ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தொடருமா? - மருத்துவர் குழு பரிந்துரைத்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கை அமல்படுத்துவதை தாங்கள் பரிந்துரைக்கவில்லையென தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கென சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மதுரை மாவட்டத்தின் பெரும் பகுதிகளிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு மேலும் தொடர வேண்டுமா என்பது குறித்து மருத்துவர் குழுவுடன் தமிழக முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோர் இன்று காலையில் ஆலோசனை நடத்தினர். சுமார் இரண்டரை மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிபுணர் குழுவைச் சேர்ந்த டாக்டர் பிரதீப் கவுர், தாங்கள் ஊரடங்கைப் பரிந்துரைக்கவில்லையெனத் தெரிவித்தார். "நாங்கள் முந்தைய சந்திப்புகளில் சோதனைகளை அதிகரிக்க வேண்டுமெனக் கூறினோம். அதனை அரசு சிறப்பாக செயல்படுத்தியிருக்கிறார்கள். சென்னையில் இப்போது 10,000 சோதனைகள் தினமும் செய்யப்படுகின்றன. அது ஒரு நல்ல முயற்சி. அதேபோல, தமிழ்நாடு முழுவதும் 32,000 சோதனைகள் நடத்தப்படுகின்றன. சோதனைகளின் மூலம் இந்நோய்த் தொற்று உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்க முடியும்" என்று தெரிவித்தார் பிரதீப் கவுர்.
மேலும், "சென்னை தவிர, திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாட்கள் குறைந்திருக்கின்றன. ஆகவே இந்த மாவட்டங்களில் சென்னையைப் போன்றே கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதில் "ஃபீவர் க்ளினிக்" எனப்படும் மருத்துவமனைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இவர்கள் ஆங்காங்கே முகாம் நடத்தி, அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டுபிடிப்பார்கள். இதைச் சென்னையில் செய்தோம். அதற்குப் பலன் இருந்தது. இதைப் பிற மாவட்டங்களிலும் செய்யும்படி சொல்லியிருக்கிறோம். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்த அச்சம் தற்போது இருக்கிறது. சென்னையில் எண்கள் அதிகம் ஆனாலும் இரட்டிப்பாகும் நாட்கள் அதிகமாகியுள்ளது. இதனை தொடரச் செய்ய வேண்டும். மரணங்களைக் குறைக்க வேண்டும். முன்பாகவே நோயைக் கண்டுபிடிக்க வேண்டும். எண்களைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது" என்றும் பிரதீப் கவுர் தெரிவித்தார்.
ஊரடங்கு குறித்து மருத்துவர் குழு தெரிவித்தது என்ன?
"எங்களுடைய கமிட்டி ஊரடங்கைப் பரிந்துரைக்கவில்லை. இது ஒரு சிறந்த தீர்வு இல்லை. சில சமயங்களில் அது தேவைப்படுகிறது. ஆனால், அதுவே ஒரு தீர்வு இல்லை. சென்னையில் இரட்டிப்பாகும் விகிதம் குறைந்திருக்கிறது. நோய்ப் பரவல் குறைந்துள்ளது. உலக சுகாதார அமைப்பும் நாங்களும் சில அளவீடுகளைக் கொடுத்திருக்கிறோம். அதன்படி ஒரு மாவட்டத்தின் அல்லது ஒரு தாலுகாவில் எவ்வளவு பேருக்கு நோய்த் தொற்று இருக்கிறது, இரட்டிப்பாகும் வேகம் என்ன, சோதனைகளில் எத்தனை சதவீதம் பேர் நோயாளிகளாக கண்டுபிடிக்கப்படுகிறார்கள், எவ்வளவு மரணங்கள் நிகழ்கின்றன என்பதை வைத்து இந்தக் கணக்கீடுகளைச் செய்ய வேண்டும். இதன்படி எந்தப் பகுதிகள் மோசமாக இருக்கிறதோ அந்தப் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம். அங்கே ஃபீவர் க்ளினிக்களை வைக்கலாம்
மேலும், பொதுப் போக்குவரத்தால் நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது. அதேபோல, கூட்டங்களையும் அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாட்டில் 'ராபிட் ஆண்டிஜென்' சோதனைகள் தேவையில்லை. ஆர்டி-பிசிஆர் சோதனை சிறப்பாக உள்ளது" என பிரதீப் கவுர் விளக்கமளித்தார்.

இதற்குப் பிறகு பேசிய மருத்துவர் ராமசுப்ரமணியன், "இந்த நோய்க்காக பயப்படக்கூடாது. கடந்த சில வாரங்களில் சிகிச்சைகளில் முன்னேற்றம் உள்ளது. ஸ்டீராய்டுகள், ரத்தம் உறைவதைக் கட்டுப்படுத்த மருந்து, வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் முன்னேற்றம் இருக்கிறது. இதனை ஒரு புரோட்டோகாலாக மாற்றி, எல்லா மருத்துவமனைகளுக்கும் அனுப்பவிருக்கிறோம். நோயால் தாக்கப்பட்டிருப்பவர்கள் ஆக்ஸி மீட்டரை அணிந்துகொள்ளலாம்.
ஊரடங்கைப் பொறுத்தவரை இது ஒரு பரவலான நடவடிக்கை. ஒரு கொசுவை கோடாலியால் கொல்வதைப் போல. துவக்கத்தில் இது தேவையாக இருந்தது. இதுபோன்ற ஊரடங்கை மேலும் ஆறு மாதங்களுக்குச் செய்வது சரியாக இருக்காது. நாங்கள் அம்மாதிரி பரிந்துரைக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
நகரத்தில் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதற்குக் காரணம், மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதுதான் என்பதும் சாதாரண அறிகுறிகளை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்வதுதான் காரணம் என்றும் சிறு அறிகுறிகள் இருப்பவர்களும் உடனடியாக சோதனைகளைச் செய்ய வேண்டும் என பிரதீப் கவுர் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் ஜூலை 31ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு
தமிழகம் உள்பட இந்தியாவில் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து மத்திய, மாநில அரசு ஆலோசித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் ஜூலை 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதன் மூலம், இந்தியாவில் பொது முடக்கத்தை நீட்டித்த முதல் மாநிலமாக மகாராஷ்டிரா ஆகியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தரவின்படி, மகாராஷ்டிராவில் இதுவரை 1,64,626 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 7,429 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
பிற செய்திகள்:
- சாத்தான்குளம்: சமூக ஊடகங்களில் அத்துமீறல்களை கொண்டாடும் சில போலீஸார் - காவல்துறை கூறுவது என்ன?
- கொரோனா பொது முடக்கம் தமிழகத்தில் மேலும் நீடிக்கப்படுகிறதா? - விரிவான தகவல்கள்
- கொரோனா: சென்னை மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் தகரத் தடுப்புகள்
- கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு - நான்கு பேர் உயிரிழப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












