கொரோனா வைரஸ்: தினமும் 50 லட்சம் முகக்கவசங்கள் தயாரித்து அசத்தும் தமிழ் பெண்கள்

மாஸ்க் தயாரிக்கும் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளின் இயக்கமின்றி அமைதி நிலவுகிறது.

ஆனால், எல்லா மாவட்டங்களிலும் பகலிலும், இரவிலும் தையல் இயந்திரங்களில் வேலைசெய்யும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. என்ன தைக்கப்படுகிறது, யார் தைக்கிறார்கள் - ஆச்சரியத்தை தருபவர்கள் சுய உதவிக்குழுப் பெண்கள்.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான சுய உதவிக்குழுப் பெண்கள் இணைந்து, சுமார் ஒரு 50 லட்சம் முகக்கவசங்களை தினமும் தயாரிக்கிறார்கள். மருத்துவமனைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை, காவல்துறையினர் மற்றும் பிற அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் முகக்கவசங்களை இந்த சுய உதவிக்குழு பெண்கள்தான் தயாரிக்கிறார்கள்.

தினமும் 50 லட்சம் முகக்கவசங்கள் தயாரித்து அசத்தும் தமிழ் பெண்கள்

கொரோனா பரவலை தடுக்க பலரும் பயன்படுத்தவேண்டிய பொருளாக முகக்கவசம் மாறியுள்ளது. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான சுயஉதவிக்குழுக்கள் முகக்கவசங்களை குறைந்தவிலைக்கு அரசு மற்றும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு விற்பனை செய்கின்றன.

''வீடுகளுக்குள் எல்லோரும் முடங்கியிருக்கும் நேரத்தில் எங்களுக்கு பெரிய பணி காத்திருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி காலத்தில், பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, லட்சக்கணக்கான முகக்கவசங்கள் தினமும் தயாரிக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் சுமார் ஒரு லட்சம் முகக்கவசங்களை தினமும் தயாரிக்கிறோம். எங்களிடம் அரசு நிறுவனங்கள் நேரடியாக வந்து பெற்றுக்கொள்கிறார்கள். அரசு கடைகள் திறக்க அனுமதித்துள்ள நேரத்தில், முகக்கவசம் தயாரிக்க துணிகளை வாங்கிக்கொள்கிறோம். தேவை அதிகம் என்று தெரியவந்தால், இரவு முழுவதும் தைத்து கொடுக்கிறோம்,'' என்கிறார் சென்னையில் உள்ள ஒரு சுய உதவிக்குழுவை ஒருங்கிணைக்கும் வளர்மதி.

தினமும் 50 லட்சம் முகக்கவசங்கள் தயாரித்து அசத்தும் தமிழ் பெண்கள்

பருத்தியைப் பயன்படுத்தி முகக்கவசங்களை தயாரிக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் தினமும் சுமார் ரூ.600 முதல் ரூ.1,000 வரை ஈட்டுகிறார்கள் என்கிறார் வளர்மதி.

''சுய உதவிக்குழுவில் ஏற்கனவே வாங்கிய கடன் மற்றும் நாங்கள் முதலீடு செய்த பணத்தில் தயாரிப்பு செலவு போக, மீதமுள்ள வருமானத்தை குழு உறுப்பினர்களுக்குக் கொடுத்துவிடுகிறோம். ஒரு முகக்கவசம், குறைந்தபட்சம் எட்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விற்கப்படுகிறது. பெண்கள் தங்களது தயாரிப்பு திறனுக்கு ஏற்ப, குறைந்தபட்சம் ரூ.300 தொடங்கி ரூ.1,000 வரை ஒரு நாளில் ஈட்டுகிறார்கள்,''என்கிறார் வளர்மதி.

Banner image reading 'more about coronavirus'
Banner

சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் முகக்கவசங்கள் தரமானதாக இருப்பதை உறுதிசெய்து விற்பனைக்கு அனுப்புவதாகக் கூறுகிறார் வளர்மதி. ''பெரும்பாலானவர்கள் சுய உதவிக்குழு அலுவலகத்தில் வந்து தைக்கிறார்கள். ஒரு சிலர் அவர்கள் வீடுகளில் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் தைக்கிறார்கள். இதனால் எல்லா நேரத்திலும் தயாரிப்பு பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றன,'' என்கிறார் அவர்.

கொரோனா தடுப்பு காலத்தில் சுய உதவிக் குழு பெண்களின் பங்கேற்பு அதிமுக்கியமான கருதப்படுவதாகக் கூறுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஜெயக்குமார். முகக்கவசம் தயாரிக்கும் போது கையுறை அணியவேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்துதான் தைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என்கிறார் ஜெயக்குமார்.

கொரோனா வைரஸ்

''திருவள்ளூரில் செங்குன்றம், வெள்ளியூர், திருத்தணி, பூந்தமல்லி மற்றும் ஆவடி பகுதிகளில் 200 பெண் தையல் கலைஞர்கள் தினமும் சுமார் 20,000 முகக்கவசங்களை தயாரிக்கின்றனர். சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் பெரும்பாலும் கண்காட்சி நடத்தி, அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வார்கள். கொரோனா தடுப்பு முடக்கம் காரணமாக, வீடுகளுக்குள் எல்லோரும் இருக்கவேண்டும் என்ற சூழ்நிலை. இருந்தபோதும், தங்களின் உழைப்பின் மூலம் அத்தியாவசிய பொருளான முகக்கவசத்தை தயார் செய்வதால், இந்த 21 நாட்களில் பெரிய ஏற்றத்தை இந்த குழுக்கள் கண்டுள்ளன,'' என்கிறார்.

முகக்கவசத்திற்கு அடுத்தபடியாக, பெண்கள் குழுவினர் சானிடைஸர் தயாரிப்பில் முனைப்பு காட்டுவதால், பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: