புதுச்சேரியில் மசாஜ் சென்டர் என்று பெயரில் பாலியல் தொழில்: 17 வயது சிறுமி உள்பட 7 பேர் மீட்பு

புதுவை மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: 17 வயது சிறுமி உள்பட 7 பேர் மீட்பு
படக்குறிப்பு, பாலியல் தொழில் நடத்தியாகக் கைது செய்யப்பட்டவர்கள்

புதுச்சேரியில் மசாஜ் நிலையம் பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 17 வயது சிறுமி ஒருவர் உள்பட ஏழு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் பெண்கள் அழகு மற்றும் மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், புதுச்சேரியின் முக்கிய பகுதிகளில் உள்ள மசாஜ் நிலையங்களில்சோதனை நடத்தினர்.

அப்போது மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில் செய்வது கண்டறியப்பட்டு 17 வயது சிறுமி ஒருவர் உட்பட ஏழு பெண்களை காவல் துறையினர் மீட்டனர். மேலும் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மசாஜ் நிலைய‌ உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர்களை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்சோவில் வழக்குப் பதிவு

17 வயது சிறுமியை பாலியலில் உடபடுத்தப்பட்டது குறித்து உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாபுஜியை பிபிசி தமிழ்தொடர்பு கொண்டது. அப்போது பதிலளித்த அவர், "சமீபத்தில் இரண்டு மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் ஆய்வுக்கு சென்றோம்.‌ சுமார் 40 நபர்களிடம் மீட்கப்பட்ட சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததும், மசாஜ் செய்ய உட்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அந்த 40 நபர்களையும் கண்டறிந்து அனைவர் மீதும் போக்சோ (பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வருகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

"குறிப்பாக சிறுமி கொடுத்த வாக்குமூலத்தை மையமாகக்கொண்டு மசாஜ் நிலையத்தில் உள்ள பதிவேடு, கண்காணிப்பு கேமரா, தொலைபேசி எண்களை வைத்து சிறுமியிடம் சென்ற வாடிக்கையாளர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.‌ இந்த வழக்கில் அந்த சிறுமியிடம் மசாஜ் மற்றும் பாலுறவு கொள்ளச் சென்ற அனைவருமே குற்றவாளிகளாக கருதப்படுவார்கள். மீட்கப்பட்டவர்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்," என்று‌ தெரிவித்தார்.

புதுவை மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: 17 வயது சிறுமி உள்பட 7 பேர் மீட்பு
படக்குறிப்பு, பாலியல் தொழில் நடத்தியாகக் கைது செய்யப்பட்டவர்கள்

மேலும் மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய நிறுவன கட்டிடங்களை புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளார்கள்.

மசாஜ் நிலையம் பெயரில் பாலியல் தொழில்

புதுச்சேரியில் மசாஜ் நிலையங்கள் அதிகமாக செயல்பட்டு வருகிறது. அதில் குற்றச் செயல்கள் நிகழ்வதாக காவல் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

புதுச்சேரி நகராட்சி சட்டவிதிகள்படி எந்த ஒரு நபருக்கும் அதே பாலினத்தை சேர்ந்தவர் மட்டுமே மசாஜ் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர் பாலினத்தவர் மசாஜ் செய்ய அனுமதி கிடையாது. அதாவது ஆண்களுக்கு ஆணும், பெண்களுக்கு பெண்ணும் மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும். இருந்தபோதிலும் வாடிக்கையாளருக்கு எதிர் பாலினத்தை சேர்ந்தவர்கள் மசாஜ் செய்யும் வழக்கம் புதுச்சேரியின் பெரும்பாலான மசாஜ் நிலையங்களில் நடைபெறுகிறது.

இவ்வாறான சூழலில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாலியல் தொழில் நடைபெறுவதாக புகார்கள் காவல் துறைக்கு வருகிறது. பாதிக்கும் மேலாக மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபச்சாரம் தான் நடைபெறுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலியல் தொழிலை காவல் துறையினர் கண்டறிந்தது எப்படி?

சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் புதுச்சேரியின் முக்கிய இடங்களான ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை‌ மற்றும் பெரியக்கடை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் அதிகமாக மசாஜ் நிலையங்கள் உள்ளது.

புதுவை மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: 17 வயது சிறுமி உள்பட 7 பேர் மீட்பு

இதில் பல மசாஜ் நிலையங்கள்‌ குறித்து வரும் புகார்களின் அடிப்படையில், தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக புகார் வரும் மசாஜ் நிலையங்களில் சோதனை செய்யும் முயற்சியில் புதுச்சேரி காவல் துறையினர் ஈடுபட்டனர்.

"அதன்படி பாலியல் குற்றம் நடைபெறுவதாக புகார் வரும் மசாஜ் நிலையத்தில் காவல் துறை சார்பாக வாடிக்கையாளர் போல போன் செய்து பேசுவோம். அதில் 'full service' என்ற வார்த்தை மசாஜ் மற்றும் பாலுறவு ஆகிய இரண்டும் அடங்கும். அதை வாடிக்கையாளர்கள் போல கேட்கும்போது 100-ல் 20 சதவீதத்தினர் இந்த சேவை இங்கே கிடையாது என்பார்கள். ஆனால் 80 சதவீத மசாஜ் நிலையங்களில் இதனை ஏற்பதன்‌ மூலம் அங்கு ஒழுக்கக்கேடான விஷயம் நடைபெறுவதை உறுதி செய்வோம்."

"அதன் அடிப்படையில் மசாஜ் நிலையத்திற்கு வாடிக்கையாளராக செல்லும்போது பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களை மீட்டு, இந்த குற்றத்தைச் செய்யும் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவோம்," என காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 25 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவை தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :