அ.தி.மு.கவை கைப்பற்ற நினைக்கும் சசிகலா - ஆடியோ ரிலீஸின் அடுத்தகட்ட முயற்சிகள் என்னென்ன?

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அ.தி.மு.க தொண்டர்களுடனான ஆடியோ பேச்சுகளின் அடுத்தகட்டமாக தொலைக்காட்சியில் பேசுவதற்கு சசிகலா தயாராகி வருகிறார். `அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்பேன்' எனவும் தொண்டர்களிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார். சசிகலாவின் எண்ணம் ஈடேறுமா? அவர் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலா பேசி வருகிறார். இந்த ஆடியோ உரையாடல்கள், எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் கொதிப்பை அதிகப்படுத்தியுள்ளன.

ஒருகட்டத்தில் சசிகலாவுடன் பேசிய கள்ளக்குறிச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆனந்தன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி சின்னச்சாமி உள்பட 15 பேர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டனர். அ.தி.மு.க தலைமையின் எச்சரிக்கையை மீறி சசிகலாவிடம் பேசி வரும் நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர்.

சசிகலாவின் ஆடியோ உரையாடல் தொடர்பாக பேசிய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும், `சசிகலாவின் எண்ணம் ஈடேறப் போவதில்லை.

அவர் ஒருபோதும் அ.தி.மு.கவுக்குள் நுழைய முடியாது. தன்னுடன் இருக்கும் ஒரு சிலரை தேர்வு செய்து வைத்துக் கொண்டு இதுபோன்ற குழப்பத்தை சசிகலா செய்து வருகிறார். இந்தக் குழப்பம் நிச்சயமாக வெற்றியடையப் போவதில்லை. இதன் மூலம் சசிகலாதான் ஏமாறுவார்" என்றார்.

அ.தி.மு.க தலைமையின் நடவடிக்கைக்குப் பிறகும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காத்தவராயன், தேனி சிவநேசன் ஆகியோருடன் சசிகலா பேசினார். இதனால் கோபப்பட்ட எடப்பாடி பழனிசாமி, மாவட்டக் கழகங்களில் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் போடுமாறு அறிவுறுத்தினார்.

இதனையேற்று பல மாவட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், டெல்டா பகுதிகள், தென்மண்டலங்களில் உள்ள பல பகுதிகளில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, தேனி மாவட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பினர் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்ற தகவல் வெளியானது.

ஜெயலலிதாவுடனான நட்பு!

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

ஆடியோ உரையாடல்கள் ஒருபுறம் இருந்தாலும், ஜெயலலிதாவுடன் தனக்கிருந்த நட்பு குறித்து சசிகலா உருக்கமாகப் பேசி வருகிறார். தி வீக் ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ` போயஸ் கார்டனில் 33 ஆண்டுகால வாழ்கையில் அக்காவின் அனுமதி இல்லாமல் ஒருபோதும் நான் வெளியே சென்றதில்லை.

அவரது அனுமதியில்லாமல் நான் செல்லும் ஒரே இடம் தி நகரில் உள்ள மிலன் ஜோதி ஷோரூம்தான். அங்கு அக்காவுக்குப் பிடித்த கார்டன் வரேலி புடவைகளை வாங்குவேன். அடர்த்தியான பச்சை நிறம் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் விலையுயர்ந்த ஆபரணங்களைத் தவிர்த்து வந்தார். மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என நினைப்பார்' என விவரித்துள்ளார்.

அதே பேட்டியில், 1998 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற முடிவு குறித்துப் பேசுகையில், இந்த முடிவை மாற்றக் கோரி எவ்வளவோ கெஞ்சினேன். அவர் எதற்கும் செவிசாய்க்கவில்லை. தனது முடிவில் அவர் உறுதியாக இருந்தார்' எனவும் குறிப்பிடுகிறார்.

கூடவே, ஜெயலலிதாவின் உணவுப் பழக்கம், ஜூலி என்ற நாய் மீது அவர் வைத்திருந்த பாசம், போயஸ் கார்டனில் நரேந்திர மோதிக்கு அளித்த விருந்து எனப் பல தகவல்களை விவரித்துள்ளார்.

தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சி!

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

இதனைத் தொடர்ந்து, `அ.தி.மு.க தொண்டர்களுக்காக ஜெயா தொலைக்காட்சியில் அவர் பேச இருக்கிறார்' என்ற தகவலும் வெளியானது. இதுதொடர்பாக ஜெயா டி.வி ஊழியர்கள் சிலருடன் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தற்போது தியாகராய நகரில் உள்ள வீட்டில்தான் சசிகலா குடியிருக்கிறார். போயஸ் கார்டனில் அவர் குடியேறப் போகும் வீட்டில் அனைத்து வசதிகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் சில மாற்றங்களைச் செய்யவிருப்பதால் விரைவில் அவர் அங்கு குடியேறலாம்.

ஆடியோ உரையாடல்களுக்குப் பிறகு ஜெயலிதாவுடனான தனது நட்பு குறித்தும் அவரோடு மேற்கொண்ட அரசியல் பயணங்கள் குறித்தும் அவர் ஜெயா டி.வியில் பேச இருக்கிறார். `எப்போது வேண்டுமானாலும் தகவல் வரும். தயாராக இருங்கள்' எனத் தகவல் மட்டும் வந்தது. என்ன மாதிரியான விஷயங்கள் பேசப்பட வேண்டும் என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருவதாகச் சொல்கின்றனர். தி.நகரில் இருந்து தகவல் வந்ததும் படப்பிடிப்புக் குழு செல்லும்" என்கின்றனர்.

3 பேரிடம் சென்ற உரிமை!

ஓ பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், Getty Images

அ.தி.மு.கவை கைப்பற்ற முயற்சிக்கும் சசிகலாவின் எண்ணம் ஈடேறுமா?" என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். கட்சியை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சி என்பதே கைகோத்து செயல்படும் ஒரு அமைப்புதான்.

அ.தி.மு.கவின் தற்போதைய நிலை என்றால், 2/2017 என்ற தேர்தல் ஆணைய வழக்கின்படி, அ.தி.மு.க என்ற கட்சியின் பெயர்ப் பதிவு, தேர்தல் சின்னமான இரட்டை இலை ஆகியவற்றைப் பயன்படுத்தும் உரிமையானது ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செம்மலை ஆகிய மூன்று பேரிடம் சென்றுவிட்டது. உச்ச நீதிமன்றம் வரையில் இதுதான் நிலவரமாக உள்ளது.

தற்போது, சசிகலா நிர்வாக உரிமையை கோருகிறார். அந்த வழக்கு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரையில் செல்லலாம். நிர்வாக உரிமை என்பது உள்கட்சி விதிகளின்கீழ் வருகிறது.

`நான் இடைக்கால பொதுச் செயலாளர், என்னைக் கேட்டுத்தான் கூட்டம் நடத்த வேண்டும். நீங்கள் அவ்வாறு நடத்தவில்லை' என்கிறார். இந்தப் பிரச்னை முடிவுக்கு வரப் போவதில்லை. ஏனென்றால் இது ஒரு சாதாரண சிவில் விவகாரம். அரசியல் கட்சிக்கென்று சிவில் வழக்குகளில் விதிவிலக்கு கிடையாது.

ஏராளமான சிவில் வழக்குகளோடு இந்த வழக்கும் ஒன்றாக இருக்கும். அதன்பிறகு பல்வேறு முறையீடுகள் இருக்கின்றன. இது சசிகலாவுக்கும் தெரியும். அவர் என்ன நினைக்கிறார் என்றால், கட்சிக்குள்ளேயே பூகம்பம் வெடிக்கட்டும், அப்போது நமக்கான என்ட்ரி கிடைக்கும் என நினைக்கிறார்.

சசிகலா செய்த தவறு!

எடப்பாடி பழனிசாமி & ஓ பன்னீர் செல்வம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், அவர் தவறு செய்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பலத்தைக் காட்டியிருக்க வேண்டும். அரசியல்வாதியின் செல்வாக்கை ஓட்டால் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

அவர்களால் அ.தி.மு.க அனைத்து இடங்களிலும் தோற்றுப் போயிருந்தாலோ நியாயமாக வெற்றி பெற வேண்டிய இடங்களைக் கோட்டை விட்டிருந்தாலோ அதன் விளைவுகள் உணரப்பட்டிருக்கும். தேர்தல் நேரத்தில் அவர் ஒதுங்கிவிட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு என்னவென்றால், `நாம் தனியாக நின்று 66 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால் இனி சசிகலா எதற்கு?' என நினைக்கிறார் இது முற்றுப்புள்ளி இல்லாமல் பிளவை நோக்கித்தான் செல்லும்" என்கிறார்.

அதேநேரம், அ.தி.மு.கவுக்குள் இருக்கும் அதிருப்தியாளர்கள் மாற்று முகாம்களுக்குச் செல்வது அதிகரித்துள்ளதே? என்றோம். `` எடப்பாடி பழனிசாமியின் செயலால் அதிருப்தியில் இருப்பவர்களுக்கு வேறொருவர் தேவைப்படுகிறார். அது சசிகலாவாக இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் நம்மால் என்ன செய்ய முடியும் என நினைக்கின்றவர்கள், தி.மு.க பக்கம் செல்வார்கள். இதனால், அ.தி.மு.கவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உடைசல் ஏற்படும். தவிர, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்களாக அ.தி.மு.கவில் யாரையும் கருத முடியவில்லை.

அ.தி.மு.கவை கைப்பற்ற முடியுமா?

இரட்டை இலை

பட மூலாதாரம், AIADMK, Facebook

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்றோரால் தங்கள் பகுதியைத் தாண்டிப் போய் எங்கே வெற்றி பெற முடியும். சசிகலாவும் களத்தில் நிற்கவில்லை. இதனால் மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு என்ன என்பது குறித்து எந்தவித அபிப்ராயங்களும் இல்லை.

கூட்டத்தைக் கூட்டுவது என்பது இன்றைய தேதியில் பணத்தைச் சார்ந்த ஒன்றாக இருக்கிறது. அந்தக் கூட்டங்களை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. தேர்தலில் அவரால் ஆறு வருடங்களுக்கு நிற்க முடியாது. எதை நோக்கி இது செல்கிறது என்பதைக் கணிக்க முடியவில்லை" என்கிறார்.

தேர்தலில் நிற்க முடியாது எனத் தெரிந்தும் சசிகலா அ.தி.மு.கவை கைப்பற்றுவதற்கான நோக்கம் என்ன? என்றோம்.`` அரசியல்ரீதியாக தன்னுடைய நிலைப்பாட்டை விட்டுவிடக் கூடாது என நினைக்கிறார். `சிட்டி சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விட்டுவிடக் கூடாது' என நினைக்கிறார்.

அ.தி.மு.க என்பது தற்போதைய நிலையில் மாற்றப்பட்ட உள்கட்சி விதிகளோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. உள்கட்சி விதிகள் மாற்றப்பட்டதற்குத் தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துவிட்டதா எனத் தெரியவில்லை. அதேநேரம், `பொதுக்குழு கூட்டத்தின் முடிவு நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது' என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த வழக்கில், `அ.தி.மு.க தலைமைக் கழக செயலாளர் மகாலிங்கம், கணக்கு வழக்குகளை வைத்திருக்க வேண்டும்' எனவும் குறிப்பிட்டுள்ளது.

தலைமைக் கழக அஸ்திரம்!

வழக்கு

பட மூலாதாரம், Getty Images

இந்த வழக்கில், `நான் கணக்கு வழக்குகளைப் பார்க்க தலைமைக் கழகம் செல்ல இருக்கிறேன், எனக்குப் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்' என சசிகலா கேட்கலாம்.

இதெல்லாம்தான் அரசியலில் திருப்புமுனையாக மாறும். ஜெயலலிதாவுக்குத் திருப்புமுனையைக் கொடுத்ததே 1988 ஆம் ஆண்டு தலைமைக் கழகத்தைக் கைப்பற்ற அவர் நடத்திய போராட்டம்தான்.

அதுவரையில் சினிமா நடிகை, எம்.ஜி.ஆரின் செல்வாக்கால் வந்தவர் என்ற அபிப்ராயம்தான் இருந்தது. அவர் போலீஸ் வேனில் ஏறிப் போனது, சாலை மறியல் போன்றவற்றால் தொண்டர்களை அவரால் ஈர்க்க முடிந்தது. அதற்கான முயற்சிகளில் சசிகலா இறங்காமல் இருப்பதையே மைனஸாக பார்க்கிறேன்.

ஆடியோவில் பேசுவது, தொலைக்காட்சியில் பேசத் திட்டமிடுவது போன்றவற்றால் என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது? என்றோம். `` இதனால் எந்த விளைவுகள் ஏற்படாவிட்டாலும் அது செய்தியாகிறது. அதைப் பற்றிய விவாதங்கள் நடக்கின்றன. இதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார். அரசியலில் போட்டியிட்டால்தான் உண்மையான செல்வாக்கு என்ன என்பது தெரியவரும்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :