சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: "காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரிக்கலாம்" - உயர் நீதிமன்றம்

Jeyaraj and Fenix

பட மூலாதாரம், Twitter

சாத்தான் குளம் தந்தை - மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ் - புகழேந்தி அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசுத் தரப்பு கூடுதல் வழக்கறிஞர், ஒருவார காலமாக இருந்த மன அழுத்தத்தின் காரணமாக சில சம்பவங்கள் நடந்துவிட்டதாகவும் வழக்கு தற்போது சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், இந்த வழக்கில் ஒரு விநாடியைக்கூட வீணாக்க விரும்பவில்லையென தெரிவித்த நீதிபதிகள், சி.பி.ஐ. இந்த வழக்கைப் பொறுப்பேற்கும்வரை, வழக்கை நெல்லை காவல்துறை விசாரிக்கலாம் எனக் கூறினர். பிறகு இந்த வழக்கு, பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் பிரேதப் பரிசோதனை அறிக்கை, நீதித் துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் நெல்லை மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் வழக்குப் பதிவுசெய்து விசாரணையைத் துவங்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காவல்துறைத் தலைவரின் முறையான கடிதத்திற்காகக் காத்திருக்காமல் உடனடியாக விசாரணையைத் துவங்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் இருப்பதால் சம்பந்தப்பட்டக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சாத்தான்குளம் நீதிபதியை அவதூறாகப் பேசிய டிஎஸ்பி, ஏடிஎஸ்பி இடமாற்றம்; காவலர் பணியிடை நீக்கம்

பட மூலாதாரம், Getty Images

இந்த விவகாரத்தில் முக்கிய சாட்சியமாகக் கருதப்படும் சாத்தான் குளம் காவல் நிலைய காவலர் ரேவதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் அந்தக் காவல் நிலையத்தில் சாட்சியங்கள் அழிந்துவிடாமல் இருக்க, அங்கு தூத்துக்குடி வருவாய்த் துறையிலிருந்து இரண்டு அலுவலர்களை நியமித்து கண்காணிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டர்.

வழக்கு ஜூலை 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்

சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஏபிஜே மொபைல்ஸ் என்ற பெயரில் ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர்.

ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஜூன் 19ஆம் தேதியன்று பென்னீஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.

காணொளிக் குறிப்பு, மத ரீதியான பாகுபாடு காட்டுகிறதா இந்திய போலீஸ்?

இதற்குப் பிறகு, பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜை கைது செய்த காவல்துறையினர், 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திங்கட்கிழமையன்று (ஜூன் 22) இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணை

Madurai Bench of Madras High Court

பட மூலாதாரம், http://www.hcmadras.tn.nic.in

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகிறது. நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் புகழேந்தி அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது.

அப்போது, பிரேதப் பரிசோதனை அறிக்கையும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் தங்களுக்கு வந்து சேர்ந்துவிட்டதாகவும் இறந்தவர்கள் உடலில் கடுமையான காயங்கள் இருந்தது இதிலிருந்து தெரிவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தை சி.பி.ஐக்கு மாற்றி மாநில அரசு உத்தரவிட்டிருந்தாலும் அவர்கள் விசாரணையைத் துவங்க சில நாட்கள் ஆகும்; ஆனால், தாங்கள் இந்த வழக்கில் ஒரு விநாடியைக்கூட வீணாக்க விரும்பவில்லை. ஆகவே அதுவரை நெல்லை சரக காவல்துறை இந்த வழக்கை விசாரிக்க முடியுமா எனக் கேள்வியெழுப்பினர்.

நீதித் துறை நடுவரை அவதூறாகப் பேசிய வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மூவரும் தங்களுக்கென வழக்கறிஞர்களை நியமித்து, தங்கள் தரப்பு வாதத்தை அளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: