இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு: போலீஸ் வெளியிட்ட வாக்குமூல வீடியோவில் என்ன இருந்தது?

பட மூலாதாரம், RAHAT DAR/EPA-EFE/REX/Shutterstock
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியில் சுடப்பட்டார். அவருக்கு வயது 70.
வியாழக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலில் மேலும் நான்கு பேர் காயமடைந்திருப்பதாக அவரது பிடிஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
"இது அவரைக் கொல்வதற்கான முயற்சி, படுகொலை செய்வதற்கான முயற்சி," என்று அவரது மூத்த உதவியாளர் ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறினார். இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவர் பிறகு கைது செய்யப்பட்டதாக, பாகிஸ்தான் ஜியோ டிவி தெரிவிக்கிறது.
இம்ரான் கானின் கட்சியான தெஹ்ரிகே இன்சாஃபின் செனட்டர் ஒருவர், அறுவை சிகிச்சைக்குப் பிறகு இம்ரான் கானின் உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் லாகூரில் உள்ள சவுகத் கானும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவமனையை இம்ரான் கான், தனது தாயார் சவுகத் கானும்மின் நினைவாகக் கட்டினார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் துணைத் தலைவர் ஷா மெஹ்மூத் குரேஷி, இம்ரான் கான் தற்போது அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக ட்வீட் செய்துள்ளார்.


இம்ரான் கான் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல மாகாணங்களில் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன. ஆத்திரமடைந்த மக்கள், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சனுல்லாவின் பைசலாபாத் இல்லத்தைத் தாக்கி சூறையாடினர்.
போலீஸ் வெளியிட்ட வாக்கு மூல வீடியோ
இம்ரான் கானை கொல்ல முயன்றவர் என்று கூறி, அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் ஒரு வீடியோவை பாகிஸ்தான் போலீஸ் வெளியிட்டுள்ளது.
எந்த சூழ்நிலையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், அந்த வீடியோவில் அந்த நபரிடம் துப்பாக்கிச் சூடு நடத்தக் காரணம் என்னவென்று போலீசார் கேட்கிறார்கள். அதற்கு அந்த நபர் அளித்த பதில்: "அவர் மக்களை தவறாக வழிநடத்துகிறார். அவரை நான் கொல்ல விரும்பினேன். அவரைக் கொல்ல முயன்றேன்".
என்ன நடந்தது?
கப்பலில் சரக்கு அனுப்ப பயன்படுத்தும் கண்டெயினர் ஒன்றில் உள்ளே இருந்தபடி இம்ரான் கானும் அவரது ஆதரவாளர்களும் பேரணியில் பங்கேற்றனர். அந்த கண்டெயினரை லாரி ஒன்று இழுத்துச் சென்றது. அந்த நேரத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக, சம்பவ இடத்தில் இருந்து வெளியான வீடியோ காட்டுகிறது.
துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் அவர் தலையைக் குனிந்து கொள்வதையும் அவர் அருகே இருந்தவர்கள் அவரைச் சுற்றி சூழ்ந்து கொள்வதையும் வீடியோ காட்டுகிறது.
இன்னொரு வீடியோவில், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு சுய நினைவோடு இருக்கும் இம்ரான் கான், தனது வலது காலில் கட்டோடு வேறொரு வண்டியில் அழைத்துச் செல்லப்படுவது தெரிகிறது. அவரது பிடிஐ கட்சி உறுப்பினர் ஒருவரும் முகத்தில் கட்டோடு காணப்படுகிறார். இம்ரான் கானுக்காகவும் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்காகவும் அனைவரும் தொழவேண்டும் என்று அந்த நபர் கூறுகிறார்.
பிரதமர் கண்டனம்
தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் இந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ளார். அத்துடன் உடனடியாக இது தொடர்பாக புலன்விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டார். இது மோசமான படுகொலை முயற்சி என்று ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி தெரிவித்தார்.
பேரணி ஏன்?
ஏப்ரல் மாதம் அவர் ஆட்சி கவிழ்ந்த நிலையில், உடனடியாக மறுதேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி ஒன்றை நடத்தி வந்தார் இம்ரான் கான். 'நீண்ட பயணம்' என்று பெயரிடப்பட்ட இந்த பேரணியின்போதுதான் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

பட மூலாதாரம், PTI
இது தொடர்பான காட்சிகளில் அவர் உடனடியாக லாகூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவது தெரிந்தது.
அவரது முழங்காலின் முன் பகுதியில் குண்டு பாய்ந்ததாக அவரது பிடிஐ கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இம்ரான்கான் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாக பிடிஐ கட்சித் தலைவரும் மாகாண சுகாதார அமைச்சருமான யாஸ்மீன் ரஷீத் கூறினார்.
பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி கூறுவது என்ன?
இந்த துப்பாக்கிச்சூடு நடந்தபோது பேரணியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி அப்துல் ரஷீத், துப்பாக்கி சுடப்படும் சத்தத்தை தாம் கேட்டதாக பிபிசியிடம் கூறினார்.
இம்ரான் கான் இருந்த கன்டெயினரில் இருந்து தாம் சிறிது தூரம் தள்ளி இருந்ததாகவும் துப்பாக்கி சுடப்படும் சத்தம் தமக்குக் கேட்டதாகவும் அவர் கூறினார். மேலும், பேரணியில் பங்கேற்றவர்கள் மத்தியில் நெரிசல் தோன்றியது என்றும் இம்ரான் கான் காலில் சுடப்பட்டார் என்றும் அவர் கூறினார்.
கண்டெயினரிலேயே அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டு வேறு வண்டிக்கு அவர் மாற்றப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார். இம்ரான் கான் வேறு வண்டிக்கு மாற்றப்பட்டபோது தான் அருகில் இருந்ததாகவும் அப்போது அவர் சுயநினைவோடு இருந்ததாகவும் அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
அகமது சட்டா, ஃபைசல் ஜாவேத் என்பவர்கள் இந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Reuters
தகுதி நீக்கம்
இம்ரான்கான் மீதான புகார் ஒன்றை விசாரித்த அந்நாட்டு தேர்தல் ஆணையம், அவர் பொதுப் பதவிகள் எதையும் வகிக்கக்கூடாது என்று கடந்த மாதம் உத்தரவிட்டது. தாம் இப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவதற்குக் காரணமான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்று இம்ரான் கான் கூறியிருந்தார்.
பிரதமர் பதவி வகித்தபோது வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருள்கள் தொடர்பாகவும் அந்தப் பொருள்களை விற்று வந்ததாகக் கூறப்பட்ட தொகை தொடர்பாகவும் தவறான விவரங்களைத் தாக்கல் செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், மோதிரம், கஃப்லிங்குகள் போன்றவை இந்த சர்ச்சைக்குரிய பரிசுப் பொருள்களில் அடக்கம்.
இந்தியா என்ன சொன்னது?
"இது ஒரு நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு, இதை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். தொடர்ந்து இதைக் கண்காணிப்போம். இதற்கு மேல் இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை," என்று இம்ரான் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி டிவிட்டரில் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














