ரேவதி: சாத்தான்குளம் தலைமைக் காவலருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், முக்கியமான தகவல்களை வழங்கிய தலைமைக் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பலர் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, சாத்தான்குளம் வழக்கில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினர். மேலும், காவலர் ரேவதியை தொடர்பு கொண்டு நாங்கள் பேச இருக்கிறோம். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ரேவதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்தவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டபோது, இந்த விவகாரத்தில் கோவில்பட்டி நீதிமன்றத்தில்தான் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால், அது இங்கிருந்து வெகு தூரத்தில் உள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கைதுசெய்தவர்களை தூத்துக்குடி நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி காவல்துறையினரின் நடவடிக்கை இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Twitter
விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
நீதித்துறை நடுவரிடம் தலைமைக் காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம், சம்பவ தினத்தன்று நடந்த விவகாரங்களை விரிவாக விவரிக்கிறது.
"லாக்-அப் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்"
லாக்-அப் மரணங்கள் தடுக்கப்பட வேண்டுமென்றும் அதை காவல்துறை ஆதரிக்கவில்லை என்றும் மனித உயிர்கள் மிகவும் மதிப்பு மிக்கது என்றும் தென்மண்டல காவல்துறை தலைவராக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட முருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.
"சாத்தான்குளம் பெண் தலைமை காவலர் ரேவதிக்கு அவரது கோரிக்கையின்படி, ஒரு மாதத்துக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பும் தேவையான பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
"தற்பொழுது சிபிசிஐடி சிறப்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறது அதற்கான முழு ஒத்துழைப்பை உள்ளூர் போலீசார் வழங்கி வருகின்றனர். ஒரு சில காவலர்கள் செய்யும் தவறை வைத்து அனைத்து காவலர்களையும் தவறாக கருதக்கூடாது. சாத்தான்குளம் விவகாரத்தில் கைது செய்யப்படும் காவலர்கள் அனைவரும் 48 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். காவல்துறையினருக்கு போதுமான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதை முறையாக பின்பற்றினாலே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது."
ரேவதி கூறியது என்ன?
நீதித்துறை நடுவரிடம் தலைமைக் காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம், சம்பவ தினத்தன்று நடந்த விவகாரங்களை விரிவாக விவரிக்கிறது.
கைதிகள் இருவரையும் அங்கிருந்த காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் அதில் லத்தி மற்றும் டேபிளில் கரை படிந்துள்ளதாகவும் அதனை அவர்கள் அழிக்க நேரிடும் என்றும் உடனடியாக அதனைக் கைப்பற்ற வேண்டுமென்றும் ரேவதி கூறியதாக நீதித்துறை நடுவர் இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வரும் விசாரணையின்போது கூறினார்.
"சாட்சி கூறிய லத்திகளைக் கைப்பற்றும் பொருட்டு அங்கிருந்த காவலர்களை லத்தியைக் கொடுக்கும்படி கூறியும் அவர்கள் காதில் ஏதும் விழாததுபோல இருந்தார்கள்'' என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார் நீதித்துறை நடுவர்.
''பிறகு கட்டாயப்படுத்தியதன் பேரில் அனைவரும் அவர்களது லத்தியைக் கொடுத்துவிட்டார்கள். அதில் மகராஜன் என்பவர் என்னைப் பார்த்து 'உன்னால் ஒன்றும்… முடியாதுடா' என்று என் முதுகுக்குப் பின்னால் என் காதில் விழும்படி பேசி, அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார்" என சாத்தான் குளம் நிலையத்தில் நடந்த சம்பவங்களை நீதித்துறை நடுவர் விவரித்துள்ளார்.
அங்கிருந்த சூழல் சரியில்லாததால் சாட்சியம் அளித்த தலைமைக் காவலர் ரேவதி கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் அவரிடம் பாதுகாப்பு குறித்து உறுதியளித்த பின் கையெழுத்துப் பெறப்பட்டதாகவும் நீதித் துறை நடுவர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
நீதித்துறை நடுவரின் இந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அறிக்கையில் உள்ள சம்பவங்கள் அடுத்தடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
வழக்கின் பின்னணி என்ன?
சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர்.
ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஜூன் 19ஆம் தேதியன்று பென்னீஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.
இதற்குப் பிறகு, பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜை கைது செய்த காவல்துறையினர், 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திங்கட்கிழமையன்று (ஜூன் 22) இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.
பிற செய்திகள்:
- சாத்தான்குளம் காவல் மரணங்கள்: ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் மூவர் கைது
- நரேந்திர மோதி சீன சமூக ஊடகத்தில் இருந்து விலகல்; பதிவுகள் நீக்கம்
- ரஷ்ய மக்கள் ஆதரவுடன் அதிகாரத்தை வலுவாக்கும் அதிபர் புதின்
- காஷ்மீர் தாக்குதல்: ரத்தம் தோய்ந்த முதியவரின் சடலத்தின் மீது 3 வயது சிறுவன் – நெஞ்சை உலுக்கும் படம், நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












