தமிழக காவல் அதிகாரிகள் இடமாற்றம்: சென்னை ஆணையராகிறார் மகேஷ் குமார் அகர்வால்

பட மூலாதாரம், facebook
சுமார் மூன்றாண்டுகளாக சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்துவந்த ஏ.கே. விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மதுரை மாநகர ஆணையர் உள்பட 38 காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செவ்வாக்கிழமையன்று நள்ளிரவில் வெளியிட்ட இடமாற்றல் மற்றும் பதவி உயர்வு அறிவிப்புகளின்படி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், சென்னை ஆபரேஷன்ஸ் பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆணையராக, இதுவரை ஆபரேஷன்ஸ் பிரிவின் ஏடிஜிபியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல மதுரை நகர காவல்துறை ஆணையராக இருந்த எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் சென்னை காவல்துறை தொழில்நுட்ப சேவையின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் சென்னை சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த பிரேமானந்த் சின்ஹா மதுரையின் புதிய காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், facebook
மாநில மனித உரிமை ஆணையத்தின் டிஜிபியாக சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவின் ஏடிஜிபியாக இருந்த எம். ரவி, ஈரோட்டில் உள்ள சிறப்பு அதிரடிப்படையின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நகர கூடுதல் ஆணையராக இருந்த எச்.எம். ஜெயராம் திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜியாக இருந்த அமல்ராஜ், சென்னை நகர கூடுதல் ஆணையர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் சரகத்தின் டிஐஜி பி.சி. தேன்மொழி, ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பை ஈஸ்வரமூர்த்தி கூடுதலாகக் கவனித்துவந்தார்.
ஒட்டுமொத்தமாக 39 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












