"நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல" - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Vivek/Twitter
நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று மத்திய சுகாதாரத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்துக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட் - 19க்கான தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட தீவிரமான பக்க விளைவுகள் குறித்து ஆராய்வதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவில் இருதய நோய் நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள், நுரையீரல் நோய் நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தக் குழுவினர், இந்தியாவில் கோவிட் - 19க்கான தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மரணம் உட்பட மிகத் தீவிரமான பின் விளைவுகள் ஏற்பட்ட 92 பேர் விவகாரங்களை ஆய்வுசெய்தனர். இதில் 68 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் 24 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும் போடப்பட்டிருந்தது.
விவேக்கின் மரணத்திற்குக் காரணம் என்ன?
கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக மக்களிடம் அச்சம் நிலவுவதாகவும், அந்த அச்சத்தைப் போக்கவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர் அப்போது ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதற்காக, சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஜெயந்தி ஆகியோருக்கும், இரு மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து அவர் ட்வீட் செய்திருந்தார்.
ஊசி போட்டுக் கொண்ட மறுநாளே அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது. ஏப்ரல் 16ஆம் தேதி நினைவிழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் ஊசி போட்டுக் கொண்டதற்கும், மாரடைப்புக்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பான சந்தேகங்களும் விவாதங்களும் ஏற்பட்டன.
இந்த நிலையில்தான், விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல என மத்திய சுகாதாரத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டதற்குப் பிறகு கடுமையான பாதிப்பிற்கு உள்ளான 92 பேரது மருத்துவத் தகவல்களை ஆய்வுசெய்த ஆய்வுக் குழு இந்த முடிவுக்கு வந்துள்ளது.
இந்த 92 பேரின் பட்டியலில் விவேக் மரணம் 34வதாக இடம்பெற்றுள்ளது. அதன்படி, அவரது மரணத்திற்குக் காரணம், "ACUTE MYOCARDIAL INFARCTION WITH CARDIOGENIC SHOCK WITH VENTRICULAR FIBRILLATION IN A KNOWN CASE OF HYPERTENSION". அதாவது அவருக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் இருந்த நிலையில், இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகக் குறிப்படப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, விவேக்கின் மரணம் தொடர்பான மருத்துவ சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன.
"தடுப்பூசிகளுக்கு பின் விளைவுகள் இருக்கிறதா?" ஆய்வு சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 92 பேரில் 18 பேருக்கு தடுப்பூசியின் காரணமாகவே பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். தடுப்பூசியால் இவர்களுக்கு இந்தப் பின்விளைவுகள் ஏற்பட முக்கியக் காரணம், ஒவ்வாமை. இந்த ஒவ்வாமை அதிதீவிரமாக ஏற்பட்டு, இரத்த அழுத்தம் குறைந்து நோயாளி அபாயகட்டத்திற்குச் செல்கிறார்.
57 பேருக்கு தடுப்பூசியின் காரணமாகப் பின்விளைவுகள் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், அவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனைகளுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லையெனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 57 பேரில் 25 பேர் இறந்துவிட்டனர். தடுப்பூசி போட்ட பிறகு இவர்களுக்குப் பிரச்சனை ஏற்பட்டாலும், தடுப்பூசிக்கும் அந்தப் பிரச்சனைகளுக்கும் தொடர்பு ஏதும் இல்லை.
9 பேர் மேலே சொன்ன இரண்டு பிரிவுக்கும் இடைப்பட்டவர்களாக கருதப்படுகின்றனர். அதாவது, இவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டவுடன் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டன. ஆனால், அந்தப் பிரச்சனைகளுக்கு தடுப்பூசிதான் காரணமா என்பதை உறுதிசெய்ய போதுமான ஆதாரங்களோ, தகவல்களோ இல்லை. எதிர்கால ஆய்வுகளில் இதற்கு பதில் கிடைக்கலாம்.
மீதமுள்ள 8 பேரின் பின்விளைவுகளுக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. ஏனென்றால், இந்த 8 பேர் பற்றிய முக்கியமான மருத்துவத் தகவல்கள் கிடைக்கவில்லை. அவை கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் இந்த 8 பேர் குறித்து ஆராயலாம் என இந்த அறிக்கை கூறுகிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சிறிய அளவில் பிரச்சனைகள் இருந்தாலும் தடுப்பூசிகள் பெரிய பலனைக் கொடுத்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
பிற செய்திகள்:
- பனிமலைகள் உருகுவதால் மனித குலத்துக்கு என்ன ஆபத்து?
- அண்ணாமலை VS செந்தில் பாலாஜி: ஊழல் தொடர்பாக ட்விட்டரில் தொடரும் மோதல்
- "ஒரு படைத்தலைவனை கூட உருவாக்க முடியவில்லையா?" மதிமுக-வில் வாரிசு அரசியல் எதிர்ப்பு புயல்
- 'ட்ரூத் சோஷியல்' என்ற பெயரில் புதிய சமூக ஊடகம் தொடங்கும் டொனால்டு டிரம்ப்
- ஒரு தலை காதல்: பெண்ணின் கணவரை கொன்ற கோவில்பட்டி இளைஞர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








