கொரோனா வைரஸ்: ’ஆகஸ்டு 15 தேதிக்குள் தடுப்பு மருந்து - ஐசிஎம்ஆர் அறிவிப்பால் நிறுவனங்களுக்கு நெருக்கடி’

கொரோனா பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சோதனை முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என மத்திய அரசு கூறி உள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தடுப்பூசிகள் மற்றும் பொதுவான மருந்துகளை தயாரிக்கும் முன்னணி நாடான இந்தியா இந்த பந்தயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில் அதிவேகம் எடுத்துள்ளது. நேற்று தொடர்ந்து 3-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்துள்ளது. ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 850 ஆக உள்ளது. இதில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகம், அசாம், ஆகிய மாநிலங்கள் மட்டுமே 78 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான மனித மருத்துவ பரிசோதனைகளுக்கான ஒப்புதல் வழங்கபட்டு உள்ளது.

இந்தியாவில் தயாராகும் முதல் தடுப்பு மருந்து இது. இதனால் இது மத்திய அரசு மேற்பார்வையில் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்புடன் தயாராகி வருகிறது. அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி தயாராகி விடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவிப்பு, மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் நடைபெறும் முக்கியமான தேர்தல்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் செல்வாக்கை பெற தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. சோதனைகள் மூலம் மருந்துகளை விரைந்து கொண்டுவருவது கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

கொரோனா வைரஸ் தடுப்பூசியை வெளியிடுவதற்கான இலக்காக ஆகஸ்ட் 15 - சுதந்திர தினத்தை நிர்ணயிக்கும் ஐ.சி.எம்.ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) எழுதிய கடிதம் குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது. அதில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சோதனை முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என கூறி உள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

'சென்னையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம்' - இந்து தமிழ் திசை

சென்னை

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் இன்று (ஜூலை 6) முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டாலும் மக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் போலீஸார் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணியை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று (ஜூலை 5) பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''முழு ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டாலும் மக்கள் அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது குறித்து வியாபாரிகள் உள்ளிட்டோருடன் சென்னை காவல் மாவட்டத்தில் உள்ள 12காவல் மாவட்ட துணை ஆணையர்கள் ஏற்கனவே ஆலோசித்துள்ளனர்.

மாதவரம் பூ, பழ சந்தை, காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை மீன்சந்தைகளில் நெரிசலைக் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தேவைப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

சென்னையில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 87 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம்'' என்று ஆணையர் கூறினார்.

இதற்கிடையே, வணிகர்கள்கூட்டமைப்பு, தனியார் போக்குவரத்து, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், கோயம்பேடு காய்கறி, மலர், பழ வியாபாரிகள் சங்கம், பள்ளி மற்றும் வாடகை கார் உரிமையாளர்களுடன் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், நேற்று ஆலோசித்தார். பின்னர், அவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ஆட்டோவில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். வாடகை, டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளை மட்டுமே ஏற்றிக் கொண்டு சென்னை மண்டலத்துக்குள் இ-பாஸ் இன்றி பயணிக்கலாம்.விமானம், ரயில் பயணிகள் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி உண்டு.

ஆட்டோ மற்றும் கால்டாக்சிஓட்டுநர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வாகனத்தில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகளை வாகனத்தில் ஏற்றக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தினார்.

ஆளில்லா மைதானத்தில் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து அணி அறிவிப்பு : டைம்ஸ் ஆஃப் இந்தியா

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், வரும் புதன்கிழமையன்று நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து சென்றுள்ளது.

வரும் 8ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. மூத்த வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரண்டாவது குழந்தைக்குத் தந்தையாகப் போவதால் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில் 'ஆல்-ரவுண்டர்' பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பாண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல் போட்டி ஏஜெஸ் பௌல் மைதானத்தில் ரசிகர்கள் இன்றி மருத்துவப் பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. ஐசிசி-யின் கொரோனா விதிமுறைகளின்படி வீரர்கள் யாருக்காவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அவருக்குப் பதில் மாற்று வீரர்கள் களமிறங்குவார்கள் என்று கூறப்பட்டது. ஒன்பது மாற்று வீரர்களின் பட்டியலையும் இங்கிலாந்து அணி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :