சாத்தான்குளம்: அந்த இரவில் காவல்நிலையத்தில் நடந்தது என்ன? நீதித் துறை நடுவர் அறிக்கை

காவல்துறை தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜும் பென்னிக்சும் விடியவிடிய காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக நீதித் துறை நடுவரின் அறிக்கை தெரிவிக்கிறது. தான் விசாரணை மேற்கொண்டபோது அங்கிருந்த காவலர்கள் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும் நீதித் துறை நடுவர் தெரிவித்துள்ளார்.
சாத்தான் குளம் தந்தை - மகன் ஆகியோர் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த விசாரணை அறிக்கையில், சாத்தான் குளம் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையென்றும் மரியாதைக் குறைவாகவும் மிரட்டு வகையிலும் நடந்துகொண்டார்கள் என நீதித் துறை நடுவர் கூறியுள்ளார்.
சாத்தான் குளம் விவகாரத்தை விசாரணை செய்வதற்காக நீதித்துறை நடுவர் பாரதிதாசன் 28ஆம் தேதி காலை, நீதிமன்ற ஊழியர்களுடன் சென்றுள்ளார். அப்போது அந்தக் காவல் நிலையத்தின் ஆய்வாளர் அறையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் டி. குமாரும் மற்றொரு காவல்துறை அதிகாரியான சி. குமாரும் இருந்துள்ளனர்.
தான் உள்ளே நுழைந்ததும் எவ்வித வணக்கமோ, வரவேற்போ செய்யாமல் தனது உடல்பலத்தைக் காட்டுவதான அசைவுகளோடும் மிரட்டும் தொனியிலான பார்வையுடனும் டி. குமார் இருந்ததாக நீதித்துறை நடுவரின் அறிக்கை குற்றம்சாட்டுகிறது.
அங்கிருந்தவர்களிடம் பொது நாட்குறிப்பையும் பதிவேடுகளையும் கேட்டபோது அவற்றை சமர்ப்பிக்க முறையாக நடவடிக்கை எடுக்காமல், நிலையக் காவலர்களை ஒருமையில் திட்டியபடியே இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இதற்குப் பிறகு அவர்கள் வெளியில் இருக்கும்படி பணிக்கப்பட்டனர். பிறகு சம்பந்தப்பட்ட பதிவேடுகள் எழுத்தர் மூலம் கொண்டுவரச் செய்யப்பட்டன.

பட மூலாதாரம், TWITTER
அந்தக் காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பதிவிறக்கம் செய்வதற்காக மாவட்ட நீதிமன்றம், மாவட்ட நிர்வாகத்திலிருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுசெய்யப்பட்டது. அப்போது சிசிடிவி காட்சிகளைப் பதிவுசெய்வதற்கு ஹார்ட் டிஸ்க்கில் போதுமான நினைவகம் இருந்தும் தினமும் தானாக அழிந்துபோகும் அளவுக்கு அதன் செட்டிங் மாற்றப்பட்டிருந்தது என நீதித் துறை நடுவரின் அறிக்கை குறிப்பிடுகிறது.
இதற்குப் பிறகு மகாராஜா என்ற காவலரின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டபோது, அவர் கேள்விப்பட்ட செய்திகளை முறையாக வாக்குமூலமாக அளிக்கவில்லையென்றும் அதற்குப் பிறகு, தலைமைக் காவலரை சாட்சியளிக்க அழைத்தபோது மிகுந்த பயத்துடன், தான் சொல்வதை வெளியில் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாக நீதித் துறை நடுவர் தன் அறிக்கையில் பதிவுசெய்துள்ளார்.
இந்த நேரத்தில் நீதிமன்ற ஊழியர்கள் பாதுகாப்பிற்காக வெளியில் நிறுத்தப்பட்ட போதிலும், காவலர்கள் நிலையத்திற்கு அருகில் இருந்த வேப்பமரத்தடியில் நின்றபடி நீதிமன்ற ஊழியர்களைக் கிண்டல் செய்ததாகவும் சாட்சியங்களைப் பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுத்தியதாகவும் நீதித் துறை நடுவர் கூறியிருக்கிறார்.
நீதித்துறை நடுவரிடம் தலைமைக் காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம், சம்பவ தினத்தன்று நடந்த விவகாரங்களை விரிவாக விவரிக்கிறது.
"கைதிகள் இருவரையும் அங்கிருந்த காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் அதில் லத்தி மற்றும் டேபிளில் கரை படிந்துள்ளதாகவும் அதனை அவர்கள் அழிக்க நேரிடும் என்றும் உடனடியாக அதனைக் கைப்பற்ற வேண்டுமென்றும் கூறினார். சாட்சி கூறிய லத்திகளைக் கைப்பற்றும் பொருட்டு அங்கிருந்த காவலர்களை லத்தியைக் கொடுக்கும்படி கூறியும் அவர்கள் காதில் ஏதும் விழாததுபோல இருந்தார்கள்.’’
’’பிறகு கட்டாயப்படுத்தியதன் பேரில் அனைவரும் அவர்களது லத்தியைக் கொடுத்துவிட்டார்கள். அதில் மகராஜன் என்பவர் என்னைப் பார்த்து ’உன்னால் ஒன்றும் ..... முடியாதுடா’ என்று என் முதுகுக்குப் பின்னால் என் காதில் விழும்படி பேசி, அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார்" என சாத்தான் குளம் நிலையத்தில் நடந்த சம்பவங்களை நீதித் துறை நடுவர் விவரித்துள்ளார்.
அங்கிருந்த சூழல் சரியில்லாததால் சாட்சியம் அளித்த தலைமைக் காவலர் ரேவதி கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் அவரிடம் பாதுகாப்பு குறித்து உறுதியளித்த பின் கையெழுத்துப் பெறப்பட்டதாகவும் நீதித் துறை நடுவர் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை நடுவரின் இந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அறிக்கையில் உள்ள சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













