கொரோனா தடுப்பூசி: இனி 18 வயதை கடந்தால் போடலாம் - எப்போது முதல் அமல்?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இனி 18 வயது கடந்த அனைவரும் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது இந்திய அரசு. ஆனால், அந்த அனுமதி வரும் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி திங்கட்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோருடனும் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய பிரதமர், குறுகிய காலத்தில் அதிக அளவிலான குடிமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைப்பது குறித்து நீண்ட நாட்களாக அரசு திட்டமிட்டு வந்ததாக கூறினார்.

இதையடுத்து தடுப்பூசி மருந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விலையில் கிடைப்பது, அரசு மருத்துவ நிலையங்களில் இலவசமாக வழங்குவது, அந்தந்த மாநிலங்களில் உள்ளூர் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி கொள்முதல் மற்றும் அது கையிருப்பில் இருப்பதை உறுதிப்படுத்துவது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

வரும் மே 1ஆம்தேதி முதல் 18 வயதை கடந்த அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். இதற்கு ஏற்ப தங்களுடைய தடுப்பூசி உற்பத்தியை தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகரிக்கும் என்றும் இந்த முயற்சியில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் அவற்றின் பங்களிப்பை வழங்கும் என்று பிரதமர் மோதி கூறினார்.

மாநில அரசுகள் நேரடியாக அந்தந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்ய அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என்றும் 18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் வகையில் அவை தகுதி அல்லது பிரிவுகளை தளர்த்தலாம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை நாடு முழுவதும் சில கட்டுப்பாடுகளுடன் இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்படி முதலில் வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள், அவர்களைத் தொடர்ந்து 60 வயதை கடந்தவர்கள், பிறகு 45 வயதை கடந்தவர்கள் என இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. இருந்தபோதும், நாடு தழுவிய அளவில் எதிர்பார்த்த அளவில் தடுப்பூசி போட பலரும் ஆர்வம் காட்டாத நிலையில், தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு பல வடிவங்களில் ஊக்குவித்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்டமாக வைரஸ் தடுப்பூசி போட ஊக்குவிக்கும் உத்தியை அரசு வெளியிட்டுள்து. அதன்படி இனி 18 வயதை கடந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த கட்டுப்பாடு தளர்வு வரும் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அன்றைய தினம் வைரஸ் தடுப்பூசி திட்டத்தின் மூன்றாவது கட்டம் அமலுக்கு வருவதால், அதன் பிறகு இந்த திட்டத்தை நாடு தழுவிய அளவில் விரைவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சினுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இது தவிர ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட பயன்படுத்தப்படுகிறது.

இது தவிர, ரஷ்யாவின் ஸ்பூட்னிக் V தடுப்பூசியை பயன்படுத்தவும் இந்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியிருக்கிறது. இதுமட்டுமின்றி மேலும் சில வைரஸ் தடுப்பூசி நிறுவனங்களும் அவற்றின் தயாரிப்புக்கு அனுமதி பெறுவதற்கான நடைமுறைகளை தொடங்கியிருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: