சாத்தான்குளம்: பணிநீக்கம் செய்யப்பட ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காவலர்

சித்தரிப்புப் ப்டம்

பட மூலாதாரம், Getty Images

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்ததால் உயிரிழந்தவிவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

முன்னதாக ஆய்வாளர் ஶ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் நேற்று உத்தரவிட்டார்.

புதிய ஆய்வாளராக பெர்னாட் சேவியர் நியமிக்கப்பட்டுள்ளார். இரு புதிய உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சாத்தான்குளம் சம்பவம் பற்றி முகநூலில் அவதூறு தகவல் வெளியிட்ட காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வணிகர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நடந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தையொட்டி சென்னையை சேர்ந்த காவலர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், அடுத்த ‘லாக்அப்’ டெத்துக்கு (போலீஸ் விசாரணையின் போது உயிரிழப்பது) ஆள் கிடைத்து விட்டது என்பது போன்று சில கருத்துக்களை பதிவு செய்து அவதூறான தகவல்களை வெளியிட்டிருந்தார். இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

விசாரணையில் அந்தக்காவலர் பெயர் சதீஷ்முத்து (வயது 25) என்று தெரிய வந்தது. அவர் சென்னை ஆயுதப்படை போலீசில் பணியில் உள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார்.

அவரை பணி இடைநீக்கம் செய்து சென்னை ஆயுதப்படை துணை ஆணையர் செளந்திரராஜன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: