தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: பா.ஜ.கவின் தனி வியூகம் - உள்ளாட்சியில் 25 சதவிகித இடங்கள் சாத்தியமா?

முருகன்

பட மூலாதாரம், L. MURUGAN

    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேர்தல் வியூகங்களில் சில மாற்றங்களை தமிழ்நாடு பா.ஜ.க ஏற்படுத்தியுள்ளது. ` 25 வீட்டுக்கு ஒரு நிர்வாகி என்ற அடிப்படையில் 8 சதவீத வாக்குகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டும்' என அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது தமிழ்நாடு பா.ஜ.கவில்?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு, மொடக்குறிச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது.

இதன்பிறகு வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் நான்கு பேரும் பிரதமர் மோதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதன் தொடர்ச்சியாக இந்திய அரசில் இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றார்.

அவர் வகித்து வந்த தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் பொறுப்பு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமையன்று பா.ஜ.க தலைவராக கமலாலயத்தில் அண்ணாமலை பொறுப்பேற்க உள்ளார்.

எதைச் செய்தாலும் பிரம்மாண்டம்!

அண்ணாமலை

இதற்காக கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரும் அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என பா.ஜ.க வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`` இந்த பிரம்மாண்டம் என்பது தொடக்கம்தான். இனி தமிழ்நாட்டில் எதைச் செய்தாலும் பிரமாண்டமாகச் செய்ய வேண்டும் என டெல்லி மேலிடம் தெரிவித்துள்ளது" என்கிறார் தமிழ்நாடு பா.ஜ.கவின் மூத்த நிர்வாகி ஒருவர். தொடர்ந்து பிபிசி தமிழிடம் மேலும் சில விவரங்களைத் தெரிவித்தார்.

“அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு நிர்வாக அமைப்புகளில் மாற்றம் நடக்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சமூக தலைவர்களை அதிகளவில் கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற உள்ளன. தேர்தல் நேரம் என்று பார்க்காமல் இப்போதே உள்ளூர் பிரச்னைகளை கையில் எடுக்க வேண்டும் என டெல்லித் தலைமை கூறியுள்ளது.

மாநிலத்துக்கு என உள்ள பொதுவான பிரச்னைகளில் அதிகக் கவனம் செலுத்தாமல் மாவட்ட அளவிலான பிரச்னைகளைக் கையில் எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் சமூக வலைதளங்களை பிரதானமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு நிர்வாகிக்கு 25 வீடுகள்!

பாஜக

பட மூலாதாரம், Getty Images

தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என 200 பேரை வைத்துக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆன்லைனில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு தகவல்கள் பேசப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் ஒரு நிர்வாகிக்கு 25 வீடுகள் என்பதை இலக்காக வைத்துக் கொண்டு வாக்குகளை சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு நிர்வாகியிடமும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், குறிப்பிட்ட வீட்டில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வந்து சேர்ந்ததா, அவர்கள் எந்தக் கட்சிக்காரர்கள், அந்த வீட்டில் உள்ள நபருக்கு பா.ஜ.க மீதான பார்வை என்ன, அவருக்கு வேலைவாய்ப்பு வேண்டுமா, அவை சிறுபான்மையினர் வாக்குகளா என்பதையெல்லாம் கணக்கெடுக்கும் வேலைகள் தொடங்க உள்ளன.

இந்தப் பணியில் தற்போதுள்ள அனைத்து நிர்வாகிகளும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களில் எத்தனை பேர் தேறுவார்கள் என்பதைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்.

8.5 சதவீத வாக்குகள்!

பாஜக

பட மூலாதாரம், Getty Images

25 வீட்டுக்கு ஒரு நிர்வாகி சரி.. அந்தளவுக்குக் கட்சியில் நிர்வாகிகள் இருக்கிறார்களா? என்றோம். `` இல்லை, எண்ணிக்கை சற்று குறைவாகத்தான் உள்ளது. இந்தப் பணிக்காக 60 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர். தற்போது எங்களிடம் 50,000 நிர்வாகிகள் உள்ளனர். அதாவது, 1,500 பேருக்கு ஒருவர் என்ற அளவில்தான் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 7 லட்சம் பேராக உயர்த்த வேண்டும்.

ஒரு பூத்துக்கு 250 முதல் 300 வீடுகள் உள்ளன. அப்படியானால் ஒவ்வொரு பூத்திலும் கூடுதலாக பத்து பேரை அந்தப் பகுதியில் தயார் செய்ய வேண்டும். இதனையடுத்து, குறைந்தபட்சம் 8.5 சதவிகித வாக்காளர்களை கொண்டு வர வேண்டும்.

அந்த வாக்காளர்கள், சம்பந்தப்பட்ட நிர்வாகியுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்காக இவை தயார் செய்யப்பட்டு பின்னர் அடுத்தடுத்த தேர்தல்களுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு வாக்காளரையும் ஆராய்வதற்கான பணியாக பார்க்கிறோம். இந்தத் திட்டத்தை கட்சியின் தேர்தல் மேலாண்மைக் குழுவில் (Election management team) உள்ள 5 பேர் கண்காணித்து இறுதி செய்ய உள்ளனர்.

இது ஒருபுறம் நடந்தாலும், ஒவ்வொரு வார்டுகளிலும் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு செல்வாக்குள்ள 3 பேரின் பெயர்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒருவருக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் கூட்டணி இல்லாமலேயே பா.ஜ.க வெற்றி பெறும்" என்கிறார்.

இலக்கு 25 சதவிகித இடங்கள்!

பழனிசாமி & ஓ பி எஸ்

பட மூலாதாரம், Getty Images

இதையடுத்து, ``தமிழ்நாடு பா.ஜ.கவின் உள்ளாட்சித் தேர்தல் வியூகம் என்ன?" என அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றில் எந்த வார்டுகளில் நாங்கள் வலுவாக இருக்கிறோம் என்பதைக் கண்டறியும் வேலைகள் தொடங்கிவிட்டன. சாதி, பெண்கள் வாக்கு, பா.ஜ.க வாக்கு ஆகியவற்றைக் கணக்கிட்டு பிரிக்க உள்ளோம்.

ஊராட்சிகளை மறுவரையறை செய்யும்போது ஆளும்கட்சிக்கு வலு இல்லாத வார்டுகளை பிரிக்கும் வேலைகளை செய்வார்கள். அப்படிச் செய்தாலும் எங்களுக்கு பாதிப்பு வராத வகையில் செயல்படுவது தொடர்பாகவும் பேசி வருகிறோம்" என்கிறார்.

மேலும், ``ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வாக்காளர்களை ஏ, பி, சி என மூன்று வகையாகப் பிரித்து எங்களுக்கு வாக்களிக்காத இதர பிரிவினரை ஏ வரிசைக்குள் கொண்டு வரும் வேலைகள் நடக்க உள்ளன.

தேர்தல் நேரத்தில், `வெற்றி பெற முடியும்' என நினைக்கும் வார்டுகளில் தனித்துப் போட்டியிடுவோம். ஒருவேளை கூட்டணி அமைந்தால் 25 சதவிகித இடங்களைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம். எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தேர்தல் மேலாண்மைக் குழு கூடி முடிவு செய்யும்" என்கிறார்.

தனித்துப் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியானதே? என்றோம். ``தற்போது வார்டு வாரியாக எங்களின் பலம் என்ன என்பதை ஆராய உள்ளோம். அதனையொட்டி 25 சதவிகித இடங்களில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளோம். அந்தளவுக்கு ஒதுக்கப்படவில்லையென்றால் தனித்துப் போட்டியிடுவோம்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :