 விதிமுறைகளை அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதைக் கவனமாக பின்பற்றுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.

மரம் நடுவது நன்மை தரும்; பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும். ஆனால் இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் என்கின்றனர் லண்டனில் உள்ள க்யூ தாவரவியல் பூங்காவை சேர்ந்த நிபுணர்கள்.

அதேபோல மரம் நடுவதற்கு முன் நாம் இருக்கும் காடுகளை அழிக்காமல் காப்பதும் முக்கியமான ஒன்று. பூமியில் வாழ்வதற்கு காடுகள் மிக அவசியம்.

உலகில் உள்ள நான்கில் மூன்று பங்கு மரங்கள், உயிரினங்களுக்குக் காடுகள்தான் இருப்பிடம். கரியமில வாயுவை உள்வாங்கி, உணவு, எரிபொருள் மற்றும் மருந்து எல்லாம் அளித்து வருவது காடுகள்தான்.

ஆனால் ஒவ்வோர் ஆண்டும் பெரும் பங்கிலான காடுகள் அழிக்கப்படுகின்றன.

"இந்த பூமியின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் சரியான மரங்களை தகுந்த இடங்களில் நட வேண்டும்," என்கிறார் லண்டனில் உள்ள சர்வதேச தாவரவியல் தோட்ட பாதுகாப்பை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பால் ஸ்மித்.

உலகம் முழுவதும் அழிக்கப்பட்ட காடுகளை ஈடுகட்ட மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் மரங்களை அதற்கு தகுந்த இடங்களில் நடவில்லை என்றால் அது மோசமான விளைவையே தரும்.

இதோ மரம் நடுவதற்கு முன் ஒருவர் மனதில் வைத்து கொள்ள முக்கிய விதிகள்

1. முதலில் இருக்கும் காட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்

காடுகள் எவ்வாறு உள்ளதோ அதை அப்படியே விட்டுவிட வேண்டும். அதுதான் முதல் விதி. எந்த மாற்றமும் செய்யப்படாத பழைய காடுகள் அதிகளவிலான கரியமில வாயுவை உள்வாங்குகின்றன.

நெருப்பு, புயல் மற்றும் வறட்சியை வலுவாக தாக்குபிடிக்கின்றன. "வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் காடுகள் அழிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் அழுத்தமாக சொல்லி வருகிறோம். மேலும் இருக்கும் காடுகளை பாதுகாப்பது நமது தலையாய கடமை," என்கிறார் லண்டன் க்யூ தாவரவியல் பூங்காவை சேர்ந்த பேராசிரியர் அலெக்சாண்ட்ரே.

2. உள்ளூர் மக்களை சேர்த்துக் கொள்ளுங்கள்

மரக்கன்றுகள் நடும் விழாக்களில் அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்களை சேர்த்துக் கொள்வது அந்த திட்டத்தின் வெற்றியை உறுதி செய்யும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உள்ளூர் மக்கள்தான் அந்த காடுகளையும், மரங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அதேபோல அந்த பகுதியில் நடப்படும் மரங்கள் அந்த பகுதியின் மக்களுக்குத்தான் முதலில் அதிக நன்மையை தரும்.

3. பல நோக்கங்கள் வேண்டும்

ஆந்தை

பட மூலாதாரம், Getty Images

மரம் நடுவது என்பதை ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்காமல், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான தீர்வு, பல்லுயிர் பெருக்கம், பொருளாதார நன்மைகள் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4. சரியான இடத்தை தேர்ந்தெடுங்கள்

புல்தரை அல்லது அதிக ஈரத்தன்மை கொண்ட இடங்களில் மரங்களை நடுவதைவிட முன்பு காடாக இருந்து அழிக்கப்பட்ட இடங்களில் மரங்களை நடுங்கள்.

5. தானாகவளரும் மரங்களை வளரவிடுங்கள்

அதேபோன்று புதியதாக ஒரு மரக்கன்றை நட்டு அதை வளர்ப்பதைக் காட்டிலும் தானாக வளரும் மரங்களை கவனித்துக் கொள்ளுங்கள். இது பலவிதத்தில் செலவுகளை குறைக்கும். மேலும் சிறந்த பலனை தரும் ஒன்றாகவும் அது இருக்கும்.

6. சரியான மரத்தை தேர்ந்தெடுங்கள்

மரங்களை நடத் திட்டமிடும்போதே சரியான மரங்களை தேர்வு செய்வது அவசியம். எந்த பகுதியில் மரம் நட திட்டமிட்டுள்ளீர்களோ அந்த பகுதியில் இயல்பாக வளரும் மரங்களை தேர்வு செய்யுங்கள்.

அதில் அரிதான் மரங்களையும், பொருளாதார ரீதியில் நன்மை பயக்கும் மரங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த பகுதியை புதியதாக ஆக்கிரமிக்கும் தன்மை கொண்ட மரங்களை தேர்வு செய்யாதிருங்கள்.

7. பருவநிலைகளுக்கு ஏற்றாற்போல

உலக சுற்றுச்சூழல் தினம்

பட மூலாதாரம், Getty Images

ஒரு பகுதியில் மரம் நடத் திட்டமிடும்போது அந்த பகுதியின் பருவநிலை குறித்தும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே அந்த பகுதியின் பருவநிலைகளுக்குத் தகுந்த மர விதைகளை தேர்வு செய்ய வேண்டும். மேலும் அது எதிர்காலத்தில் பருவநிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஒத்துப் போவதாகவும் இருக்க வேண்டும்.

8. எங்கு வாங்குவதெனதிட்டமிடுங்கள்

அந்த உள்ளூர் பகுதியில் வளரக்கூடிய மரம் என்றால் அதை வேறு எங்கோ சென்று வாங்குவதை காட்டிலும் அதை அந்த உள்ளூர் மக்களுடன் இணைந்து பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.

9. உள்ளூர்வாசிகள் அறிவு + அறிவியல்

உள்ளூர்வாசிகள் சொல்வதுடன் அறிவியல் தகவல்களையும் இணைத்துக் கொண்டு யோசித்துத் திட்டமிடுங்கள். நீங்கள் பெருமளவில் மரம் நடத் திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் அதை முதலில் சிறிய அளவில் செய்து பழகுங்கள்.

10. பொருளாதார பலன்கள்

மரங்கள் நடப்படும் நடவடிக்கைகள் தொடர வேண்டுமானால், அந்தப் பகுதியில் இருக்கும் ஏழைகள் உள்ளிட்ட அனைவருக்கும் அவற்றின் மூலம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொருளாதார ஆதாயம் கிடைக்க வேண்டும்.

காணொளிக் குறிப்பு, மரபியல் குறைபாட்டோடு விந்து தானம் செய்த நபர்: வழக்கத்திற்கு மாறாக உத்தரவிட்ட நீதிபதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: