கேரளாவில் கொரோனா வைரஸ்: இந்தியாவில் சமூகப் பரவலை நெருங்கிவிட்டதாக தெரிவிக்கும் முதல் மாநிலம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசிக்காக
இந்தியாவிலேயே முதல்முறையாக தங்களது மாநிலத்தில் "கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டதாக" கேரள அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உடனடியாக குறைவதற்கு வாய்ப்பில்லாத காரணத்தினால், தொற்றுநோய் தடுப்பு தொடர்பான சட்டத்தை 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் முதல் பகுதியாக, அந்த மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, "சமூகப் பரவல் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று நம்மால் சொல்ல முடியாது. ஆனால், நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பு இல்லாதவர்கள் மற்றும் பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கு கூட தற்போது அதிகளவில் நோய்த்தொற்று ஏற்படுவதால் நாம் சமூகப் பரவல் என்னும் நிலையை நெருங்கிவிட்டோம் என்றே கூறலாம்" என்று கூறினார்.
"கொரோனா உறுதிசெய்யப்படாதவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த பல மருத்துவர்களுக்கு சமீபத்திய நாட்களில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கேரளாவை பொறுத்தவரை, கோவிட்-19 நோயாளிகளில் 30-50 சதவீதத்தினருக்கு எவ்வித அறிகுறியும் காணப்படுவதில்லை. இது மிகவும் சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளது," என்று கூறுகிறார் இந்திய மருத்துவ கழகத்தின் கேரள மாநில பிரிவின் துணைத் தலைவரான மருத்துவர் சுல்பி.

பட மூலாதாரம், Getty Images
"கொரோனா வைரஸ் பரவல் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும் என்று நம்மால் உறுதிபட கூற முடியாது" என்பதால் அவசர சட்டத்தை அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்துள்ளதாக ஷைலஜா கூறினார்.
நாடு முழுவதும் அமலில் இருந்த முழு பொது முடக்கம் முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் 4.1 லட்சம் கேரள மக்கள் தாயகத்திற்கு திரும்பியுள்ளனர். இதேபோன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோரும் கேரளாவிற்கு திரும்பியுள்ளனர்.


"இவ்வாறு வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களிருந்து இருந்து கேரளாவுக்கு வந்தவர்களில், இதுவரை ஐந்தாயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறுகிறார்.
கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) 200க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் நோய்த்தொற்று பரவலின் மூலமாக கண்டறியப்பட்டுள்ள ஒரு கிடங்கு மற்றும் சந்தை ஆகியவை மூடப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகிறார்.
" கொரோனா வைரஸின் உள்ளூர் பரவலையும், இறப்பு விகிதத்தையும் கேரளா குறைத்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவிலும் இதே சூழ்நிலை எட்டப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இல்லையெனில் அங்கிருந்து நிறைய மக்கள் கேரளாவிற்கு வந்தால் புதிய சிக்கல்கள் உருவாக கூடும்" என்று அவர் கூறுகிறார்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை உள்ளூர் குழுக்கள் வாயிலாக தீவிரமாக கண்காணித்ததன் காரணமாகவும், காவல்துறையினர் திறம்பட செயல்பட்டதாலும் கேரளாவில் கோவிட்-19 நோய்த்தொற்று கட்டுக்குள் இருப்பதாக ஷைலஜா கூறுகிறார். "முதலைமைச்சர் பினராயி விஜயனால் ஏற்படுத்தப்பட்ட தன்னார்வலர்கள் குழுவை சேர்ந்தவர்கள் வீடுவீடாக சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணித்ததின் விளைவாக பலன் கிடைத்துள்ளது."
நாடு தழுவிய முழு பொது முடக்கநிலை முடிவுக்கு வந்தபோது, கேரளாவில் வெறும் மூன்று பேர் மட்டுமே இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்திருந்தார்கள். "ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்து பிறகு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் ஒருசில நாட்களிலேயே இறப்பதே இதற்கு முக்கிய காரணம்" என்று அவர் கூறுகிறார்.
"இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் சராசரியாக 14 சதவீதத்தினருக்கு நோய்த்தொற்றுக்கான மூலத்தை கண்டறிய முடியாத சூழ்நிலையில், அது கேரளாவில் வெறும் ஒன்றை சதவீதமாகவே உள்ளது."
எனவே, தற்போதைய சூழ்நிலையை கேரளா மிகைப்படுத்திக்கொள்கிறதா என்று கேட்டதற்கு, "கேரளா ஒவ்வொரு முறையும் தேவைக்கு அதிகமாகே பிரச்சனையின் வீரியத்தை எடுத்துக்கொள்கிறது. நாங்கள் தேவைக்கு அதிகமாகவே செயல்பட விரும்புகிறோம். இல்லையெனில், கொரோனா வைரஸை நம்மால் எதிர்கொள்ள முடியாது. வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி அதுதான். மோசமானதை நாம் எதிர்பார்த்து அதற்கேற்றவாறு தயாராக வேண்டும்.'' என்று கூறுகிறார் ஷைலஜா.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:
- பிரிட்டனில் மீண்டும் பார்கள் திறப்பு: ‘குடிப்பவர்களால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியவில்லை’
- கொரோனா வைரஸ்: ’ஆகஸ்டு 15 தேதிக்குள் தடுப்பு மருந்து - ஐசிஎம்ஆர் அறிவிப்பால் நிறுவனங்களுக்கு நெருக்கடி’
- அமேசான் காடுகளில் உள்ள ஒரு டீஸ்பூன் மண்ணில் 400 பூஞ்சைகள் - வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்
- கொரோனா வைரஸ்: சில நாடுகளில் தொற்று அதிகரிக்கவும், குறையவும் என்ன காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












