திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் என்ன சிக்கல்? குவாட்டர் கொடுத்தால்தான் தொழிலாளர்கள் கிடைக்கிறார்களா?

'குவாட்டர்' கொடுத்தால்தான் திருப்பூரில் தொழிலாளர்கள் கிடைக்கிறார்களா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
    • பதவி, பிபிசி தமிழ்

சாதாரணமாக ஒரு வெள்ளைத் தாளில் கணினி அச்சு செய்யப்பட்டு கம்பத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட 'ஆட்கள் தேவை' விளம்பரம் தற்போது திருப்பூர் தொழிலாளர் சந்தையில் பரபரப்பையும், திருப்பூர் பின்னலாடை தொழில் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நிலை குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

காரணம், பேட்லாக் டைலர் தேவை என்று ஒரு குறுந்தொழிலகம் வெளியிட்ட அந்த விளம்பரத்தில், வேலைக்கு வருகிறவர்களுக்கு பகலிலும், இரவிலும் இலவசமாக மது வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததே இந்தப் பரபரப்புக்குக் காரணம்.

News image

ஊதியம் எவ்வளவு என்பதைக்கூட குறிப்பிடாத அந்த விளம்பரம் "பேட்லாக் டைலர் தேவை. மதியம் ஒரு கட்டிங், இரவு ஒரு குவார்ட்டர், டீ காசு உண்டு" என்று குறிப்பிட்டு, கீழே தொடர்பு கொள்ளவேண்டிய எண்ணையும் தந்திருந்தது.

இது பற்றித் தொடர்பு கொண்டு கேட்பதற்காக, பிபிசி தமிழின் சார்பில் முயன்றபோது அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

குவார்ட்டர் - கட்டிங் விளம்பரம்
படக்குறிப்பு, சர்ச்சைக்குரிய வேலை விளம்பரம்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் எம்.பி.முத்து ரத்தினத்தை தொடர்பு கொண்டு கேட்டது பிபிசி தமிழ்.

அந்த விளம்பரத்தை வெளியிட்டது பெரிய நிறுவனமெல்லாம் இல்லை. சிறிய தொழில் அலகுதான் என்றார் அவர். இந்த விளம்பரத்தை வெளியிட்டவுடன் ஆர்வத்துடன் பலர் அந்த வேலைக்கு வர முயன்றதாகத் தகவல் வந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளி.
படக்குறிப்பு, திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளி. (கோப்புப் படம்)

ஆனால், இது தொழிலாளர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ளுகிற செயல் என்று கூறிய அவர், இது திருப்பூருக்கு கெட்ட பெயரைப் பெற்றுத்தரும், இங்கே தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப பெற்றோர் அஞ்சும் சூழ்நிலையை உருவாக்கும் என்று வருத்தம் தெரிவித்தார்.

"திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் 40 சதவீதம் அளவுக்கு தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. அதே நேரம் தமிழ்நாட்டிலேயே டாஸ்மாக் மூலம் மதுபானம் விற்பனையாவது அதிகமாக உள்ள நகரங்களில் ஒன்றாக திருப்பூர் உள்ளது. அரசியல்வாதிகளால் நடத்தப்படும் மதுபானக்கூடங்கள் (பார்) 24 மணி நேரமும் செயல்படுகின்றன.

மற்ற ஊர்களைப் போல இல்லாமல் இங்கே தொழிலாளர்களுக்கு வாராவாரம் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனாலும், தினமும் வேலையை முடித்துவிட்டுப் போகும்போது தொழிலாளர்களுக்கு அவர்கள் ஊதியத்தில் இருந்து சுமார் ரூ.200 தரவேண்டிய நிலையும் இருக்கிறது. இந்தப் பணம் மதுக்கடைகளுக்கே செல்கிறது. வாரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை.

ஆனால், இந்த மதுப்பழக்கம் காரணமாக தொழிலாளர்கள் வாரத்துக்கு 3 நாள்கள் வராத நிலையும் ஏற்படுகிறது. இது தொழிலாளர்கள் உடல் நலனைப் பாதிப்பதோடு, தொழிலையும் பாதிக்கிறது. இயந்திரங்கள், தொழிலகங்கள், முதலீடு எல்லாம் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தும் அளவுக்கு தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது" என்று கூறினார் முத்து ரத்தினம்.

முத்துரத்தினம்
படக்குறிப்பு, முத்து ரத்தினம்

இந்தப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று கேட்டபோது, "திருப்பூர் நகரில் போதிய அளவு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்தவேண்டும். தொழில்துறை, தொழிலாளர் தரப்பு, அரசு, அரசியல்வாதிகள் ஆகிய தரப்புகள் ஒன்று சேர்ந்து தொழிலாளர்களுக்கு கவுன்சலிங் போன்ற வசதிகளை வழங்கவேண்டும். டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்கவேண்டும். எடுத்துக்காட்டாக மாலை 5 மணி முதல் 10 மணி வரை மட்டும் மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கலாம்.

தொழிலாளர் பற்றாக்குறையால் பெரிய பெரிய நிறுவனங்களுக்குப் பாதிப்பு இல்லை. அவர்களால் ஹாஸ்டல் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தொழிலாளர்களை தருவித்து தங்கவைக்க முடியும். தேவையெனில் தொழிலகத்தை வேறிடத்துக்கு கொண்டு செல்ல முடியும். ஆனால், திருப்பூரில் செயல்பட்டுவரும் சுமார் 10,000 சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு இந்த வசதி இல்லை. அவர்களுடைய பிரச்சனையைத் தீர்க்கவழி தேடவேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

45 வயதுக்கு மேல் வேலை செய்ய முடிவதில்லை

இந்த விளம்பரம் தொழிலாளிகளை இழிவுபடுத்தும் செயல் என்கிறார் சி.ஐ.டி.யு. பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சம்பத். "தொழிலாளர்களுக்கு ஒழுங்காக சம்பளம் தர முடியாதவர்கள், குவார்ட்டர் வாங்கித் தருவதாக விளம்பரம் செய்கிறார்கள்," என்கிறார் அவர்.

திருப்பூரில் பின்னலாடைத் தொழிலுக்குப் போதிய தொழிலாளர்கள் இல்லாத பற்றாக்குறை நிலவுகிறதே என்று கேட்டதற்கு, "தொழிற்சாலைகளில் நிரந்தர வேலைக்கு ஆள்கள் எடுப்பதில்லை. வருகிற தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 முதல் 250 வரை ஊதியம் தருகிறார்கள்.

திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளி.
படக்குறிப்பு, திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளி.

குடும்பத்தோடு இங்கு வந்துவிடுகிற தொழிலாளிக்கு இந்த ஊதியம் போதாது. எனவே, குடும்பத் தேவைக்கு 12 மணி நேரம், 16 மணி நேரம் என்று தொடர்ந்து வேலை செய்கிறார்கள். இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்தியாவிலேயே தொழிலாளர்கள் மத்தியில் அதிகம் தற்கொலைகள் நடக்கும் நகரமாக திருப்பூர் உருவானது. சிறு வயதில் இந்த தேவைகளுக்கு தொழிலாளிகளால் ஈடுகொடுக்க முடியும். 40-45 வயது ஆகும்போது உற்பத்தித் திறன் குறையும்.

இதனால், முதலாளிகளும் அவர்களை வைத்துக்கொள்ள மாட்டார்கள். உழைத்து உழைத்து சக்தியெல்லாம் இழந்து தொழிலாளர்களாலும் இந்த வேலைத் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாது. எனவேதான் இங்கு 40- 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளிகளைப் பார்க்கவே முடியாது. இப்படி 40-45 வயதுக்கு மேல் தொழிலாளிகள் வெளியேறிக் கொண்டே இருப்பதால் தினம், தினம் இங்கே இளம் வயதில், தொழில் திறன் உள்ள தொழிலாளிகள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதுதான் பிரச்சனை. அதனால்தான் தொழிலாளர் பற்றாக்குறை இருக்கிறது," என்றார் சம்பத்.

முத்தரப்பு ஒப்பந்தம்

இது தவிர, தரவேண்டிய ஊதியத்தையும் சரிவர தராத பல நிறுவனங்கள் உள்ளன. வாராவாரம் சனிக்கிழமை ஊதியம் தரவேண்டும். சனிக்கிழமை தராமல், ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வந்தால்தான் ஊதியம் தருவோம் என்று சொல்கிற நிறுவனங்கள் இருக்கின்றன. இதெல்லாம் தொழிலாளர்களுக்கு மன உளைச்சலைத்தான் தரும்.

சம்பத்
படக்குறிப்பு, சம்பத்

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 350 ரூபாய் சம்பளம் தரவேண்டும் என்று பின்னலாடைத் தொழில் முதலாளிகள், தொழிற் சங்கங்கள், அரசு ஆகியோர் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இதனை முதலாளிகள் செயல்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக பீஸ் ரேட் அடிப்படையில் வேலையை பிரித்துக் கொடுப்பது, புரோக்கர் முறையில் 10-15 தொழிலாளர்களுக்கான சம்பளத்தை புரோக்கர் மூலமாகத் தருவது என்று பலவகையில் தொழிலாளர் உரிமைகள் மீறப்படுகின்றன.

பின்னலாடைத் தொழிலதிபர்கள் பீஸ்ரேட் முறையை ஒழிப்பதாக ஒப்புக்கொண்டார்கள். ஆனால் செய்யவில்லை. ஒரு தொழிலாளியை அழைத்துவந்தால் சேர்த்தால் ரூ.1,000 தருவதாக போர்டு வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் ஒழுங்காக ஊதியம் கொடுத்தால் தங்களுக்குத் தேவை எனில் தொழிலாளர்கள் அவர்களே குடித்துக்கொள்வார்கள் இவர்களிடம் குவார்ட்டர் கேட்கமாட்டார்கள். இங்கே நிலவும் மோசமான பணிப் பண்பாடுதான் பிரச்சனை என்றார் சம்பத்.

முதலாளிகள் போட்டி நிறைந்த சந்தையில் குறிப்பிட்ட உற்பத்திச் செலவுக்குள் செயல்பட்டாக வேண்டியிருக்கிறது. மறுபுறம் தொழிலாளிகளுக்கு உரிய ஊதியம், பணிச்சூழல் தேவையாக இருக்கிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று கேட்டபோது, "பின்னலாடை நிறுவனங்கள் பெரிதாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை. சட்டப்படி நடந்துகொண்டால் போதும். ஓரளவு ஒருங்கிணைந்த அளவில் செயல்படும் நிறுவனங்கள், தொழிற்சங்கமாக நாங்கள் செயல்பட முடிகிற நிறுவனங்களில் ஊதிய நிலை, வேலை நேரம் ஆகியவை மேம்பட்ட நிலையில் உள்ளன.

அத்தகைய நிறுவனங்களில் 40-45 வயதுக்கு மேல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். உண்மையில் இங்கே பல நிறுவனங்களில் நிர்வாக அமைப்பு சரியில்லை. ஒருபுறம் கார்ப்பரேட் பாணியில் செயல்படுவதாகக் கூறிக்கொண்டு ஏகப்பட்ட ஆடம்பர செலவுகளும், நிர்வாகச் செலவுகளும் செய்கிறார்கள். மறுபுறம் தொழிலாளர்கள் ஊதியம், வேலைப் பண்பாடு மேம்படவில்லை. எனவே, தொழிலாளர்களுக்கு உரிய ஊதியமும், பணிச்சூழலையும் வழங்குவதால் செலவு அதிகமாகிவிடும் என்று கூறுவதை ஏற்க முடியாது. கவனக் குறைவும், அதீத ஆசையுமே நிர்வாகச் சிக்கல்களுக்கு காரணம்" என்று கூறினார் சம்பத்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: