கொரோனா: 45 வயதுக்கு மேற்பட்டோர் 100% தடுப்பூசி செலுத்தி கொண்ட புதுவை கிராமம்

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுச்சேரியைச் சேர்ந்த புதுக்குப்பம் கிராமம், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட காரணத்தினால் கடந்த நான்கு வாரங்களாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த கூடுதல் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு துரிதப்படுத்தியுள்ளது.
இருப்பினும் பொதுமக்களில் ஒரு சிலர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டி வருவதால் கிராம வாரியாக பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முகாம்கள் அமைக்கப்பட்டு 100% தடுப்பூசி செலுத்த புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

அதன்படி முதலாவது கிராமமாக புதுச்சேரி ஏம்பலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்குப்பம் கிராமத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கியது.
இந்த கிராமத்தில், 157 குடும்பங்கள் இருக்கின்றன. இதில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 125 பேரும், 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 250 பேரும் உள்ளனர். குறிப்பாக புதுக்குப்பம் கிராமத்தில் தடுப்பூசி போடத் தொடங்கிய நாட்களிலிருந்தே, அதிகப்படியான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
எனவே அந்த கிராமத்தில் 100% அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது சுலபமாக இருக்கும் என்பதால் அங்கிருக்கும் பொதுமக்களை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் சுகாதாரத்துறை மூலமாக அணுகி அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதனால் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டோர் 100% தடுப்பூசி எடுத்துக் கொண்ட கிராமம் என அறிவிக்கப்பட்டது. புதுக்குப்பம் கிராமத்திற்கு 100% தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார்.

இதுகுறித்து பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "புதுவையில் முதல் முறையாக 100% தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள கிராமமாக புதுக்குப்பம் கிராமம் இருக்கிறது. இங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதினால் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதனால் இக்கிராமம் உலகத்திற்கே முன்மாதிரியாக இருக்கிறது. தடுப்பூசி அதிகமாகப் போட்டுக்கொண்டால், கொரோனா வராது என்பதற்கு இந்த கிராமம் முன் உதாரணமாக திகழ்கிறது. புதுச்சேரி மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களில் உள்ள கிராமங்களிலும் இதே போல அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்," என தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தினார்.
புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் இதுகுறித்து கூறுகையில், "ஆரம்பத்தில் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள எங்களது கிராமத்தில் அச்சப்பட்டனர். பின்னர் சிலர் அவரவர் அலுவலகங்கள் மூலமாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதையடுத்து மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்தும், தடுப்பூசி குறித்தும் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து முகாம்கள் நடத்தி வருகிறது. அந்த முகாம்களுக்கு செல்லவே மக்கள் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினர். பின்னர் ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் கிராம மக்களிடம் எடுத்துக் கூறினோம்.
செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் சில விஷயங்களைப் பார்த்து மக்களுக்கு மனதில் பயம் ஏற்பட்டது. இந்த பயத்தை போக்குவதற்கு இதே கிராமத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும், அரசு தரப்பிலும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்," என்றார் அவர்.

முதலில் எங்களுக்கு நெருக்கமானவர்களைத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு நம்பிக்கையூட்டினோம். அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதையடுத்து அவர்கள் தொடர்பிலிருந்தவர்கள் தடுப்பூசி போடத் தொடங்கினர்" என கூறுகிறார் பச்சையப்பன்.
"இது படிப்படியாக அதிகரித்து தற்போது எங்களது கிராமத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முயற்சியில் முன் வந்தால் மட்டுமே இதனை முழுமையாக செய்ய முடியும். அரசால் அனைத்தையுமே செய்துவிட முடியாது. மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அப்படியே இருந்துவிடாமல், தடுப்பூசி போடாத மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்," எனத் தெரிவித்தார் பச்சையப்பன்.
புதுச்சேரியில் நாங்கள் வாழும் கிராமம் கொரோனா தொற்று இல்லாத கிராமமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகிறார் புதுக்குப்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பிரவீனா.
"எங்களது கிராமத்தில் பெரியவர்கள் அனைவரும் 100% தடுப்பூசி எடுத்துக் கொண்டதால், இளைஞர்களாகிய எங்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்போது கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்கிறோம். புதுச்சேரிக்கு முன் மாதிரியாக இருக்கும் எங்கள் கிராமத்தைப் போன்று, புதுச்சேரியில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்தியாவிற்கே புதுச்சேரியை முன்மாதிரியாக மாற்றுவோம்," என்கிறார் பிரவீனா.
புதுக்குப்பம் கிராமத்தை ஒரு முன்மாதிரி கிராமமாக உருவாக்கினால், மற்ற கிராமத்தைச் சேர்ந்தவர்களும் 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வருவார்கள் என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து மக்களிடையே அரசு சார்பில் முகாம்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக துணை மாவட்ட ஆட்சியர் கிரி தெரிவித்தார்
"100% தடுப்பூசி போட்டுக்கொண்டதன் மூலமாக இந்த கிராமத்தில் கடந்த 4 வாரங்களாக 45 வயது மேற்பட்டவர்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. எனவே இந்த கிராமத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும்," என துணை மாவட்ட ஆட்சியர் கிரி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- கங்கைக் கரை மணலில் புதைக்கப்பட்ட பெருமளவு சடலங்கள் – பாரம்பரியமா?
- சைப்ரசிலிருந்து மலேரியாவை விரட்டியடித்த வரலாற்று நாயகனின் கதை
- ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பெரிய மாநிலங்களுக்கு கூடுதல் வாக்கு வேண்டும்: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கும்
- மு.ஆனந்தகிருஷ்ணன்: அணு கொள்கையில் உதவியது முதல், கணினி தமிழ்ப் பணி வரை
- இந்த வேகத்தில் போனால் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட எவ்வளவு காலம் ஆகும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












