கொரோனா வைரஸ்: மலேசியாவில் பட்டினியுடன் போராடும் ரோஹிஞ்சா அகதிகள்

பட மூலாதாரம், Getty Images
மலேசியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 131 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 236 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று மேலும் ஒருவர் பலியாகி, இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 62ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது மலேசியா.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,793 என்றும், இவர்களில் இதுவரை 1,241 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்றும் மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 32.7 விழுக்காட்டினர் குணமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போது 102 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், அவர்களில் 54 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
’தேவையின்றி எங்களை குறை கூற வேண்டாம்’ -காவல்துறை தலைவர்
பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்கள் ஆகும் நிலையில், பொதுமக்கள் தேவையின்றி போலிசார் மீது குற்றம்சாட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மலேசிய காவல்துறை தலைவர் அப்துல் ஹமிட் படோர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களில் சாலைத் தடுப்புகளை ஏற்படுத்தி மலேசிய போலிசார் சோதனை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தேவையின்றி, உரிய காரணம் இன்றி வீட்டை விட்டு வெளியேறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அரசு உத்தரவை அலட்சியமாக கருதுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பலருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் போலிசார் ஏற்படுத்தும் சாலைத் தடுப்புகளால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சில தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால் போலிசாரின் நடவடிக்கைகளை குறைகூறக் கூடாது என அப்துல் ஹமிட் படோர் கூறியுள்ளார்.
"சாலைத் தடுப்புகள் மூலம் மக்களின் நடமாட்டத்தை காவல்துறை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் நோய்ப் பரவலையும் தடுக்க முடியும். இதற்கு சாலைத் தடுப்புகளை அமைப்பது அவசியம். அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்பில்லாதவர்கள் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
"சாலைத் தடுப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனில் மக்கள் பொறுமை காக்க வேண்டும். ஏனெனில் வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் உரிய காரணத்தை தெரிவிக்கும் பட்சத்தில், அவர்கள் தொடர்ந்து செல்வதற்கு போலிசார் அனுமதிக்க வேண்டும். அந்தப் பணியைத்தான் அவர்கள் செய்கிறார்கள்.
"காவல்துறையினரும் ஆயுதப் படையினரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் அவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்நிலையில் அவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை பொறுமையுடன் எதிர்கொண்டு கடமையாற்றி வருகிறார்கள்," என்றார் அப்துல் ஹமிட் படோர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

"WHO பரிந்துரைத்த மருந்தை சோதனை முறையில் பயன்படுத்த மலேசியா தயார்"
'கோவிட்-19' நோய்க்கு சிகிச்சை அளிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள புதிய மருந்துகளை சோதனை அடிப்படையில் பயன்படுத்த தயார் நிலையில் உள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
அந்தப் புதிய மருந்துகள் மலேசியாவில் உள்ள ஒன்பது மருத்துவமனைகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு விதமான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் புதிய மருந்துகளை பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.
"சோதனை அடிப்படையில் சில மருந்துகளைக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு வேகப்படுத்தி உள்ளது.இதற்காக ஒன்பது மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்துள்ளோம்.
"உலகளவில் நடத்தப்பட உள்ள சோதனை முயற்சியில் மலேசியாவும் பங்கெடுக்கிறது. இதன் மூலம் உயிர் காக்கும் அந்த மருந்துகள் எந்தளவு பாதுகாப்பானவை, வீரியமானவை என்பதை கண்டறிய முடியும். இதனால் கொரோனா வைரஸ் தொற்றியோருக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும். பல உயிர்களைக் காப்பாற்றும் முயற்சியில் மலேசியா ஈடுபட்டுள்ளது," என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
’மக்கள் தியாகங்களை செய்ய முன்வர வேண்டும்’ - மகாதீர்
நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலையில், மலேசியர்கள் சில தியாகங்களைச் செய்யவும், தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்ளவும் தயாராக வேண்டும் என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் கூறியுள்ளார்.
தியாகங்கள் செய்யாமல் பழைய ஊதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பழைய வாழ்க்கை முறையை பின்பற்ற இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.
"நாம் செலவுகளைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். நமது வாழ்க்கைத் தரத்தை சற்றே குறைத்துக் கொள்ள வேண்டும்.
"பொருளாதாரம் சுருங்கி வரும் நிலையில், முதலாளிமார்கள் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் தருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் தொழில்கள் முன்பு போல் சிறப்பாக நடைபெறாமல் போகலாம்," என்றார் மகாதீர்.
இணையம் வழி சந்தைப்படுத்துதல், மின்னிலக்கத் துறை போன்ற புதிய தளங்களில் மலேசியர்கள் கால்பதிக்க வேண்டும் என்றும், அவற்றின் மூலம் வருமானம் தேட வேண்டும் என்றும் மகாதீர் வலியுறுத்தினார்.
வருமானத்தை ஈட்டுவதற்கான புதிய வழிகள் குறித்து மலேசியர்கள் சிந்திக்க வேண்டும் என்றும், தற்போதைய சூழலில் நாட்டு மக்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டியது மிக அவசியம் என்றும் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

பட்டினியுடன் போராடும் ரோஹிஞ்சா அகதிகள்
பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிஞ்சா அகதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் அன்றாட வாழ்க்கையைக் கடத்துவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
அகதிகளாக உள்ள ரோஹிஞ்சாக்கள் சட்டப்படி வேலை பார்க்க அனுமதியில்லை. எனவே இவர்களில் பலர் குப்பைகள் சேகரிப்பது, சிறு வணிகர்களுக்கு உதவிகரமாக இருப்பது, உணவகங்களில் பணியாற்றுவது என சிறிய அளவில் வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
நாள் ஒன்றுக்கு 10 முதல் 25 மலேசிய ரிங்கிட் மட்டுமே (இந்திய மதிப்பில் சுமார் ரூ.430) இவர்களுக்கு அதிகபட்சமாக கிடைக்கும். அகதிகள் என்பதால் அரசாங்கம் குடிமக்களுக்கு வழங்கும் இலவசப் பொருட்கள், உதவித்தொகை உள்ளிட்ட எந்த சலுகையும் கிடைக்காது.
வேலைக்கும் செல்ல முடியாமல், வீட்டை விட்டு வெளியேறவும் இயலாமல் ஆயிரக்கணக்கான அகதிகள் அவதிப்படுவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ரோஹிஞ்சா அகதிகள் பெரும்பாலும் தினக்கூலிகளாக உள்ளனர். அதனால் அரசாங்கம் மேற்கொண்டுள்ள திடீர் நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போயிருப்பதாகத் தெரிகிறது.
முந்தைய ஆட்சியாளர்கள் அகதிகள் மலேசியாவில் சட்டப்படி வேலை பார்க்க விதிக்கப்பட்டுள்ள தடை அகற்றப்படும் என அறிவித்திருந்தனர். இதனால் அகதிகள் மத்தியில் நம்பிக்கை நிலவியது. ஆனால் இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும் முன்பே ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
இது தொடர்பாக புதிய அரசாங்கம் எத்தகைய முடிவை எடுக்கும் என்பது தெரியாத நிலையில், கொரோனா வைரஸ் தொற்றும், மலேசியாவில் உள்ள ரோஹிஞ்சா உள்ளிட்ட பிற அகதிகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இவர்களில் பலர் வேறு வழியின்றி பிச்சை எடுப்பதிலும், பொது மக்களின் கருணையால் கிடைக்கும் பொருட்களைப் பெறுவதிலும் முனைப்பு காட்டுகின்றனர்.
சிலர் சமூக அமைப்புகளும் தன்னார்வலர்களும் வழங்கி வரும் அரிசி மட்டுமே இவர்களின் பசியைப் போக்க கைகொடுக்கிறது. அதனால் காய்கறிகள் இல்லாத வெறும் சோற்றை மட்டுமே, அதிலும் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு தங்களுக்கும் நாளைய பொழுது நல்லபடியாக விடியும் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கடத்தி வருகின்றனர்.
தற்போது கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மலேசியா போரிட்டு வருகிறது எனில், ரோஹிஞ்சாக்கள் பட்டினியுடன் போராடி வருகின்றனர்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று - தற்போதைய நிலவரம்
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியது
- கொரோனா வைரஸ்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் - சர்வதேச செய்திகள்
- கொரோனா வைரஸ்: பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? - மத்திய அரசு விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












