பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ: மனித குலத்திற்கு எதிரான குற்றம், தொடர்ந்து பரப்பிய போலிச் செய்திகளால் சட்ட நடவடிக்கை

பட மூலாதாரம், Getty Images
பிரேசிலின் செனட் கமிட்டி (நாடாளுமன்றக் குழு) அந்நாட்டு அதிபர் சயீர் பொல்சனாரூ கொரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம் குறித்து அவர் மீது சட்டபூர்வமாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
இந்த கமிட்டியின் தலைவர் செனட்டர் ஒமர் அசிஸ், பொல்சனாரூ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை பிரேசிலில் குற்றங்கள் குறித்து விசாரிக்கும் சுயாதீன விசாரணை அமைப்பின் தலைவரிடம் ஒப்படைக்கவுள்ளார்.
சயீர் பொல்சனாரூ தன் மீது எந்த குற்றமும் இல்லை எனத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
பிரேசிலில் கொரோனா பெருந்தொற்றால் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில்தான் கொரோனா தொற்று உயிரிழப்புகள் அதிகம்.
இந்த வாக்கெடுப்பால் பொல்சனாரூ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஏனென்றால் இந்த பரிந்துரை பிரேசில் அதிபர் பொல்சனாரூவால் நியமிக்கப்பட்ட ஒருவரால் ஆய்வு செய்யப்படும். அதாவது பிரேசிலும் சுயாதீன விசாரணை அமைப்பின் தலைவர் அதிபரால் நியமிக்கப்பட்டவர். அது நிச்சயம் அதிபருக்கு ஆதரவாகத்தான் அமையும்.
அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்
மந்தை எதிர்ப்பு சக்தியை (herd immunity) அடையும் நம்பிக்கையில் கொரோனா தொற்றை நாடு முழுக்க பரவ விடும் கொள்கையை சயீர் பொல்சனாரூ அரசு கடைபிடித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Reuters
மனித குலத்திற்கு எதிரான குற்றம் புரிந்தது மட்டுமல்லாமல், சயீர் பொல்சனாரூ மீது செனட் கமிட்டி மேலும் எட்டு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. குற்றத்தைத் தூண்டியது, ஆவணங்களை போலியாக மாற்றியது, சமூக உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று சயீர் பொல்சனாரூ பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், பெருந்தொற்று குறித்து தவறான தகவல்களை பரப்பியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்த 1,300 பக்க அறிக்கையில் சயீர் பொல்சனாரூவின் மூன்று மகன்கள் உள்பட மேலும் 77 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரேசில் அரசின் ஊழல்கள் குறித்து நடந்து வந்த ஆறு மாத கால விசாரணை இந்த வாக்கெடுப்பு மூலம் முடிவுற்றது.
இந்த விசாரணை காலம் முழுவதுமே சயீர் பொல்சனாரூ, பெருந்தொற்று காலத்தின் தொடக்க புள்ளியிலிருந்து தனது அரசு முறையாக நடந்து கொண்டதாகத் தெரிவித்தார். மேலும் சயீர் பொல்சனாரூவின் அரசியல் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் இதனை அரசியல் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் என தெரிவித்துள்ளனர்.

சயீர் பொல்சனாரூ குற்றம் புரிந்தார் என்று நிரூபிக்கப்படுகிறதோ இல்லையோ அவர் கொரோனா பெருந்தொற்றை கையாண்டதிலும் அதுகுறித்து தெரிவித்த பல கருத்துகளும் சர்ச்சையாகவே இருந்தன. பெருந்தொற்று அவரின் புகழை சரித்தது என்றும் கூறலாம்.
மார்ச் மாதம் பிரேசிலில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதுவரை இல்லாத அளவு அதிகரித்திருந்தது ஆனால் அதற்கு அடுத்த நாள் மக்கள் கோவிட் குறித்து அழுது புலம்புவதை நிறுத்த வேண்டும் என்றார் பொல்சனாரூ.
அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். திங்களன்று கொரோனா தடுப்பு மருந்துக்கும் எய்ட்ஸுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி அவர் பதிவிட்டிருந்த வீடியோவை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
சயீர் பொல்சனாரூவின் வீடியோ யூட்யூப் தளத்திலும் ப்ளாக் செய்யப்பட்டு அவரின் சேனல் ஒரு வார காலத்திற்கு நிறுத்தப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












