தங்கம் தென்னரசு பேட்டி: எடப்பாடி ஆட்சியில் ரூ. 3 லட்சம் கோடி முதலீடு, 5 லட்சம் வேலைவாய்ப்புகள் வந்ததா?

தங்கம் தென்னரசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டின் புதிய அரசு, மாநில தொழில்துறைக்கென என்ன லட்சியங்களை வைத்திருக்கிறது, அதன் தொலைநோக்குப் பார்வை என்ன, கேரளாவிலிருந்து வெளியேறிய கைடெக்ஸ் நிறுவனத்தை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதில் என்ன பிரச்சனை, மாநிலத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதெல்லாம் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. அவரது பேட்டியிலிருந்து:

கே. பத்தாண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு தொழில்துறை எப்படி இருக்க வேண்டுமென தி.மு.க. விரும்புகிறது? அதற்கான தொலைநோக்குத் திட்டம் என்ன?

ப. சமீபத்தில் ஹுண்டாய் நிறுவனத்தின் ஒரு கோடியாவது காரை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பேசிய முதலமைச்சர் தன்னுடைய தொலைநோக்குத் திட்டத்தைப் பற்றிப் பேசினார். அதாவது, தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகச் சிறந்த மாநிலமாக்குவதுதான் எங்கள் நோக்கம். இன்னும் பத்தாண்டுகளுக்குள் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கிட்டத்தட்ட 35 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும்.

தமிழ்நாடு ஏற்கனவே சில தொழில்துறைகளில் வலுவாக இருக்கிறது. ஆட்டோமொபைல்ஸ், தோல் தொழில்கள், ஜவுளி போன்றவற்றில் ஏற்கனவே வலுவாக இருக்கிறோம். இப்போது வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி, உணவு பதப்படுத்தும் தொழில், சூரிய சக்தித் தகடுகள் உற்பத்தி போன்றவற்றிலும் இப்போது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறோம். வளரும் தொழில்கள், வளரும் வாய்ப்புள்ள தொழில்கள் எனப் பிரித்து அவற்றில் கவனம் செலுத்துகிறோம்.

கே. அடுத்த பத்தாண்டுகளில் மிக முக்கியமான தொழில்துறையாக எவற்றை அடையாளம் கண்டிருக்கிறீர்கள்...

ப. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மிகப் பெரிய அளவில் வரப்போகிறது. இது தவிர, செமி கண்டக்டர்கள், லித்தியம் பேட்டரிகள், உணவு பதப்படுத்தும் தொழில்கள், உயிரி தொழில்நுட்பம், நுண்கடன்கள் போன்றவை மிகப் பெரியதாக வளரும் வாய்ப்பு இருக்கிறது.

ஐடி நிறுவனங்களை பெரிய நகரங்களில் மட்டுமல்லாது இரண்டாம் நிலை நகரங்களிலும் ஈர்க்கும் வகையில் சிறிய ஐடி பார்க்களை உருவாக்க விரும்புகிறோம். இது அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும். முதலீடுகள் வரும்போது அவை வேலை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டுமென நினைக்கிறோம்.

கே. முதலீடுகள் வரும்போது, அவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் துறைமுகம், சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா?

துறைமுகம்

பட மூலாதாரம், ARUN SANKAR

ப. ஓரளவுக்கு கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன. ஆனால், முழுமையாக இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்வேன். நாம் மிகப் பெரிய கடற்கரையைக் கொண்டிருக்கிறோம். ஆனால், சென்னை, தூத்துக்குடி என இரண்டு பெரிய துறைமுகங்கள்தான் இருக்கின்றன. அதிலும் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு கப்பலில் இருந்து மிகப் பெரிய கப்பலுக்கு சரக்குகளை மாற்றும் வசதி இல்லை. இதற்கு கொழும்புவிற்குத்தான் செல்ல வேண்டும்.

சென்னையைப் பொறுத்தவரை, சென்னைத் துறைமுகத்தையும் மாநிலத்தின் பிற பகுதிகளையும் இணைக்க வசதியாக உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டது. ஆனால், அது தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதற்காகவே அது நிறுத்தப்பட்டது. அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் தடுக்கப்பட்டிருக்கும். சென்னையில் மேலும் ஒரு விமான நிலையம் தேவை.

நம்முடைய தொழிற்பேட்டைகளை மேலும் சிறப்பாக செயல்படச் செய்ய வேண்டும். அவற்றை சர்வதேச அளவில் செயல்படச் செய்வதற்கான திட்டம் இருக்கிறது. அதேபோல புதிய தொழிற்பூங்காக்களை உருவாக்கும் திட்டமும் இருக்கிறது. ஒவ்வொரு தொழில்துறைக்குமெனத் தனித்தனியாக உருவாக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.

ஆகவே, தற்போதுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதில்லை என்பது உண்மைதான்.

கே. தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மதுரை - தூத்துக்குடி தொழிற்பாதை முன்மொழியப்பட்டது. அதில் இப்போதுவரை பெரிய முன்னேற்றமேதும் இல்லை. அந்தத் திட்டத்தில் என்ன பிரச்சனை?

ப. அந்தத் திட்டம் 2008ஆம் ஆண்டு மு. கருணாநிதி முதல்வராக இருக்கும்போது உருவாக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் தொழில் துறையை மேம்படுத்த ஒரு கமிட்டி போடப்பட்டது. அந்த கமிட்டியில் நானும் உறுப்பினராக இருந்தேன். வேணு ஸ்ரீநிவாஸன், ராம சுப்ரமணிய ராஜா போன்ற தொழிலதிபர்கள் அந்தக் கமிட்டியில் இருந்தார்கள். முதன் முதலில் அப்போதுதான் மாநில தொழிற்கொள்கை உருவாக்கப்பட்டது. அதில்தான் மதுரை - தூத்துக்குடி தொழிற் பாதை முன்மொழியப்பட்டது.

சென்னையைச் சுற்றியே நிறைய தொழிற்சாலைகள் வருகின்றன; தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். தென் மாவட்டங்களில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளுக்கு, கலவரங்களுக்கு வேலை வாய்ப்பின்மைதான் காரணமாக இருக்கிறது என நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் கமிட்டி கூறியது. அங்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காகவே மதுரை - தூத்துக்குடி தொழிற் பாதை முன்மொழியப்பட்டது. ஆனால், அடுத்த வந்த பத்தாண்டுகளில் இது தொடர்பாக எதுவுமே செய்யவில்லை.

இதனைச் செயலாக்கம் செய்வதற்காக ஒரு Special Purpose Vehicle ஒன்றை அறிவித்தார்கள். அது வெறும் காகித அளவிலேயே நின்றுவிட்டது. இப்போது நாங்கள் மீண்டும் அதைக் கையில் எடுத்திருக்கிறோம். பல நிறுவனங்கள் அந்தப் பகுதியில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

தங்கம் தென்னரசு

பட மூலாதாரம், Getty Images

கே. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க பல மாநாடுகள் நடத்தப்பட்டன. போதுமான அளவில் முதலீடுகள் வந்தனவா?

ப. வரவில்லை. முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சம் கோடி வந்ததாகச் சொன்னார்கள். அடுத்த மாநாட்டில் ஐந்து லட்சம் கோடி வந்ததாகச் சொன்னார்கள். ஏறத்தாழ ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வந்ததாகச் சொன்னார்கள். ஆனால், இப்படியெல்லாம் நடந்திருந்தால் வெளிப்படையாகத் தெரிந்திருக்குமே. எதுவும் நடக்கவில்லை.

அவர்கள் மாநாடுகளைப் போட்டார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்தார்கள். ஆனால், அவையெல்லாம் தொழிற்சாலைகளாக மாறவில்லை. பல இடங்களில் கல்வி நிலையங்கள் ஆரம்பித்ததையெல்லாம்கூட தொழிற்சாலைகளாகக் காண்பித்திருக்கிறார்கள். இது தொடர்பான விவரங்களை விரைவில் வெளிப்படையாக வெளியிடவிருக்கிறேன்.

கே. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்றவை தொழில்துறை முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?

ப. பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜிஎஸ்டி அமலாக்கமும் சிறு, குறு தொழில்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த நிலையில், கோவிட் பரவலும் ஏற்பட்டதால் பல தொழில்கள் முடங்கியிருக்கின்றன. ஒரு பொருளாதாரம் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால், சிறு, குறு தொழில்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால், கடந்த 4 வருடங்களாக இந்தத் துறை பெரும் நசிவைச் சந்தித்து வந்தித்திருக்கிறது. இந்தத் துறையை மேம்படுத்த உரிய சலுகைகளை அளிப்போம்.

கே. கேரளாவைச் சேர்ந்த கைடெக்ஸ் என்ற நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு விரும்பிய நிலையில், தமிழ்நாடு அரசு அதில் ஆர்வம் காட்டாததால், தெலுங்கானாவிற்குச் சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் கியா மோட்டர்ஸ் தமிழகத்திற்கு வராமல் போனதைப் போல, இப்போது கைடெக்ஸ் வரவில்லையென்றெல்லாம் விமர்சிக்கப்படுகிறது. உண்மையில் கைடெக்ஸ் விவகாரத்தில் என்ன நடக்கிறது?

கைடெக்ஸ்

பட மூலாதாரம், Allison Joyce

ப. கியா மோட்டா்ஸ் இங்கே வராததையும் கைடெக்ஸ் இங்கே வராததையும் ஒப்பிடுவதே தவறு. இவற்றுக்கான காரணங்களே வேறு. கியா மோட்டர்சிடம் என்ன பேசப்பட்டது, எதிர்பார்க்கப்பட்டது, என்ன காரணத்தினால் அவர்கள் வெளியாறினார்கள் என்பதெல்லாம் ஊரறிந்த ரகசியம். கைடெக்ஸையும் அதையும் ஒப்பிடவே முடியாது.

தவிர, கைடெக்ஸ் முற்றிலுமாக வெளியேறவில்லை. அவர்கள் நாம் வழங்கிய சலுகைகளை நிராகரிக்கவில்லை. தமிழ்நாடு ஆர்வம் காட்டாததால் என்று கேள்வி கேட்கிறீர்கள். அது தவறு. கேரளாவைவிட்டு வேறு மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்புகிறோம் என்று அவர்கள் சொன்னவுடன், நானும் தொழில்துறை செயலரும் அவர்களிடம் பேசினோம். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்தால் அவர்களுக்கு என்னென்ன சலுகைகளை கொடுக்க தயாராக இருக்கிறோம் என்பதையெல்லாம் விரிவாகச் சொன்னோம்.

அப்படி தமிழ்நாடு என்ன சலுகைகளையெல்லாம் தர முன்வந்தது என்பதை கைடெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரே ஊடகங்களில் தெரிவித்திருக்கிறார். ஆகவே தமிழ்நாடு ஆர்வம் காட்டவில்லையென்று சொல்வது முற்றிலும் பொய்யான செய்தி.

இதற்குப் பிறகு அவர்கள் தெலங்கானாவில் முதலீடுசெய்யப்போவதாக செய்திகள் வெளியாயின. ஆனால், அவர்கள் இன்னமும் எங்களோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் 'கைடன்ஸ் பீரோ' தொடர்ந்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முற்றிலுமாக தமிழ்நாட்டை விட்டுப் போய்விட்டார்கள் என்று சொல்லப்படுவதே தவறான கருத்து. தமிழ்நாடு அரசின் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சிலர் வலிந்து அப்படி எழுதுகிறார்கள். அது உண்மையல்ல. தொடர்ந்து கைடெக்ஸோடு பேசிக்கொண்டிருக்கிறோம்.

கே. கடந்த சில நாட்களாக கொங்கு நாடு என்பது குறித்துப் பேசப்படுகிறது. கோவை பகுதியிலிருந்து நிறைய வரிவருவாய் வந்தும் அப்பகுதி கவனிக்கப்படுவதில்லை என்ற எண்ணமிருப்பதாகச் சொல்கிறார்கள்...

ப. கோவை தமிழ்நாட்டின் ஒரு பகுதி. கொங்கு நாட்டுப் பகுதிகளையும் உள்ளடக்கியதுதான் தமிழ்நாடு என்ற மாநிலம். தமிழ்நாட்டு முதலமைச்சர் எல்லோருக்கும் முதலமைச்சர். எங்களைப் பொறுத்தவரை இந்த மாவட்டம் மேல், இந்த மாவட்டம் கீழ் என்ற பாகுபாடே கிடையாது. கோவிட் காலகட்டத்தில் கோவைப் பகுதிக்குத்தான் அதிகமாச் சென்றார்.

தொழில்துறையைப் பொறுத்தவரை, கோவிட் காலகட்டத்தில் ஏற்றுமதி பாதிக்கப்படாமல் இருப்பதற்கான எல்லா உதவிகளையும் செய்தோம். ஏற்றுமதிக்கு காலக்கெடு இருக்கும், அதை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக பல சலுகைகளை அளித்தோம். கோவை ஏற்கனவே வளர்ந்த தொழில்நகரம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கிறோம். திருப்பூர் பெரிய அளவில் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. ஆகவே இந்தப் பகுதிகள் எங்கள் தொடர் கவனிப்பில் இருக்கும்.

கே. கொரோனாவின் இரண்டாம் அலை காலகட்டத்தில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டபோது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. இப்போது அவர்கள் மேலும் ஆறு மாதம் இயங்க அனுமதி கேட்கிறார்கள். அரசு என்ன செய்யப்போகிறது?

ஸ்டெர்லைட்

ப. முதலில் அனுமதி கேட்டபோது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனுமதி அளித்தோம். அவர்கள் தொடர்ச்சியாக ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறார்கள். தட்டுப்பாட்டுக் காலத்தில் அவர்கள் அளித்த ஆக்சிஜன் நமக்கு உதவியாக இருந்தது. இப்போது தேவை குறைந்திருக்கிறது. இந்தச் சூழலில் அவர்கள் கூடுதலான மாதங்களுக்கு ஆலையை இயக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். முதலமைச்சர் உரிய முடிவெடுத்து, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.

கே. கொரோனா தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு நீடித்துக்கொண்டே போகிறது. செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்துவதில் என்ன பிரச்சனை?

ப. காரணம், அது மத்திய அரசுக்குச் சொந்தமான ஆலை என்பதுதான். அதனால்தான் குத்தகைக்குக் கேட்டோம். ஆனால், "நாங்கள் சில தொழில் நிறுவனங்களோடு பேசிக்கொண்டிருக்கிறோம். பேச்சு வார்த்தை முன்னேறிய நிலையில் இருக்கிறது" என்று மத்திய அரசு தெரிவித்தது.

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நமது நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமாருக்கு எழுதிய கடிதத்தில், மே மாதம் 21ஆம் தேதி டெண்டர்களைக் கோரியதில் யாரும் எடுக்க முன்வரவில்லையெனத் தெரிவித்திருக்கிறார். ஆனால், நாம் கேட்டபோது, பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். தமிழ்நாட்டில் இப்போது தடுப்பூசி தேவையாக இருக்கிறது. பல கோடி டோஸ்கள் நமக்குத் தேவை.

மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், தடுப்பூசி கிடைக்கவில்லை. முதலமைச்சரும் கூடுதல் தடுப்பூசிகளைக் கோரி கடிதம் எழுதியிருக்கிறார். ஆகவே, மத்திய அரசு அந்த ஆலையை நடத்த வேண்டும். இல்லாவிட்டால், எங்களிடம் கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால், மத்திய அரசு இதுவரை முடிவெடுக்கவில்லை.

கே.கோவிட் இரண்டாவது அலையின்போது ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்போது மூன்றாவது அலை வரக்கூடுமென்ற பேச்சுகள் இருக்கின்றன. தமிழ்நாடு தயாராக இருக்கிறதா?

கோவிட்

பட மூலாதாரம், SOPA Images

ப. நிச்சயமாக தயாராக இருக்கிறோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது கொரோனா பரவல் உச்சகட்டத்தில் இருந்தது. இரவு - பகலாக அமைச்சர்கள் வேலைபார்க்க வேண்டியிருந்தது. முதலமைச்சர் ஒவ்வொரு இரவும் அழைத்து, விசாரிப்பார். தில்லி, மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலைமை இங்கு வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். பதவியேற்புக்கு முன்பாகவே ஆய்வுக்கூட்டங்கள் நடந்தன. அந்தக் கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது.

ஆனால், ஒருவேளை இனி மூன்றாவது அலை வந்தால் நாமே அதனை நிறைவுசெய்யும் வகையில் உற்பத்தி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகள் துவங்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே இயங்கி நின்றுபோன தொழிற்சாலைகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்குகின்றன. ஆகவே நாம் தயாராகவே இருக்கிறோம்.

கே. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்துவரும் தொல்லியல் துறை அகழாய்வுகள் நடந்துவருகின்றன. அவை எந்தக் கட்டத்தில் இருக்கின்றன?

ப. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தில் இருக்கின்றன. பல இடங்களில் முதல் கட்ட அகழாய்வு முடிந்து இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. சிவகளை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, கீழடி ஆகிய இடங்களில் அகழாய்வு நடந்துகொண்டிருக்கிறது. இதில் சிவகளையில் கிடைத்திருக்கக்கூடிய பொருட்கள் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. அங்கு இரும்பு காலத்தின் ஆரம்ப கட்ட மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என நினைக்கிறோம். அங்குள்ள மாதிரிகளை கார்பன் டேட்டிங் செய்து பார்த்தால், அதன் காலம் மிக முற்பட்டதாக இருக்குமென நினைக்கிறோம். ஆகவே, சிவகளையும் கீழடியைப் போல ஒரு திருப்பத்தைத் தரும் என நினைக்கிறேன்.

மயிலாடும்பாறையில் நீண்ட வாள் ஒன்று கிடைத்திருக்கிறது. சிவகளையில் 'ஆதன்' என்ற பெயருடன் கூடிய பானை ஓடு கிடைத்திருக்கிறது. கீழடியிலும் இதே பெயருடன் கூடிய பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. ஆகவே இரண்டிற்கும் இடையில் ஒற்றுமை இருக்கலாம். ஆனால், அருகிலேயே உள்ள ஆதிச்ச நல்லூரில் கிடைக்கும் பொருட்களுக்கும் சிவகளைக்கும் பெரிய தொடர்புகள் இல்லை. ஆதிச்சநல்லூரில் அலெக்ஸாண்டர் ஆய்வுகளைச் செய்தபோது தாமிரம், தந்தத்தினால் ஆன பொருட்கள் கிடைத்தன. ஆனால், சிவகளையில் இரும்பினால் ஆன பொருட்களே கிடைக்கின்றன. ஆனால், இரு இடங்களிலும் ஒரே மாதிரியான ஈமத் தாழிகள்தான் கிடைக்கின்றன.

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகை மேட்டிலும் மிகப் பெரிய ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது.

கே. கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், தமிழ்நாட்டில் பொதுவாகவே அருங்காட்சியகங்கள் மோசமான நிலையில்தான் இருக்கின்றன. இது தொடர்பாக ஏதேனும் திட்டங்கள் இருக்கின்றனவா?

கீழடி

ப. அருங்காட்சியங்களைப் பொருத்தவரை நாம் எப்படி காட்சிப்படுத்துகிறோம் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. திருநெல்வேலி அருங்காட்சியகம் அதற்கு நல்ல உதாரணமாக இருக்கிறது. அதற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முக்கியக் காரணமாக இருக்கிறார்கள்.

கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய இடங்களில் புதிதாக அருங்காட்சியகங்களை அமைக்கும் திட்டம் இருக்கிறது. பொதுவாக அகழாய்வு நடந்த பிறகு அந்தக் குழிகள் மூடப்படும். ஆனால், அந்தக் குழிகளை மூடாமல், எப்போது சென்றாலும் பார்க்கும் வகையில் திறந்த வெளி அருங்காட்சியம் அமைக்கும் பணி 35,000 சதுர அடி பரப்பில் நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் அந்தப் பணிகளை நிறைவடையும். உலகத் தரம்வாய்ந்த அருங்காட்சியமாக அது அமையும்.

கே. நீங்கள் மு. கருணாநிதி அவர்கள் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்திருக்கிறீர்கள்; மு.க. ஸ்டாலின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். இருவருடைய செயல்பாட்டிலும் என்ன ஒற்றுமை - வேற்றுமைகள் இருக்கின்றன?

ப. இருவரிடமும் கடின உழைப்பு இருக்கிறது. கலைஞர் அரசு வேலை பார்க்கிறது என்று சொன்னால், மு.க. ஸ்டாலினின் அரசு வேகமாக வேலைபார்க்கிறது என்று சொல்ல வேண்டும். மு.க. ஸ்டாலினுக்கு ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்கிறது. அதற்காக அவர் கடுமையாக உழைக்கிறார். அவரது வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் செயல்படுவதுதான் சவாலாக இருக்கிறது. அவருக்கு இணையாக யாரும் ஓட முடியாது. அவருக்கு அருகில் செல்லும்வகையில்தான் நாங்கள் முயன்றுகொண்டிருக்கிறோம்.

அடுத்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டை முற்றிலும் மாற்றிக்காட்ட வேண்டும் என்ற முனைப்பைத்தான் மு.க. ஸ்டாலினிடம் நான் பார்க்கிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :