59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை: நரேந்திர மோதி வெய்போவில் இருந்து விலகல்

இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

தி இந்து: நரேந்திர மோதி சீன சமூக ஊடகத்தில் இருந்து விலகல்; பதிவுகள் நீக்கம்

சீனாவின் முன்னணி சமூக ஊடகமான வெய்போவிலிருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி விலகியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டிக் டாக், வீ சேட் , ஹெலோ உள்ளிட்ட சீனாவை சேர்ந்த 59 செல்பேசி செயலிகளுக்கு திங்கள்கிழமை, இந்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வெய்போவில் 115 முறை பதிவிட்டுள்ளார். அவற்றில் 113 பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன.

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் நரேந்திர மோதி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கொண்ட இரு பதிவுகள் மட்டும் நீக்கப்படாமல் உள்ளன என்று தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நரேந்திர மோதியின் கணக்கில் இருந்த அவரது புகைப்படமும் நீக்கப்பட்டது.

சீன அதிபர் ஜின்பிங்கின் புகைப்படம் உள்ள பதிவுகளை வெய்போ சமூக ஊடகத்தில் இருந்து நீக்குவது சிக்கலான காரியம் என்பதால் அவருடன் நரேந்திர மோதி எடுத்துக்கொண்ட படங்கள் நீக்கப்படவில்லை என்று தங்களுக்கு செய்தி கிடைத்துள்ளதாக தி இந்து கூறுகிறது.

நரேந்திர மோதியின் வெய்போ கணக்கு 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தக் கணக்கின் மூலம் சுமார் 2.44 லட்சம் பேர் நரேந்திர மோதியை பின்தொடர்ந்தனர்.

வாட்ஸ்அப் செயலி, ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்கள் மற்றும் இணைதளங்களுக்கு சீனாவில் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

தினத்தந்தி: "கொரோனில் மாத்திரையை உருவாக்குவதற்கு அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றினோம்"

பாபா ராம்தேவ்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க கொரோனில் மாத்திரையை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நெறிமுறைகளையும் தனது பதஞ்சலி நிறுவனம் பின்பற்றியதாக யோகா குரு பாபா ராம்தேவ் கூறி உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனாவை குணமாக்கும் மருந்து என கொரோனில் என்ற பெயரில் கடந்த 22ஆம் தேதி ராம்தேவ் அறிமுகப்படுத்திய மருந்தை விளம்பரம் செய்யக்கூடாது என தடுத்துள்ள ஆயுஷ் அமைச்சகம், மருந்து குறித்து பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க கொரோனில் மாத்திரையை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நெறிமுறைகளையும் தனது அமைப்பு பதஞ்சலி ஆயுர்வேதம் பின்பற்றியதாக யோகா குரு பாபா ராம்தேவ் புதன்கிழமை தெரிவித்தார்.

"நாங்கள் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றியுள்ளோம். இந்த நெறிமுறைகள் சுவாமி ராம்தேவ் அல்லது பதஞ்சலியால் அமைக்கப்பட்டவை அல்ல, ஆனால் நவீன மருத்துவ அறிவியலால் அமைக்கப்பட்டவை. அஸ்வகந்தா, கிலோய், துளசி ஆகியவற்றைப் பயன்படுத்தி கொரோனிலை உருவாக்கியுள்ளோம்.

100 சதவீத மீட்பு உத்தரவாதம் உள்ளது. நாங்கள் உருவாக்கிய கொரோனா கிட் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியும்" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினமணி: "நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களுக்குத் தடை"

நெடுஞ்சாலை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"சாலை கட்டுமான திட்டங்களில், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம். ஒருவேளை இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு நிறுவனமாக வந்தாலும், அவா்களுக்கு கட்டுமானத் திட்டப் பணிகளை வழங்குவதில்லை என உறுதியாக முடிவெடுத்துள்ளோம்.

நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளில், சீன நிறுவனங்களுக்கு தடை விதித்தும், இந்திய நிறுவனங்களை அனுமதிப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை தளா்த்தியும் புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

சீன நிறுவனங்களுடன் இணைந்து முன்பைக் காட்டிலும் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான சாலைத் திட்டங்களே நடைபெற்று வருகின்றன. எதிா்காலத்தில் புதிய கொள்கையின்படி திட்டங்கள் நிறைவேற்றப்படும்" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: