சாத்தான்குளம்: டி.எஸ்.பி., கூடுதல் எஸ்.பி. மீது குற்றவியல் அவமதிப்பு வழக்கு, இடமாற்றம்

காவல்

பட மூலாதாரம், Getty Images

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய தந்தை மகன்- ஜெயராஜ்- பென்னிக்ஸ் - இருவரும் கைது செய்யப்பட்டு காவல் நிலைய சித்ரவதைக்குப் பிறகு உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவரை அவமதித்ததாக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் மீது தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை.

அத்துடன் அவர்களை இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

இவர்கள் இருவருடன் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் மகாராஜன் என்பவரும் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உள்ளாகியிருக்கிறார்.

இந்த மூவரும் நாளை செவ்வாய்க்கிழமை காலை நேரில் ஆஜராகவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறை துன்புறுத்தலுக்குப் பிறகு இறந்ததாக கூறப்படும் விவகாரத்தை கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை செய்துவருகிறார்.

இந்த விசாரணைக்கு சாத்தான் குளம் காவல்நிலைய அதிகாரிகள் உரிய ஒத்துழைப்ப வழங்கவில்லையென குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்தக் காவல் நிலையத்தை உள்துறை கட்டுப்பாட்டிலிருந்து மாற்றி வருவாய்த் துறையின் கீழ் கொண்டுவருவதாக மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணைக்கு காவல்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்காதது குறித்து நீதித் துறை நடுவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு புகார் ஒன்றயும் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து கிரிமினல் அவமதிப்பு வழக்கு ஒன்றைப் பதிவுசெய்ய மதுரை கிளையின் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்ட உத்தரவில், "கோவில்பட்டி நீதித்துறை நடுவர் அறிக்கை அடிப்படையில் பார்க்கும்போது சாத்தான்குளம் காவல் நிலையம் தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், ஆகியோர் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறும் பாதிரியார் ஒருவர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இறந்த, ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறும் பாதிரியார் ஒருவர்.

விசாரணைக்கு இவர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்காததுடன் அது தொடர்பான ஆவணங்களையும் வழங்கவில்லை. நீதித்துறை நடுவர் விசாரித்ததை காவலர் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். சாத்தான்குளம் காவலர் மகாராஜன் என்பவர் நீதித்துறை நடுவரிடம் மரியாதை குறைவான ஏளமான சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகிறது. ஆகவே நீதிமன்றம் மூவர் மீதும் குற்றவியல் அவமதிப்பு வழக்கினை தொடுகிறது. மூவரையும் பணியிடமாற்றம் செய்தால் மட்டுமே விசாரணை எவ்வித இடையூறுமின்றி நடைபெறும். ஆகவே அவர்களை இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த மூவரும் நாளை (ஜூன் 30) காலை 10.30 மணி அளவில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் " என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற அரசாணை

இதற்கிடையில் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று காலையில் நீதிமன்றத்தின் அனுமதி கோரப்பட்ட நிலையில், இது அரசின் கொள்கை முடிவு என நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.

இதையடுத்து, வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

கூண்டோடு மாற்றம்

முன்னதாக, தந்தை - மகன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சாத்தான் குளம் காவல் நிலையத்தில் இருந்த அனைவருமே இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இப்போது அங்கு புதிதாக ஆய்வாளர்கள், துணை - ஆய்வாளர்கள் என 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்த பிறகு, சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் இருவரும் இடை நீக்கம் செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு ஆய்வாளர் ஸ்ரீதர் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும், அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டு, காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். இதற்குப் பிறகு, ஆய்வாளர் ஸ்ரீதர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர்.
படக்குறிப்பு, காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்

இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் துணை - ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மணிமாறன், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி - ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த முத்துமாரி, தட்டார்மடம், திருச்செந்தூர், நாசரேத், குலசேகரபட்டணம், மெஞ்ஞானபுரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 17 தலைமைக் காவலர்கள், தூத்துக்குடி ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் 10 காவலர்கள் என மொத்தம் 30பேர் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் உடனடியாக அனைவரும் பணியில் சேர வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: