தமிழக அரசு கொரோனா வைரஸ் நிதிக்கு போலீசார் அளித்த ஒரு நாள் சம்பளத்தை திருப்பி தர முடிவு

sathankulam

பட மூலாதாரம், ARUN SANKAR / getty images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: “போலீசாரின் ஒருநாள் சம்பளம் திருப்பி அனுப்பப்படுகிறது”

ஓய்வில்லாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதால் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்ட போலீசாரின் ஒரு நாள் சம்பளத்தை அவர்களுக்கே திருப்பி தர உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில், “கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியம் அல்லது அதற்கும் மேலான தொகையை, தானாக முன்வந்து முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதலமைச்சர் எடுத்த முடிவின் அடிப்படையில், அரசுக்கு தமிழக டி.ஜி.பி. கடிதம் எழுதியிருந்தார். அதில், கொரொனா தடுப்புப் பணியில் ஓய்வில்லாமலும், அர்ப்பணிப்போடும் போலீசார் பணியாற்றி வருவதால், முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு அவர்கள் அளித்த பங்களிப்புத் தொகையை திருப்பித் தரவேண்டும்’ என்று கோரியிருந்தார்.

அதன்படி, போலீசார் மொத்தமாக அளித்திருந்த தொகையான ரூ.8 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரத்து 286, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து திருப்பி அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை, சம்பந்தப்பட்ட போலீசாரின் கணக்கில் திருப்பி சேர்க்கப்பட்டுவிட்டதா என்பதை டி.ஜி.பி. உறுதி செய்யவேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

இந்து தமிழ் திசை: “முன்னாள் எம்பி மீது வழக்குப் பதிவு”

முன்னாள் எம்பி அர்ஜுனன் போலீஸை தாக்க முயற்சிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

இது குறித்து இந்து தமிழ் திசை பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.

சேலம் கருப்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி பகுதியில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக, நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த முன்னாள் எம்பி அர்ஜுனன், காரை நிறுத்தி, விசாரித்தனர்.

சேலம் அழகாபுரத்தில் வசிக்கும் அவர் ஓமலூரில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்று விட்டு திரும்புவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசாருக்கும், அர்ஜுனனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஒரு கட்டத்தில், காரில் இருந்து கோபத்துடன் இறங்கிய அர்ஜுனன், போலீஸ்காரரின் வயிற்றில் கை வைத்து தள்ளினார். பதிலுக்கு அந்த போலீஸ்காரரும், வேகமாக அர்ஜுனனின் நெஞ்சில் கையை வைத்து தள்ளியதில் அர்ஜுனன் நிலை தடுமாறினார்.

பின்னர், அர்ஜுனன், போலீஸ்காரரை உதைப்பதற்காகத் தனது காலை உயர்த்தியபோது, அருகில் இருந்தவர்கள் அர்ஜுனனைப் பிடித்துக் கொண்டனர். அதே நேரத்தில் போலீஸ்காரர் சாமர்த்தியமாக விலகிக் கொண்டார். இச்சம்பவங்கள் அடங்கிய வீடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக சேலம் சூரமங்கலம் போலீசார், பணியில் இருந்த போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தகாத வார்த்தையில் திட்டியதாகவும் அர்ஜுனன் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 294, 353 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக பிரமுகரான அர்ஜுனன், கடந்த காலத்தில் திமுகவில் இருந்தபோது தருமபுரி தொகுதி எம்பியாகவும், அதன் பின்னர் அதிமுக-வில் இணைந்து 2 முறை எம்எல்ஏ-வாகவும் இருந்தவர். அதன்பின்னர் அதிமுக-வில் இருந்து விலகி, தேமுதிகவில் இணைந்தார். பின்னர் அதிமுக தீபா பேரவையில் இணைந்து, மாநில நிர்வாகியாக செயல்பட்டார். இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னர் மீண்டும் அதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தினமணி: பிரதமர் நரேந்திர மோதி இன்று நாட்டு மக்களுக்கு உரை

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) மாலை உரையாற்றுகிறார்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவங்களிடையே பதற்றம் நிலவும் நிலையிலும், ஜூலை 1 முதல் நாட்டில் 2-ஆம் கட்ட பொதுமுடக்க விடுப்பு (அன்லாக்-2) அமலாகும் சூழலிலும் பிரதமர் மோதி உரையாற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு நாளை (ஜூன் 30) மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று சூழல் ஏற்பட்டதையடுத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோதி உரையாற்ற இருப்பது இது 6-ஆவது முறையாகும்.

முதலில் கடந்த மார்ச் 19-ஆம் தேதி உரையாற்றியபோது மார்ச் 22-ஆம் தேதி ஒருநாள் பொது முடக்கத்தை அறிவித்தார்.

பின்னர் மார்ச் 24-ஆம் தேதி உரையாற்றியபோது கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க நாட்டில் 21 நாள் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். ஏப்ரல் 3-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு வெளியிட்ட காணொலிச் செய்தியில், கொரோனா முன்களப் பணியாளா்களை கௌரவிக்கும் வகையில் ஏப்ரல் 5-ஆம் தேதி வீடுகளில் விளக்கேற்றக் கூறியிருந்தார்.

பின்னர் ஏப்ரல் 14-ஆம் தேதி ஆற்றிய உரையின்போது பொது முடக்கம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தாா். இறுதியாக கடந்த மே 12-ஆம் தேதி மக்களுக்கு உரையாற்றியபோது நாட்டின் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு நிதி தொகுப்பை அறிவித்திருந்தாா்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: