ஜி.எஸ்.டி மூலமாக ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை சாத்தியமாகி உள்ளது: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

பட மூலாதாரம், Getty Images
இந்திய மக்கள் பெருமை கொள்ளும் விதமாக இஸ்ரோ பல சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
இந்திய நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை நாட்டு மக்களிடம் உரையாற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். அவர் உரையின் முக்கிய தகவல்கள்:
- இந்திய மக்களுக்கு 71வது குடியரசு தின வாழ்த்துகளைக் கூறிய ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களே நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர் எனக் கூறினார்.
- இந்திய மக்கள் பெருமை கொள்ளும் விதமாக இஸ்ரோ பல சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது. தனது மிஷன் ககன்யான் திட்டத்தில் முன்னேறி வருகிறது. அதோடு இல்லாமல் இந்த ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்பும் கலம் தொடர்பான திட்டம் விரைந்து செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனக் கூறினார்.
- அனைத்து மக்களுக்கும் மருத்துவம் மற்றும் கல்வி கிடைப்பதிலேயே நாட்டின் முன்னேற்றம் அடங்கியுள்ளது. அவ்வாறு இருக்க மத்திய அரசின் பல திட்டங்கள் மூலம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைத்துள்ளது எனவும் கூறியிருந்தார். அதேபோல் கல்விமுறையில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் அதே வேளையில், கல்வியமைப்பில் உலகத் தரத்தை எட்ட, நாம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
- இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளும் வீரர்கள் பல்வேறு வகையான விளையாட்டுகளில் ஏற்கனவே நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் எனக்கூறி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
- அரசின் ஒவ்வொரு கொள்கைத்திட்டத்தின் பின்புலத்திலும், ஏழைகளின் நலன்களோடு கூடவே, அனைத்திலும் நாட்டிற்கே முதன்மை என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது. ஜி.எஸ்.டியை அமல் செய்ததன் வாயிலாக ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை என்ற குறிக்கோளுக்கு வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
- நாட்டில் பல்வேறு சாகசம் மற்றும் எண்ணற்ற தியாகம் செய்யும் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
- மேலும் நாட்டின் நலனில் பங்குகொள்ளும் விதமாக அறிவியல் மற்றும் புதுமைகள் படைத்தல், விவசாயம் மற்றும் வனவளங்கள் மேம்பாடு, கல்வி, உடல்நலம், விளையாட்டுக்கள், பண்டைய கைவினைத்திறத்தை மீண்டும் பிரபலமாக்குதல், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரப் பங்களிப்பு, ஏழைகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான வழிவகைகளை ஏற்படுத்தல் போன்ற பல துறைகளில் மகத்தான பங்களிப்பை மக்களில் சிலர் அளிக்கின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக, சிலரை குறிப்பிட்டிருந்தார். ஜம்மு கஷ்மீரில் ஆரிஃபா ஜானுக்கு நமதா தஸ்தகாரீ என்ற கைவினைத் திறனுக்குப் புத்துயிர் அளிப்பதற்காகவும், தெலங்கானாவின் ரத்னாவலீ கோட்டப்பள்ளிக்கு தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததற்காகவும், கேரளத்தின் தேவகீ அம்மாவுக்கு தனது தனிப்பட்ட முயற்சியால் வன வளங்களை மேம்படுத்துவதற்காகவும், மணிப்பூரைச் சேர்ந்த ஜாமகோஜாங் மிஸாவோவுக்கு சமூக மேம்பாட்டிற்கான முன்னெடுத்ததாகவும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாபர் அலிக்கு சிறுவயது முதல் நலிவுற்ற சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியளிப்பதற்காகவும் பாரட்டுகளைத் தெரிவித்தார்.
- இன்றைய இளைஞர்களுக்கு தகவல்கள் கிடைப்பதில் முழு சுதந்திரம் இருக்கிறது. அவர்களுக்கு நாடு அனைத்தையும் விட முதல் இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் புதிய இந்தியா உருவாகிறது எனக் கூறியுள்ளார்.
- பாபாசாஹேப் அம்பேத்கர் கூறியதுபோல அரசியலமைப்பு சட்ட்த்தின் துணையுடன் சமூக மற்றும் பொருளாதாரக் குறிக்கோள்களை எட்ட வேண்டும் எனக் கூறினார். மேலும் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதுவதால் பிற நாடுகளுடனான உறவு மேம்பட்டுள்ளது எனவும் கூறினார்.
- வெளிநாட்டில் வாழும் இந்திய மக்கள் நாட்டின் முன்னேற்றத்தில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:









