பாகிஸ்தான்: இம்ரான் கான் வீட்டில் நள்ளிரவில் இறங்கிய ஹெலிகாப்டர் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆசிஃப் ஃபரூக்கி
- பதவி, பிபிசி உருது சேவை, இஸ்லாமாபாத்
பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை எம்.பிக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து ஆட்சியில் தொடரும் வாய்ப்பை அவர் இழந்திருக்கிறார். இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவில் நாடாளுமன்ற அமர்வு மீது தேசிய ஊடகங்கள் கவனம் செலுத்தி வந்த அதே நேரத்தில், பிரதமரின் இல்லத்தில் சில ரகசிய செயல்பாடுகள் நடந்தது தெரிய வந்துள்ளது.
பொதுவாக, ஒரு நாட்டின் ஆட்சி மாற்றத்துக்கு முன்னோட்டமாக கருதப்படும் காட்சிகள சில வரலாற்று முடிவுகளுக்கு காரணமாக இருக்கும். அது தொடர்புடைய காட்சிகள் ஊடக கேமிராவில் பதிவாகும். ஆனால், இந்த பரபரப்பான தருணங்களுக்கு பின்னணியில் பெரும்பாலான நடவடிக்கைகள் ரகசியமாகவே இருக்கும். அது இம்ரான் கான் விவகாரத்திலும் நடந்துள்ளது.
சனிக்கிழமையன்று, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் வாக்கெடுப்பு நடைமுறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, ஆளும் கட்சி உறுப்பினர்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்கள் நடந்து கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கான், தமது அலுவல்பூர்வ இல்லத்தில் சட்டம் மற்றும் அரசியல் ஆலோசகர்கள் மற்றும் சில அதிகாரிகளுடன் பேசினார். இதைத்தொடர்ந்து தமது அமைச்சரவையின் கடைசி கூட்டத்துக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்தார்.
தரையிறங்கிய ஹெலிகாப்டர்

பட மூலாதாரம், APP
அமைச்சரவைக் கூட்டத்தில் இம்ரான் கான் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதை அறிந்திருப்பதாகக் கூறப்படும் ரகசிய ஆவணங்களை காட்ட சில அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நேரத்தில்தான் தேசிய அவையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பிரதமரின் இல்லத்துக்கு வந்தடைந்தனர். ஆனால் பிரதமர் அலுவலகத்திற்கு அடுத்துள்ள ஓய்வறையில் காத்திருக்குமாறு அவர்கள் இருவரும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
இதற்கிடையில், பிரதமரின் இல்லத்தில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளத்தில் தனி ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அதில் இரண்டு விருந்தினர்கள் அசாதாரண பாதுகாப்பு மற்றும் ஆயுதம் ஏந்திய படையினர் சூழ இம்ரான் கானின் வீட்டுக்குள் சென்றனர்.
அந்த இரு விருந்தினர்களும் சுமார் 45 நிமிடங்கள் இம்ரான் கானிடம் பேசினர். இந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை.
எவ்வாறாயினும், இந்த சந்திப்பு குறித்து பின்னர் நம்பகமான அரசாங்க வட்டாரங்கள் கூறும்போது, இம்ரான் கானுக்கும் இரு விருந்தினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இனிமையானதாக இருக்கவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தன.
இம்ரான் கானின் திடீர் உத்தரவு
இந்த கூட்டத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான், தமது அரசில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவரை இம்ரான் கான் நீக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தன்னை சந்திக்க இரு விருந்தினர்கள் வருவதை அறிந்தவர் போல இம்ரான் கானும் அவர்களுக்காக காத்திருந்தார். ஆனால், அவர்கள் தெரிவிக்கப்போகும் விஷயங்கள் பற்றிய அவரது ஊகங்களும் எதிர்பார்ப்புகளும் முற்றிலும் தவறானவை போல இருந்தன.
அந்த அதிகாரிகள் பிரதமர் இல்லத்தில் தன்னை சந்தித்த பிறகு உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பிக்கக் கூடும். அதன் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் தனக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் தணிந்துவிடும் என்று இம்ரான் கான் நம்பியிருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.

பட மூலாதாரம், Anadolu Agency
மாறாக, அதே சனிக்கிழமை இரவு, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அதர் மினல்லா, தன்னுடன் பணிபுரியும் நீதிமன்ற ஊழியர்களுடன் நீதிமன்றத்தை அடைந்தார்.
நள்ளிரவில் திறக்கப்பட்ட உயர் நீதிமன்றம்
இம்ரான் கான் ராணுவ தளபதியை நீக்குவதற்காக வெளியிட்ட உத்தரவை 'அதிகார துஷ்பிரயோகம்' என அறிவிக்கக் கோரி ஒரு சாதாரண குடிமகன் என்ற முறையில் அட்னான் இக்பால் என்ற வழக்கறிஞர் ஒரு அவசர மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக, இம்ரான் கான் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். ராணுவ தளபதியை பதவி நீக்கம் செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். பொதுநலன் கருதி அந்த உத்தரவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு தயாரிக்கப்பட்ட அதே சமயம், ராணுவத் தளபதியை நீக்குவதற்கான அரசாணை எண் குறிப்பிடப்பட வேண்டிய இடத்தில் அந்த பகுதி காலியாக இருந்தது. இதன் மூலம் பிரதமர் விருப்பம் தெரிவித்த போதிலும், அரசாணை எண் குறிப்பிடப்படாததால் அந்த மனுவை தலைமை நீதிபதி உடனே விசாரிக்க இயலாமல் போனது. இந்த மனு எப்படி, விரைவாக தயாரிக்கப்பட்டது, அதை ஒரு சாதாரண வழக்கறிஞர் தாக்கல் செய்ய, அந்த மனுவை விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எப்படி நீதிமன்றத்துக்கு இரவில் வந்தார்? இந்த கேள்விகளுக்கு விடை இதுவரை கிடைக்கவில்லை.
இருப்பினும் நள்ளிரவைக் கடந்த பரபரப்பான காட்சிகளுக்குப் பிறகு இம்ரான் கான் பிரதமர் இல்லத்தை விட்டு, விட்டு தமது தனிப்பட்ட வீட்டுக்குப் புறப்பட்டார். பதவி விலக மாட்டேன், ஆட்சியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று விடாப்பிடியாக பேசி வந்த இம்ரான் கான், ஹெலிகாப்டரில் தன்னை சந்தித்த இரு விருந்தினர்களின் வருகைக்குப் பிறகு எப்படி மனம் மாறினார்? இந்த கேள்விக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












