காஷ்மீர் தாக்குதல்: ரத்தம் தோய்ந்த முதியவரின் சடலத்தின் மீது 3 வயது சிறுவன் – நெஞ்சை உலுக்கும் படம், நடந்தது என்ன?

சிறுவனுடன் சி.ஆர்.பி.எப்

பட மூலாதாரம், TWITTER.COM/KASHMIRPOLICE

    • எழுதியவர், மஜீத் ஜெஹாங்கீர
    • பதவி, பிபிசி செய்தியாளர், ஸ்ரீநகர்

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சோபோர் என்னுமிடத்தில் புதன்கிழமை காலை தீவிரவாத தாக்குதல் நடந்தபோது ஒரு முதியவர் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த பேரன் தப்பிப் பிழைத்தான். அந்த சிறுவனின் படமும், காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்) சேர்ந்த தலைமைக் காவலர் தீப்சந்த் வர்மா இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். மேலும் மூன்று காவலர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்று டெல்லியில் வெளியான இப்படையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 179வது பட்டாலியனை சேர்ந்த, ஜி கம்பெனி துருப்புகள் இவை என்கிறது அறிக்கை.

சோபோர் நகரில் காலையில் நடந்த சி.ஆர்.பி.எப். ரோந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர்.

தமது தாத்தாவின் ரத்தம் தோய்ந்த உடல் மீது கிடக்கும் இந்தச் சிறுவனின் படம் இதயத்தை துளைப்பதாக இருந்தது. அந்தச் சிறுவனை ஒரு போலீஸ்காரர் தூக்கியபோது அவன் பயத்தில் வெளிறியிருந்தான். போலீஸ் வாகனத்தில் இந்தச் சிறுவன் அழுகிற வீடியோ ஒன்றும் வெளியானது. இந்த வீடியோவும், படமும் சமூக ஊடகத்தில் வைரலாயின.

பாதுகாப்பான இடத்துக்கு அந்தச் சிறுவனைக் கொண்டு சென்ற போலீசார் அந்தச் சிறுவனின் படத்தை ட்வீட் செய்தனர். ஸ்ரீநகரில் உள்ள கொல்லப்பட்ட பஷீர் அகமதுவின் குடும்பம் பாதுகாப்புப் படையினர் மீது தீவிர குற்றச்சாட்டுகளை வைக்கிறது.

சம்பவ இடம்

பட மூலாதாரம், MOHAMMAD ABU BAKER

"அவர் காரில் இருந்து வெளியே வரும்படி கூறப்பட்டு, சி.ஆர்.பி.எப். படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்" என்று பிபிசியிடம் கூறினார் கொல்லப்பட்டவரின் மனைவி.

"துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து பொதுமக்கள் எங்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவித்தனர். அவர் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும்போது சுடப்பட்டிருந்தால் காருக்கு உள்ளேதானே அவர் உடல் கிடந்திருக்கும். காரில் இருந்து சில மீட்டர்கள் தள்ளி அவர் உடல் இருந்ததற்கு காரணம் என்ன?" என்று பிற குடும்ப உறுப்பினர்கள் கேட்கிறார்கள்.

ஆனால், "சோபோரில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றின்போது குண்டு தாக்காமல் 3 வயது சிறுவனை ஜம்மு காஷ்மீர் போலீசார் மீட்டனர்" என்று போலீஸ் ட்வீட் செய்துள்ளது.

குழந்தையைக் காப்பதே எங்கள் முன்னுரிமையாக இருந்தது. பயங்கரவாதிகள் எங்கள் மீது சுட்டுக்கொண்டிருந்தார்கள் என்பதால் இது மிகவும் சவாலான பணியாக இருந்தது என சோபோர் நிலைய அதிகாரி அஜிம் கான் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.

அகமதுவை பாதுகாப்புப் படையினரே கொன்றுவிட்டு, குழந்தையை சடலத்தின் மீது வைத்து அவர்களே படம் எடுத்ததாகவும், அந்தப் படமே தற்போது வைரலாகி இருப்பதாகவும் இறந்தவரின் மனைவி கூறுகிறார். சி.ஆர்.பி.எப். கூடுதல் தலைமை இயக்குநர் ஜுல்பிகர் அலி இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.

"நானும் எங்கள் ஐ.ஜி.யும் இப்போதுதான் சம்பவ இடத்தில் இருந்து திரும்புகிறோம். இடத்தையும், மற்ற எல்லாவற்றையும் நாங்கள் ஆய்வு செய்தோம். இந்த குற்றச்சாட்டெல்லாம் பொய். காலைத் தொழுகைக்குப் பிறகு தீவிரவாதிகள் மசூதியை கைப்பற்றினார்கள். சி.ஆர்.பி.எப். அங்கே சென்றபோது தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுட்டார்கள். மரணமடைந்த குடிமகன் ஒரு வண்டியில் போய்க்கொண்டிருந்தார். எனவே அவர் மாட்டிக்கொண்டார் (துப்பாக்கிச் சண்டையில்). தீவிரவாதிகள் சுட்டபோது அந்த இடத்தை அவரது கார் கடந்து செல்லவிருந்தது. எனவே தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டு அவரைத் தாக்கியது என்பதுதான் நாங்கள் புரிந்துகொண்டது. அவரை சி.ஆர்.பி.எப். சுடவோ, இழுத்துப் போடவோ இல்லை" என்கிறார் அவர்.

ஒருவேளை பயந்துபோன பஷீர் அகமது காரை நிறுத்திவிட்டு எங்காவது பாதுகாப்பாக ஓடிவிட முயற்சி செய்திருக்கலாம். அந்த நேரத்தில் அவரை தீவிரவாதிகளின் குண்டு தாக்கியிருக்கலாம். "ரொம்ப தூரத்தில் உட்கார்ந்துகொண்டு இருந்தவர்கள், சி.ஆர்.பி.எப். அவரைக் கொன்றுவிட்டதாக அளவுக்கு மீறி கதை கட்டுகிறார்கள்" என்று கூறினார் அலி.

குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டது பற்றி குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கும் வகையில் புலன்விசாரணை நடத்தப்படவேண்டும் என்கிறது ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி.

கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் கூறுவதில் இருந்தும், பூர்வாங்க சந்தர்ப்ப சாட்சியங்கள் காட்டுவதில் இருந்தும் பஷீர் பச்சைப் படுகொலை செய்யப்பட்டதாகவே தெரிகிறது. சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதற்கு காரணமான சூழ்நிலைகள் தொடர்பாக அரசு பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை நடத்த உத்தரவிடவேண்டும்" என்று அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

சில நாள்கள் முன்பு, தெற்கு காஷ்மீரின் பிஜ்பெஹரா பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப். சாவடி ஒன்றினை தீவிரவாதிகள் தாக்கியபோது 6 வயது சிறுவன் ஒருவன் குண்டு பாய்ந்து இறந்தான். அந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். ஜவான் ஒருவரும் இறந்தார்.

கடந்த இரண்டு மாதங்களில் நடந்த இரண்டு தீவிரவாத தாக்குதல்களில் தீவிரவாதிகள் மசூதிகளைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்றும், இத்தகைய துஷ்பிரயோகம் நடக்காமல் மசூதி கமிட்டிகள் தடுக்கவேண்டும் என்றும் காஷ்மீர் ஐ.ஜி. விஜய்குமார் தெரிவித்தார்.

(ஸ்ரீநகரில் உள்ள பிபிசி செய்தியாளர் அமீர் பீர்ஜாதா தந்த தகவல்களுடன்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: