கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு மருத்துவமனைகளுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் எனப்படும் செயற்கை சுவாச கருவிகளை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அரசுகள் வாங்கி வருகின்றன.

கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை இந்த செயற்கை சுவாச கருவிகளே வழங்குகின்றன.

வென்டிலேட்டர் என்றால் என்ன? அது என்ன செய்கிறது?

சுருக்கமாக சொல்லப்போனால், நோய்த்தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளியின் ஒட்டுமொத்த சுவாச செயல்பாட்டை மேற்கொள்ளும் இயந்திரம்தான் இந்த வென்டிலேட்டர்கள்.

இது நோயாளிக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடி அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவகாசம் தருகிறது.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

வென்டிலேட்டர்களில் பல்வேறு வகைகள் உள்ளன.

கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட் -19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் 80 சதவீதத்தினர் மருத்துவமனை சிகிச்சை இல்லாமலேயே குணமடைவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

Banner image reading 'more about coronavirus'

ஆனால், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறில் ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, சுவாச பிரச்சனை ஏற்படுகிறது.

கோவிட்-19 தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் செயல்பாடு நாளடைவில் பலவீனமடைகிறது. இந்த பிரச்சனை குறித்து அறிந்தவுடன், நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலம் இரத்த குழாய்களை விரிவடைய செய்வதால், அதிகளவிலான நோயெதிர்ப்பு செல்கள் நுழைகின்றன.

இந்த செயல்பாட்டின் காரணமாக நுரையீரலுக்குள் திரவங்கள் அதிகளவு நுழைவதால், அதன் காரணமாக நோயாளி சுவாசிப்பதற்கு சிரமப்பட தொடங்குகிறார். இதனால், அந்த நபரின் உடலில் ஆக்ஸிஜன் அளவும் குறைய ஆரம்பிக்கிறது.

இந்த சிக்கலான பிரச்சனையை கையாள்வதற்கு பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்கள், உயர் அளவு ஆக்சிஜன் மிக்க காற்றை நுரையீரலுக்குள் செலுத்த உதவுகிறது.

வென்டிலேட்டர்களில் ஈரப்பதமூட்டியும் இருப்பதால், அவை செயற்கையாக செலுத்தப்படும் காற்றிலுள்ள வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை நோயாளியின் உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து சரிவர பராமரிக்கிறது.

Banner image reading 'more about coronavirus'

நோயாளியின் மொத்த சுவாச செயல்பாட்டையும் வென்டிலேட்டர் மேற்கொள்வதால் இடைப்பட்ட நேரத்தில் நோயாளியின் சுவாச தசைகள் ஓய்வெடுக்க வாய்ப்பு கிடைக்கிறது.

நோய்த்தொற்றுக்குரிய லேசான அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு முகக்கவசங்கள், நாசிவழிக் கவசங்கள் அல்லது வாய்வழிக் கவசங்கள் வாயிலாக காற்றோ அல்லது பலதரப்பட்ட வாயுக்களின் கலவையோ நுரையீரலுக்குள் செலுத்தப்படும்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, ஒரு வால்வு வழியாக அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் செலுத்தப்படும் ஹுட்ஸ் ரக கருவிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை மூச்சு காற்றிலுள்ள திரவ துளிகளின் மூலமாக வைரஸ் காற்றின் வழியே பரவும் அபாயத்தை குறைக்கின்றன.

எனினும், தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக வென்டிலேட்டர்கள் பொருத்தப்படும். இதன் மூலம், நோயாளியின் உடலில் ஆக்சிஜன் அளவு நிலைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், INTERSURGICAL

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இன்டென்சிவ் கேர் சொசைட்டியை சேர்ந்த மருத்துவர் சந்தீபன் லஹா, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் தேவைப்படுவதில்லை என்றும், வீடுகளிலோ அல்லது அடைக்கப்பட்ட ஆக்சிஜனே அவர்களுக்கு போதுமானது என்றும் அவர் கூறுகிறார்.

"வென்டிலேட்டர் பராமரிப்பு மிகவும் சிக்கலானது. அதை சரிவர நிர்வகிக்காவிட்டால் அது நோயாளின் உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும். தொழில்நுட்ப அம்சங்கள் சவாலானவை. ஒரு குறிப்பிட்ட வகை வென்டிலேட்டரை பயன்படுத்தியவர்களால் அனைத்து ரக வென்டிலேட்டரையும் இயக்க முடியும் என்று கூற முடியாது" என்று மருத்துவர் லஹா கூறுகிறார்.

இந்தியாவை பொறுத்தவரை, தற்போது ஐம்பதாயிரத்துக்கும் குறைவான வென்டிலேட்டர்களே மருத்துவமனைகளில் உள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் இதன் தேவை பல லட்சங்களை தாண்ட கூடும் என்றும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவில் ஏற்கனவே வென்டிலேட்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை அதிகளவிலான கருவிகளை உற்பத்தி செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோன்று, மகேந்திரா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் குறைந்த விலை வென்டிலேட்டர்களை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

முன்னதாக, கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தற்போதைக்கு 3,044 வென்டிலேட்டர்கள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: