நாடாளுமன்ற அமளி: கைகோர்த்த மோதி அணி - பிளவுபட்ட எதிர்கட்சிகள் - நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான செவ்வாய்கிழமை 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை மாநிலங்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
முந்தைய மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி இரண்டு நாட்களில் எதிர்கட்சிகளை சேர்ந்த 12 உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி அவர்களை, நடப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளன்று அவை நடவடிக்கையில் பங்கேற்காதவாறு இடைநீக்கம் செய்வதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு எதிர்கட்சி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டபோதும் அதை வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்.
அவரது நடவடிக்கையை நியாயப்படுத்திய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அவையின் கண்ணியத்தை காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
"மழைக்கால கூட்டத்தொடரில் நாங்கள் கண்கூடாகப் பார்த்த ஒழுங்கீனமான செயல்பாடு முன்னெப்போதும் இல்லாதது. சில எதிர்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டதுடன், விசில் அடித்தும் அமளியில் ஈடுபட்டனர். எம்பி ஒருவர் எல்இடி திரையை உடைக்க முயன்றார்," என்று பியூஷ் கோயல் கூறினார்.
"மழைக்கால கூட்டத்தொடரின் போது சில எம்.பி.க்கள் பெண்கள் மார்ஷல்களை தாக்கினர். அவையின் புனிதத்தையும் கண்ணியத்தையும் காக்கவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது," என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
டிஎம்சி அறிவித்த போராட்டம்
மறுபுறம், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டெரெக் ஓ பிரெய்ன், குளிர்கால கூட்டத்தொடர் முடியும் வரை, நாடாளுமன்ற கட்டடத்தின் முகப்பு வாயில் முன்பாக உள்ள காந்தி சிலை முன், எங்களுடைய கட்சி எம்.பி.,க்கள், டோலா சென் மற்றும் சாந்தா சேத்ரி, தினமும் அமர்ந்து எங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவர் என தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெரெக் ஓ பிரெய்ன், "எங்கள் இரு எம்.பி.க்களும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 23 வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மகாத்மா காந்தி சிலை முன் அமர்ந்திருப்பார்கள். மற்ற கட்சிகளின் எம்.பி.க்களையும் அழைத்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஆதரவு தெரிவிக்கக் கோருவோம்," என்று கூறினார்.
இந்த நிலையில், இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் இதே விவகாரத்தை திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினர். இதனால் காலையிலும் பிற்பகலுக்குப் பிறகும் அவையில் அலுவல்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
இதையடுத்து அவை நடவடிக்கைகள், புதன்கிழமை காலைவரை ஒத்திவைக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, காலையில் மாநிலங்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்க நடவடிக்கையை எதிர்த்து உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தமது நடவடிக்கையை திரும்பப் பெற முடியாது என்று திட்டவட்டாக கூறினார்.
மறுபுறம், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். ஆனால், அது குறித்து அரசுதரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்காத நிலையில், இரு அவைகளில் இருந்தும் எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பணிகள் துவங்கிய போதும், எதிர்கட்சிகளின் அமளி நிற்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டு புதன்கிழமை காலை 11 மணி வரை மாநிலங்களவை நடவடிக்கைகளை அதன் தலைவர் வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார்.
வெங்கய்ய நாயுடுவை சந்தித்த எதிர்கட்சி தலைவர்கள்
இதற்கிடையே, மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான எட்டு எதிர்கட்சிகளின் தலைவர்கள் வெங்கையா நாயுடுவை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இது குறித்து பின்னர் கருத்து தெரிவித்த வெங்கய்ய நாயுடு, "தவறு செய்த எம்பிக்கள் தங்கள் மோசமான நடத்தைக்கு கடும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யாதவரை எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற முடியாது," என்று கூறினார்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மல்லிகார்ஜுன் கார்கே அறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநிலங்களவையில் திங்கட்கிழமை எம்.பி.க்கள் இடைநீக்கம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதே சமயம், நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே மூன்று வேளாண் மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தில் விவாதம் தேவை என்று வலியுறுத்தி திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தர்னாவில் ஈடுபட்டனர். ஆனால், அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் விவகாரத்தில் இந்த கட்சிகளின் உறுப்பினர்கள் சேர்ந்து குரல் கொடுக்கவில்லை. இது காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே இணக்கமற்ற நிலை இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக சில எம்.பிக்கள் குறிப்பிட்டனர்.
இரு வேறு விவகாரங்களில் எதிர்கட்சிகள் தீவிரமாக இருந்ததால், அவற்றுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்றும் சிலர் தெரிவித்தனர். இதேவேளை, எம்.பிக்கள் இடை நீக்க விவகாரத்தில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்.பிக்கள் அனைவரும் ஒரே அணியாக செயல்பட்டு எதிர்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளை விவரித்து ஊடகங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக பேட்டி கொடுத்தனர்.
முழு விஷயம் என்ன?
மாநிலங்களவையில் குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை, அவைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, 12 எம்.பி.க்களை அவையின் மீதமுள்ள நாட்களுக்கு இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.
தற்போதைய மாநிலங்களவை கூட்டத்தொடர் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில், இடை நீக்கத்தை எதிர்கொண்ட எம்.பிக்களில் அதிகபட்சமாக காங்கிரஸிலிருந்து 6 பேரும், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சிவசேனாவிலிருந்து தலா இரண்டு பேரும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சியில் இருந்து தலா ஒருவரும் அடங்குவர்.
ஆகஸ்ட் 11இல் என்ன நடந்தது?

பட மூலாதாரம், RSTV
- டோலா சென் (டிஎம்சி) சக எம்பி சாந்தா சேத்ரியின் கழுத்தில் மடிக்கப்பட்ட சால்வையை தொங்கும் வளையத்தை (கயிற்றைப் போன்றது) போல மாட்டினார்.
மாநிலங்களவைத் தலைவர் மேஜையின் மையப் பகுதியை வளையம் போல சூழ்ந்து கொண்டு அவர் குரல் எழுப்பினார்கள்.
- காங்கிரஸின் எம்.பி., பூலோ தேவி நேதம், அவை அலுவல் குறிப்புகள் இடம்பெற்ற காகிதங்களை கிழித்து, மாநிலங்களவை தலைவர் மேஜைக்கு கீழே அமர்ந்திருந்த செகரட்டரி ஜெனரலை நோக்கி வீசினார்.
- காங்கிரஸ் எம்.பி சாயா வர்மா சில காகிதங்களைக் கிழித்து அவையின் மேஜையை நோக்கி வீசினார்.
- சிபிஐ எம்பிக்கள் பினாய் விஸ்வம் & எளமரம் கரீம் (நாற்காலியின் வலது பக்கத்திலிருந்து), ராஜ்மணி படேல், சிவசேனாவின் அனில் தேசாய் (நாற்காலியின் இடது பக்கத்திலிருந்து) ஆகியோர் மேஜையில் வைக்கப்பட்டிருந்த காகிதங்கள் / கோப்புறைகளைப் பறித்தனர்.
- காங்கிரஸின் அகிலேஷ் பிரசாத் சிங், அவைக் காவலர்கள் மற்றும் மேஜைப் பகுதியை பதிவு செய்து கொண்டிருந்தார்.
- மாநிலங்களவை தலைவர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் தங்களுடைய இருக்கையில் அமர்வதற்கு தலைவர் அறையிலிருந்து வருவதை டோலா சென் தடுத்தார்.
- டோலா சென் மாநிலங்களவை அவையின் பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தள்ளியதுகாட்சியில் பதிவானது.
- காங்கிரஸின் நசீர் உசேன்ஸ சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் காகிதங்களைக் கிழித்து அவையின் மேசையை நோக்கி வீசினர்.
- நசீர் உசேன் முதலில் சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ரெளட், சபையின் மேஜையைச் சுற்றியிருந்த அவைக் காவலர்களை தள்ளினார். அவர்களுடன் இளமாரம் கரீம், ரிபுன் போரா, பினாய் விஸ்வம், அகிலேஷ் பிரசாத் சிங் உள்ளிட்ட எம்.பி.க்களும் இணைந்தனர்.
- நாற்காலியின் இடது பக்கத்தில் நிறுவப்பட்ட எல்இடி டிவி ஸ்டாண்டில் காங்கிரஸின் ரிபுன் போரா ஏறினார்
- இளமாரம் கரீம் ஒரு ஆண் மார்ஷலின் கழுத்தை தாக்கும் வகையில் தள்ளினார்.
- ஒரு பெண் காவலரை பூலோ தேவி நேதம், சாயா வர்மா ஆகியோர் இழுத்துச் சென்றனர். அவையின் மையப்பகுதியில் அவரை தாக்க முற்பட்டனர்.
- நசீர் ஹுசைன் மற்றும் இளமாரம் கரீம் பெண் காவலரை பாதுகாக்க முயன்ற ஒரு ஆண் மார்ஷலின் தோளைப் பிடித்து அவரை எம்.பிக்கள் வளையத்திலிருந்து இருந்து வெளியே தள்ள முயன்றனர்.
இந்த எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கடிதம் எழுதினார்.
அந்த நிகழ்வை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவு நாளில், "நமது நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் மிகவும் கண்டிக்கத்தக்க மற்றும் வெட்கக்கேடான நிகழ்வு" என்று வெங்கய்ய நாயுடு கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
- "ஒமிக்ரான் திரிபு: உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்" WHO எச்சரிக்கை
- வேளாண் சட்ட வாபஸ் மசோதா: எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் - உறுதிகாட்டும் விவசாயிகள்
- 'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
- வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான் திரிபா?
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













