விக்கிப்பீடியாவில் நடக்கும் எடிட்டிங் போர்: சீனாவுக்கு ஆதரவானவர்கள் vs ஜனநாயகத்துக்கு ஆதரவானவர்கள்

விக்கீபீடியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விக்கீபீடியா
    • எழுதியவர், ஷிரோமா சில்வா
    • பதவி, பிபிசி கிளிக்

சீனாவைச் சேர்ந்த சில விக்கிப்பீடியா பக்கத்தை திருத்தும் ஆசிரியர்கள், விக்கிப்பீடியா பக்கங்களை எழுதவும், திருத்தவும் தடை விதித்திருப்பதால், சீனா சார்ந்த பிரச்சனைகளில் விக்கிப்பீடியா சமநிலையை கடைபிடிப்பது தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன.

ஹாங்காங் மற்றும் சீனாவுக்கு இடையில் ஒரு அமைதியற்ற நிலை இருக்கும் போது, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் அடக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்பான விக்கிப்பீடியா பக்கங்களை திருத்துவதில், சீனாவுக்கு ஆதரவான மற்றும் ஜனநாயகத்துக்கு ஆதரவான ஆசிரியர்களுக்கு மத்தியில் சொற்போர் வெடித்துள்ளது.

பெரும்பாலான விக்கிப்பீடியா பக்கங்களை யார் வேண்டுமானாலும் திருத்தலாம் என்றாலும், சிலர் மட்டுமே அதை திருத்துகிறார்கள். அதிலும் வெகு சிலர் மட்டுமே விக்கிப்பீடியா பக்கங்களைத் தொடர்ந்து திருத்துகிறார்கள்.

விக்கிப்பீடியாவின் கவர்னிங் பாடி எனப்படும் தலைமை அமைப்புகளில் ஒன்று, சீனாவுக்கு ஆதரவான ஏழு ஆசிரியர்களுக்கு தடை விதித்தது மற்றும் 12 பேருக்கு நிர்வாக ரீதியிலான அதிகாரங்களை கடந்த செப்டம்பர் மாதம் நீக்கிய பிறகு தான் விக்கீபீடியா தலைமைக்கு இந்த பிரச்சனை சென்றடைந்தது.

தடை செய்யப்பட்டவர்கள், ஜனநாயகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர்களை துன்புறுத்தியதாகவும், அச்சுறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

விக்கிப்பீடியாவின் இந்த நடவடிக்கை, சீனா மற்றும் ஹாங்காங் தொடர்பான செய்திகள் மேற்குலகம் சார்புடையதாக இருக்குமென்று பொருள்படும் விதமாக அமையும் என, பிபிசியின் கிளிக் விசாரணையில் பங்கெடுத்த சீனாவுக்கு ஆதரவானோர் கூறுகின்றனர்.

"விக்கிப்பீடியா, பிரத்யேகமாக சீன விக்கீபீடியா சமநிலையானது" என்கிறார் முன்பு அதிக அளவில் பக்கங்களைத் திருத்தும் அதிகாரம் கொண்டவராக அவ்வலைதளத்தின் நிர்வாகிகளில் ஒருவராக இருந்த என்மிங் யான். அவர் தற்போது சீனாவுக்கு வெளியே வசிக்கிறார். அவர் தற்போது விக்கீபீடியாவிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார். அத்தளத்தை தவறாக பயன்படுத்தவில்லை என்கிறார் யான்.

"நீங்கள் சீனாவுக்கு ஆதரவான குரல்களை நீக்குகிறீர்கள், எனவே விக்கிப்பீடியாவின் சமநிலை சீனாவுக்கு எதிரானவர்கள் பக்கம் சாய்கிறது"

இரு நாட்களில் 123 முறை திருத்தப்பட்ட யீன் லாங் தாக்குதல் பக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரு நாட்களில் 123 முறை திருத்தப்பட்ட யீன் லாங் தாக்குதல் பக்கம்

உலகம் முழுக்க விக்கிப்பீடியாவின் கருத்து சுதந்திரம் மற்றும் சமநிலைத் தன்மை கொள்கைகள் பொருந்தும் என விக்கிப்பீடியாவின் நிறுவனர் ஜிம்மி வால்ஸ் கூறுகிறார்.

"பலரால் இங்கு பேச முடியும், 'இது உலகம் குறித்த என் கருத்து, அதே நேரத்தில் மற்ற கருத்துகளும் இருக்கின்றன, ஒரு என்சைக்ளோபீடியா தளம் இது போன்ற கருத்துகள் தொடர்பான விளக்கங்களை ஒரு நியாயமான முறையில் காட்ட வேண்டும்" என்கிறார் அவர்.

பக்கங்களைத் திருத்துவதில் போர்

சீனாவுக்கு ஆதரவான மற்றும் ஜனநாயகத்துக்கு அதரவான பக்கக்களைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு மத்தியில், ஹாங்காங் பிரச்சனை தொடர்பான பக்கங்களைத் திருத்துவதில் ஒரு போரே நடந்திருப்பது பிபிசி கிளிக்கின் ஆய்வு வெளிக் கொண்டுவந்தது. இந்த பக்கங்களைத் திருத்தும் போர் பெரும்பாலும் சீன மொழி தளங்களில் மட்டுமின்றி ஆங்கில பதிப்புகளிலும் நடந்தது.

"சீனாவுக்கு ஆதரவானவர்கள் போராட்டக்காரர்கள் மீது பரிதாபம் ஏற்படும் ரீதியிலான உள்ளடக்கங்களை அடிக்கடி நீக்குவர். உதாரணமாக அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது மற்றும் தடுப்பரண்கள் தொடர்பான படங்களைக் குறிப்பிடலாம். அவர்கள் தங்களுக்கு ஆதரவான உள்ளடக்கங்களை சேர்ப்பர்" என பக்கங்களைத் திருத்துபவராக ஹாங்காங்கில் வாழும் 'ஜான்' என்பவர் கூறினார். தன் மீது வழக்கு பாயும் என்கிற பயத்தால் அவர் தன் விவரங்களை வெளிப்படுத்தவில்லை.

இருதரப்பிலும் பக்கங்களைத் திருத்தும் போர் நடக்கும் என்பதை ஆமோதிக்கிறார் அவர்.

"ஜனநாயகத்துக்கு ஆதரவான பக்கங்களைத் திருத்தும் ஆசிரியர்கள் ஒரு கட்டுரையின் தொனியை அல்லது சமநிலையை மாற்றும் விதத்தில் விவரங்களைச் சேர்ப்பர், ஆனால் என் அனுபவத்தில், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர்கள் அதிரடியாக பொய் செய்திகளை உருவாக்கி வெளியிடுவர்" என்கிறார் அவர்.

"வெளி உலகிலிருந்து ஒரு தலையீடு இல்லாமல் இதை சரி செய்வது சாத்தியமில்லை. யாரோ சிலர் வரலாற்றை மாற்றி எழுத முயல்கிறார்கள்"

இந்த பக்கங்களைத் திருத்தும் போருக்கு ஒரு உதாரணமாக 'யீன் லாங் தாக்குதல் (Yuen Long attack)' என்கிற, ஹாங்காங்கில் 2019ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக சீன மொழியில் விக்கிப்பீடியா தளத்தில் பிரசுரமானதைக் குறிப்பிடலாம்.

ஹாங்காங் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்தது. சுமார் 100 வெள்ளை சட்டை அணிந்த ஆண்கள் ஒரு போக்குவரத்து நிலையத்தில் மக்களைத் தாக்கினர். அந்த வெள்ளை சட்டை அணிந்தவர்களுக்கும் சீனாவுக்கு ஆதரவாக உள்ள குழுவுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2020ல் இரண்டு நாட்களுக்குள் 123 முறை அப்பக்கம் திருத்தப்பட்டது. "கிராமபுறத்தில் உள்ள ஒரு மக்கள்" என்று பொருள்படும் 'rural faction' என்கிற சொல் 'தீவிரவாதிகள்' என பொருள்படும் 'Terrorist' என்று மாற்றப்பட்டது. மோதல் என்று பொருள்படும் 'conflict' என்கிற சொல் தீவிரவாத தாக்குதல் என்று பொருள்படும் 'Terror Attack' என்று மாற்றப்பட்டது.

அச்சுறுத்தல்

அச்சுறுத்தும் வகையிலான செய்திகள்
படக்குறிப்பு, அச்சுறுத்தும் வகையிலான செய்திகள்

சீனாவுக்கு ஆதரவான ஆசிரியர்கள் மீதான தடை பெரும்பாலும் அச்சுறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

பிபிசி ஆய்வில் காண்பிக்கப்பட்ட, தனிநபர் சாட் பரிவர்த்தனைகளில், ஜனநாயகத்துக்கு ஆதரவான ஆசிரியர்கள் மீது ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த பரிந்துரைத்ததைக் காட்டியது.

விக்கிப்பீடியா பக்கத்தை யார் வேண்டுமானாலும் திருத்தலாம் என்கிற வசதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக, அந்த திறந்த அமைப்பின் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

"நான் பக்கத்தை திருத்தத் தொடங்கிய போது, சீனாவுக்கு ஆதரவான ஆசிரியர்கள் என் திருத்தங்களை மீண்டும் திருத்த குவிந்துவிட்டனர்" என்கிறார் பிரிட்டனில் வாழும் ஜனநாயகத்துக்கு ஆதரவான டேவ் என்கிற ஆசிரியர். ஹாங்காங்கில் வாழும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு எந்த வித பாதிப்பும் நேரக் கூடாது என தன் அடையாளங்களைக் குறிப்பிடாமல் பேசினார்.

"என் பிரச்சனையை உயர் அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்ற போது, சீனாவுக்கு ஆதரவான ஆசிரியர்கள் தங்களின் படை பலத்தை காட்டி என்னை வெளியேற்ற முயன்றனர், எனவே என் குரல் அங்கு எடுபடவில்லை" என்கிறார் அவர்.

விக்கீபீடியா நிறுவனர் ஜிம்மி வால்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விக்கீபீடியா நிறுவனர் ஜிம்மி வால்ஸ்

இதற்கிடையில், சீனாவின் தரப்பு பார்வையை பிரதிநிதித்துவப்படுத்த, யான் ஒரு புதிய தளத்தை கட்டமைக்க உதவிக் கொண்டிருப்பதாகக் கூறினார். அது அரசால் தணிக்கை செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சீனாவில் பைடூ, குய்ஹு 360 (Qihu 360) போன்ற தளங்கள் இருக்கின்றன. இதில் குய்ஹு விக்கிப்பீடியாவின் போட்டியாளராக உள்ளது.

மக்களுக்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டால், சீனாவில் தரமான விவரங்களைப் பெரும் தளமாக விக்கிப்பீடியா தொடர்ந்து செயல்படலாம் என்கிறார் அதன் நிறுவனர் ஜிம்மி வால்ஸ்.

"சீனர்களின் கருத்தை வெளிப்படுத்த முடியாமல் பெருந்தடையாக இருப்பது சீன அரசு தான், அவர்கள் தான் மக்கள் விக்கீபீடியா பக்கங்களை திருத்த அனுமதிப்பதில்லை.

"சீனாவை புறந்தள்ளுவது முட்டாள்தனமான யோசனை. நாங்கள் சீனாவிலிருந்து விக்கிப்பீடியா பக்கங்களைத் திருத்த வரும் ஆசிரியர்களை இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :