சாத்தான்குளம்: ஊரடங்கு காலத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் அதிகரிக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சாத்தான் குளத்தில் கடையை கூடுதல் நேரம் திறந்திருந்ததற்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் கொல்லப்பட்ட சம்பவம், கொரோனாவுக்கான ஊரடங்கு காலத்தில் காவல்துறை தனது அதிகாரத்தைக் கூடுதலாகப் பயன்படுத்துகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இந்த மரண சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்புயிருக்கிறது. தந்தை ஜெயராஜும் மகன் பென்னிக்சும் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ஜெயராஜும் பென்னிக்சும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உடல்நலக் குறைவால் இறந்துபோனதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. அதாவது மகன் பென்னிக்ஸ் நெஞ்சு வலியாலும் தந்தை காய்ச்சலாலும் இறந்துபோனதாக காவல்துறை கூறுகிறது. இம்மாதிரி உடல்நிலை கொண்டவர்கள், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டபோது உடல்நிலை குறித்து நீதிபதி ஏதும் கேட்காமல் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டாரா, சிறையில் அடைப்பதற்கு முன்பாக இவர்களது உடல் நிலை பரிசோதிக்கப்படவில்லையா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் மாநிலக் காவல்துறைக்கு தமிழக மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
கொரோனா காலகட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக பொதுமக்கள், கடைக்காரர்கள் தாக்கப்படுவது தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்துவருகிறது. மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த அத்துமீறல்கள் குறித்து தொடர்ச்சியாக காவல்துறையிடம் கேள்வியெழுப்பிவருகிறது.
மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பிய சில சம்பவங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் ஏப்ரல் 7ஆம் தேதியன்று ஊரடங்கு காலகட்டத்தில் சாலையில் காவலில் இருந்த காவல்துறையினர் அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனங்களின் விளக்குகள், இன்டிகேட்டர்கள் ஆகியவற்றை அடித்து உடைத்தனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதும் இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி மாவட்ட காவல்துறை தலைவருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
ஜூன் 21ஆம் தேதியன்று காலையில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆவடி நோக்கி வந்த மின்சாரத் துறை ஊழியரிடம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இ - பாஸ் இருக்கிறதா எனக் கேட்டிருக்கின்றனர். தான் அத்தியாவசியப் பணிகள் துறையான மின்வாரியத்தில் இருப்பதாகக் கூறி அடையாள அட்டையைக் காண்பித்துள்ளனர். அதை ஏற்காத காவல்துறையினர் அவரை, அடித்து, உதைத்து கீழே தள்ளினர். அவர் காவல்துறையினரிடம் கெஞ்சக் கெஞ்ச அடிக்கும் காட்சிகள் வீடியோவாக சமூகவலைதளங்களில் பரவினர். இந்த விவகாரத்தை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், இது குறித்து விளக்கமளிக்கும்படி திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டது. இ - பாஸ் குறித்து காவல்துறையினருக்கு விளக்கும்படி காவல்துறைத் தலைவரையும் கேட்டுக்கொண்டது.

ஜூன் 21ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் கடையைக் கூடுதல் நேரம் திறந்து வைத்ததால் காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கைதுசெய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்தனர். இது மாநிலம் தழுவிய விவகாரமாக உருவெடுத்திருக்கிறது.
இதுதவிர, கடந்த 19ஆம் தேதி கோவையில் உள்ள ரத்தினபுரி பகுதியில் டிபன் கடை நடத்திவந்த தம்பதியும் அவர்களது மகனும் தாக்கப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி,விமர்சனத்திற்கு உள்ளானது. 15 வயது மகன், காவல்துறை அதிகாரியின் இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டதால் இந்த சம்பவம் நடந்தது. இந்த விவகாரத்தில், உயர் அதிகாரிகளின் அறிவுரைப்படி, சிறுவனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கப்பட்டது.
மேலே உதாரணமாகக் காட்டப்பட்டுள்ள சம்பவங்கள் பெரும்பாலானவற்றில் மாநில மனித உரிமை ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
"கொரோனா காலத்தில் இதுபோன்ற அடக்குமுறைகள் அதிகரித்திருக்கின்றன. எங்கள் கவனத்திற்கு வரும் விவகாரங்களுக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்புகிறோம். காவலர்கள் இதுபோல நடந்துகொள்ளக்கூடாது என அறிவுறுத்தும்படி காவல்துறை தலைவரிடமும் சொல்கிறோம்" என பிபிசியிடம் தெரிவித்தார் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல் தலைவர் துரை. ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
தற்போது தூத்துக்குடியில் நடந்துள்ள சம்பவம் தொடர்பாக தங்களுடைய புலனாய்வுப் பிரிவும் விசாரணைப் பிரிவும் விசாரணை நடத்தி, அரசுக்கும் காவல்துறைக்கும் தகவல் அளிக்கும் என துரை. ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24ஆம் தேதி முதல் காவல்துறை இப்படித்தான் செயல்படுகிறது. 144ஐ பயன்படுத்தி மக்களை அடிப்பது, வாகனங்களை அடிப்பது என இந்தியா முழுக்க அடக்குமுறை நடக்கிறது. அதுதான் தமிழ்நாட்டிலும் நடக்கிறது.
இந்த வியாபாரிகள் குற்றவாளிகள் கிடையாது. இவர்கள் கடையை மூடவில்லை. தகப்பன் அடிக்கப்பட்டிருக்கிறார். அதைக் கேட்ட மகனையும் அடித்திருக்கிறார்கள். அவரையும் குற்றவாளியாக சேர்த்திருக்கிறார்கள். கொல்லப்பட்ட இளைஞர் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் முடித்தவர்.
இந்த விவகாரத்தில் நீதிபதியும் குற்றம் புரிந்தவர்களுக்கு துணை போயிருக்கிறார். மருத்துவச் சான்றிதழ் இருக்கிறதா எனப் பார்த்திருக்க வேண்டும். நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக இவர்களை ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம் அதைக் கேட்கவில்லை.

இவர்கள் தவிர, கோவில்பட்டி துணைச் சிறையின் ஜெயிலரும் குற்றவாளி. அடிபட்டு வந்தவரை ஏன் சிறையில் ஏன் அனுமதிக்கிறார்கள்? இப்படி சட்டத்தை அமலாக்கும் எல்லா இடங்களிலும் தவறு நடந்திருக்கிறது" என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன்.
தற்போதைய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சப் - இன்ஸ்பெக்டர்களில் ஒருவர், பேய்க்குளத்தில் ஒருவரை தேடிப்போய், அவர் கிடைக்காததால் அவரது சகோதரரை அடித்துக் கொன்றிருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார் ஹென்றி. "அப்போதே காவல்துறை உயர் அதிகாரிகள் இதனை கவனித்திருந்தால் இந்த இரண்டு மரணங்கள் நடந்திருக்காது. ஒருவர் முகக் கவசம் அணியாவிட்டால் மோசமாகத் திட்டுகிறார்கள். இந்த நபர் எதிர்த்துப் பேசினாலே என்கவுன்டர் செய்வேன் என்கிறார். இப்படி இருந்தால் எப்படி சாதாரண மக்கள் வாழ முடியும்?" என்கிறார் ஹென்றி.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், சில காவல்துறையினர் தவறு செய்ததை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தக் காவல்துறையும் தவறு செய்ததாகக் குற்றம்சாட்டக்கூடாது என்கிறார் தமிழ்நாடு போலீஸ் அகாதெமின் முன்னாள் முதல்வரான சித்தண்ணன்.
"சில தனி நபர்கள் தவறு செய்வதால் எல்லோருக்கும் கெட்ட பெயர் வந்துவிடுகிறது. காவல்துறையினரை யாராவது பொது இடத்தில் எதிர்த்துப் பேசினால், அவர்ளது ஈகோ பாதிக்கப்படுகிறது. இது தவறுதான்" என்கிறார் அவர்.
ஆனால், காவல்துறை கடையை மூடச் சொல்லும்போது, மூட முடியாது என்று சொன்னால், அதைக் கேட்டுக்கொண்டு காவல்துறை சென்றுவிட முடியாது. அப்படிச் சென்றுவிட்டால் ஊரடங்கின் நோக்கம் நிறைவேறாது. இருந்தாலும் தூத்துக்குடி சம்பவத்தை ஒரு தனிப்பட்ட நிகழ்வாகத்தான் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.
மேலும், 1,27,000 பேர் இருக்க வேண்டிய காவல்துறையில் தற்போது 1,10,000 பேர்தான் இருக்கிறார்கள். காவலர்களுக்குக் கடுமையான பணிச் சுமை இருக்கிறது. அவர்களுக்கும் மனநல ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்கிறார் சித்தண்ணன்.
கடைக்காரர்கள் தவிர, சாலையில் நடந்துசெல்லும் பொதுமக்கள் தகாத வார்த்தைகளால் விரட்டப்படுவது போன்ற சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கின்றன. மார்ச் மாதம் ஊரடங்கு துவங்கிய காலகட்டத்தில் 'நூதன தண்டனை' என்ற பெயரில் அந்த இடத்திலேயே சில விசித்திரமான தண்டனைகளை காவலர்களே வழங்கினர். துவக்கத்தில் ரசிக்கப்பட்ட இந்த தண்டனைகள், ஒரு கட்டத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாயின.
தற்போது தமிழக காவல்துறை தலைவர் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையில், ஜாமீனில் விடத்தக்க குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்றும் இதற்கென மையங்களை உருவாக்கி அங்குதான் அழைத்துச் செல்ல வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உடனடியாக ஜாமீனில் விடப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












