"கொரோனா 3வது அலை வந்தால் 50% நிறுவனங்களை மூடும் நிலை வரும்" - திருப்பூர் பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் கவலை

திருப்பூர் பிபிசி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜவுளித் துறையின் தேவை மற்றும் விநியோகம் பாதிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதை உறுதி செய்யும்விதமாக இந்திய ஜவுளி வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றின் முழுத்திறனில் உற்பத்தி செய்ய முடியாமலும், புதிய ஆர்டர்களை பெற முடியாமலும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி என திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களைச் சார்ந்து ஆண்டுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது. பின்னலாடை தொழிலை சார்ந்து இம்மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் சிறு உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் திருப்பூர் மாவட்டத்தின் பின்னலாடை வர்த்தகம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

மாநில அளவில் கொரோனா இரண்டாம் அலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தாக்கத்திலிருந்து முழுமையாக மீண்டு வராத நிலையில் தான் இம்மாவட்டம் இப்போதும் உள்ளது.

"முதல் அலையில் தப்பித்தோம்"

திருப்பூர் பிபிசி

பட மூலாதாரம், Getty Images

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பால் உள்நாட்டு வர்த்தகத்தை நம்பி இருந்த திருப்பூரின் சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் முற்றிலுமாக முடங்கியிருப்பதாகத் தெரிவிக்கிறார் டிஷர்ட் மற்றும் ஆடைகள் உற்பத்தியாளர் கார்த்திகேயன்.

'எனது நிறுவனத்தில் 30 ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். உள்நாட்டு பின்னலாடை வணிகத்தை பிரதானமாக வைத்து தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டோம். மும்பை, பெங்களூரு, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு ஆடைகளை தயாரித்து அனுப்பி வந்தோம். கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக உள்நாட்டு வர்த்தகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

வட மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஆர்டர்கள் வருவதில்லை. கடந்த கொரானா அலையில் முக கவசம் மற்றும் பிபிஇ பாதுகாப்பு உடைகள் தயாரித்து பின்னலாடை தயாரிப்பில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டினோம்.

ஆனால், தற்போது முக கவசம் மற்றும் பாதுகாப்பு உடை தயாரிப்பிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தர நிர்ணயங்கள் விதிக்கப்பட்டுள்ளதால், சிறு தொழிற்சாலைகளில் அவற்றைத் தயாரிப்பது சவாலாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின்போது முக கவசம் மற்றும் பாதுகாப்பு உடை தயாரிப்பு பெருமளவு கை கொடுத்தது. இம்முறை அதுவும் இல்லாததால் சிறிய அளவில் இயங்கி வந்த பின்னலாடை நிறுவனங்கள் முற்றிலுமாக மூடப்படும் நிலையில் உள்ளன,' என்கிறார் கார்த்திகேயன்.

தொழிலாளர் பற்றாக்குறை

திருப்பூர் பிபிசி

"கடந்த பொது முடக்கத்தைப் போலவே இந்த முறையும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதனால் இயல்பு நிலை திரும்பினாலும் முழுமையான அளவில் உற்பத்தியை தொடங்குவது தாமதமாகும்," என்கிறார் பின்னலாடை உற்பத்தி நிறுவன உரிமையாளர் சபரீஷ்.

'கொரோனா தாக்கத்திற்கு முன்பு எனது நிறுவனத்தில் 35க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா முதல் அலையின்போது பணியாளர்களின் எண்ணிக்கை 20 ஆனது. தற்போது வெறும் 5 பணியாளர்களை வைத்து உற்பத்தியை தொடங்க முயற்சித்து வருகிறேன்.

பொது முடக்கம் காரணமாக ஜவுளிக்கடைகள், ஷோரூம்கள், பிளாட்பார்ம் கடைகள் ஆகியவை திறக்கப்படாததால் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கக்கூடிய ஆடைகளும் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. உள்ளூர் ஜவுளி நிறுவனங்களிடமிருந்து ஆர்டர்கள் இன்னும் வரவில்லை.

திருப்பூர் பிபிசி

இந்த நிலையில் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களை பணியமர்த்தி உற்பத்தியை தொடங்க நினைத்தாலும், ஆட்கள் பற்றாக்குறையால் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அனுபவமிக்க ஊழியர்கள் இல்லாததால் தரமான உற்பத்தி பெறுவது பெரும் சவாலாக மாறியுள்ளது.' என்கிறார் சபரீஷ்.

'கடந்த பொது முடக்கத்தைப் போலவே இந்த முறையும் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் உற்பத்தி அளவை அடைவது தாமதமாகிறது. கொரோனா பாதிப்பின் முதல் மற்றும் இரண்டாம் அலை தாக்கத்தால் 25 சதவீத தொழில் நிறுவனங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சொந்த இடத்தில் தொழிற்சாலை வைத்திருப்பவர்கள் மற்றும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டாலும் சமாளிக்க முடிந்தவர்கள் மட்டுமே தற்போதைய சூழலில் நிறுவனத்தை இயக்கி வருகின்றனர். இந்த சூழலில் கொரோனா மூன்றாவது அலை உருவானால் 50 சதவீத பின்னலாடை தொழில் நிறுவனங்கள் மூடப்படும். அப்படி ஒரு சூழல் உருவாகி விடாமல் அரசு பாதுகாத்திட வேண்டும்' என்கிறார் இவர்.

மூலப் பொருட்கள் விலை உயர்வு

திருப்பூர் பிபிசி

கொரோனா கால நெருக்கடிகளோடு, மூலப் பொருட்களின் விலை உயர்வும் பின்னலாடை சந்தையை பாதித்து வருவதாக தெரிவிக்கிறார் தாராபுரத்தில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வரும் நந்தகுமார்.

'கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பின்னலாடை தொழிலின் வளர்ச்சி சரிந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

குறிப்பாக, கொரோனா முதல் அலை தாக்கத்திலிருந்து மீண்டு உற்பத்தியை துவங்கிய சூழலில் இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னலாடை தொழிலின் முக்கிய காலகட்டத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக, ஆகஸ்ட் மாதம் வரைதான் சாம்பிள்கள் தயாரிக்கும் காலம். அதன் அடிப்படையில் தான் வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் கிடைக்கும். குறிப்பிட்ட நேரத்தில், தரமான தயாரிப்பை அனுப்புபவர்களுக்கே ஆர்டர் கிடைக்கும். பொதுமுடக்கம் காரணமாக சாம்பிள்கள் தயாரிப்பதும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆர்டர்கள் குறைந்து வருகின்றன.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

மேலும், பருத்தி, நூல் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், உற்பத்திக்கான விலை உயரவில்லை. இவை தவிர வங்கியில் பெற்றிருந்த கடனுக்கான இஎம்ஐ தொகையை மாதந்தோறும் செலுத்த வேண்டிய கட்டாயம் என பொருளாதார நெருக்கடியும் அதிகரித்துள்ளது.

முன்பு 45 நாட்களுக்கு ஒரு முறை உற்பத்திக்கான தொகை கிடைக்கும். அதை வைத்து நிறுவனத்தை நடத்தி வந்தேன். இப்போது பொது முடக்கம் காரணமாக இரண்டு மாத இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியோடு, ஏற்கனவே உற்பத்தி செய்து வைத்திருந்த ஆடைகள் சரியான நேரத்திற்கு அனுப்பவில்லை என்ற காரணத்தால் தேங்கியுள்ளது.

இத்தொழிலில் உள்ள 25 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே உள்ளூரில் இருப்பவர்கள். மற்றவர்கள் பிற மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால் அவர்கள் எப்போது மீண்டும் வேலைக்கு திரும்புவார்கள் என்பதும் கேள்விக்குரியாகியுள்ளது' என்கிறார் நந்தகுமார்.

ஏற்றுமதியில் பின்னடைவு

திருப்பூர் பிபிசி

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பின்னலாடை உற்பத்தி தொய்வடைந்துள்ளதால், திருப்பூருக்கு வரவேண்டிய ஆர்டர்கள் வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு செல்வதாக கூறுகிறார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சக்திவேல்.

'ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் தொடர்ந்து திருப்பூரை நோக்கி வந்துகொண்டுதான் இருக்கின்றன. காரணம், ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் சீசனுக்கான நேரமிது.

இந்த சீசனுக்கான குறிப்பிட்ட ஆடையைத் தயாரித்து அதை விரைவாக அனுப்ப வேண்டும். தாமதமாக அனுப்பினால் அங்குள்ள வியாபாரிகளாலும் ஆடைகளை விற்க முடியாது. எனவே குறிப்பிட்ட நேரத்தில் ஆர்டர்களை அனுப்புபவர்களுக்கே அவர்கள் முன்னுரிமை தருவார்கள். அந்த வகையில் பொது முடக்கம் காரணமாக இந்தியாவில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், சக போட்டியாளர்கள் உள்ள வங்கதேசம், வியட்நாம், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கே ஆர்டர்கள் செல்கின்றன.

இந்த நாடுகளுக்கு ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து சந்தைகளில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவிற்கு வரிவிலக்கு இல்லை. இதுவும் ஒரு முக்கிய பின்னடைவாக கருதப்படுகிறது.

கொரோனா பரவலுக்கு முன்புவரை, அதிகப்படியான ஆர்டர்கள் இருந்தாலும் அதிக நேரம் மற்றும் இரவு நேரங்களில் தொழிற்சாலைகளை இயக்கி உற்பத்தியை அதிகரிக்க முடிந்தது. ஆனால் தற்போதுள்ள கட்டுப்பாடுகளின்படி மாலை 5 மணிக்கு தொழிற்சாலையை மூட வேண்டும். எனவே, குறிப்பிட்ட அளவிலான உற்பத்தி இலக்கை உரிய நேரத்தில் எட்டுவது சிக்கலாகியுள்ளது.

கொரோனா முதல் அலையால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் போது ஐரோப்பிய சந்தையும் பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்தது. எனவே இந்தியாவில் இருந்து தாமதமாக தயாரிப்புகள் சென்றாலும், நமது வர்த்தகத்தை அது பெரிதாக பாதிக்கவில்லை. இம்முறை அந்த நாடுகளில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால் இங்கு தொழிற்சாலைகள் இயங்க வில்லை. எனவே இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் பின்னடைவை சந்தித்துள்ளது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முதல் பொது முடக்கத்தின் போது அறிவித்ததைப் போல், இம்முறையும் வங்கி கடனுக்கான வட்டி செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.' என்கிறார் சக்திவேல்.

தொழில் நகரமான திருப்பூரில் ஏராளமான தொழில் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு அதிக அளவிலான தடுப்பூசிகளை இம்மாவட்டத்திற்கு மாநில அரசு ஒதுக்கிட வேண்டும். தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்துவதை மாவட்ட நிர்வாகமும், பின்னலாடை நிறுவன உரிமையாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டு பொது முடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டால் திருப்பூரின் பின்னலாடை வர்த்தகம் முற்றிலுமாக முடங்கிவிடும். எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்தி மீண்டும் இயல்புநிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுப்பதே அரசின் பிரதான குறிக்கோளாக இருக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை தொழிற்துறையினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :