பெகாசஸ் வேவு பார்ப்பு: இந்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

இந்திய உச்ச நீதிமன்றம் bbc tamil

பட மூலாதாரம், Getty Images

பெகாசஸ் வேவு பார்ப்பு வழக்கில் சுயாதீனமான குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு என்று காரணம் கூறி இந்திய அரசு தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கடுமையாகத் தெரிவித்தனர்.

இந்திய உச்ச நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக, சுயாதீனமாக விசாரிக்க மூவர் குழுவை அமைத்துள்ளது.

நீதிமன்றம் அமைக்கும் சுயாதீன விசாரணைக் குழுவுக்கு பதிலாக , தாங்கள் நிபுணர் குழு ஒன்றை அமைத்து விசாரிக்கிறோம் என்று இந்திய அரசு கூறியதை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தேசியப் பாதுகாப்பு என்று கூறிவிட்டால் மட்டும் நீதித்துறை அந்த விவகாரத்தில் இருந்து விலகிவிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உளவு பார்க்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இருப்பதால் இதில் விசாரணை அவசியம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மூவர் குழுவில் இருப்பவர்கள் யார்?

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அலோக் ஜோஷி மற்றும் தொழில்நுட்ப நிபுணர் முனைவர் சந்தீப் ஓபராய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழு எட்டு வார காலத்தில் தமது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்.

பெகாசஸ் வேவு பார்ப்பு தொடர்பாக தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

குஜராத்தில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்களத்தின் டீன் பொறுப்பில் உள்ள பேராசிரியர் முனைவர். நவீன் குமார் சௌதரி , கேரள மாநிலத்தில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர். பிரபாகரன் மற்றும் மும்மை ஐ.ஐ.டி பேராசிரியர் முனைவர். அஷ்வின் அனில் குமஸ்தே ஆகியோர் இக்குழுவில் இருப்பார்கள்.

தனிப்பட்ட வகையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு இந்தக் குழுக்களின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்று நீதிபதி ரமணா தெரிவித்தார்.

ஒருவரின் தனியுரிமை மீது கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்தக் கட்டுப்பாடுகள் அரசமைப்பு சட்டத்துக்கு உட்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரமணா இன்று தீர்ப்பு வழங்கும்போது கூறினார்.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இஸ்ரேலின் பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ஜூலை மாதம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஒருவருக்கு தெரியாமலேயே பெகாசஸ் மென்பொருளை அவரது செல்பேசியில் நிறுவ முடியும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருவருக்கு தெரியாமலேயே பெகாசஸ் மென்பொருளை அவரது செல்பேசியில் நிறுவ முடியும்.

பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உருவாக்கிய என்.எஸ்.ஓ எனும் இஸ்ரேலிய நிறுவனத்தால் உலகெங்கிலும் கண்காணிப்புக்கு உட்பட்டதாகக் கருதப்படும் 50,000 தொலைபேசி எண்களின் பட்டியல் கசிந்தது. இந்த பட்டியல் குறித்து பிரான்ஸைச் சேர்ந்த லாபநோக்கற்ற ஊடக நிறுவனமான `ஃபார்பிட்டன் ஸ்டோரிஸ்` புலனாய்வு செய்து செய்தியை வெளியிட்டது.

இந்தியாவின் 'தி வயர்', பிரிட்டனின் 'தி கார்டியன்', அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' உள்பட பல சர்வதேச ஊடகங்களில் இந்தப் புலனாய்வுச் செய்தி வெளியானது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதன்பின் பெகாசஸ் வேவு பார்ப்பு குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நாடுகளின் அரசுகளுக்கும், சட்ட அமலாக்க முகமைகளுக்குமே குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், சட்டபூர்வமாக தங்கள் 'ஸ்பைவேர்' (உளவு மென்பொருள்) விற்பனை செய்யப்படுவதாக அதை உருவாக்கிய என்.எஸ்.ஓ நிறுவனம் கூறியது. இதனால் இந்திய அரசே வேவு பார்க்கிறதா என்ற விவாதமும் சர்ச்சையும் எழுந்தது.

பெகாசஸ் - ரகசிய உளவு மென்பொருள்

பெகாசஸ் எனப்படும் ரகசிய உளவு மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்.எஸ்.ஓ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன.

இந்த வேவு பார்க்கும் மென்பொருளை அரசுகள் பயன்படுத்துவது குறித்துப் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் என்.எஸ்.ஓ நிறுவனத்துக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளன.

Supreme Court Pegasus Snooping Row

பட மூலாதாரம், Getty Images

ஆனால், இந்தியா இந்த மென்பொருளை வாங்கியதா இல்லையா என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.

நாட்டின் பாதுகாப்புக்காகவே பெகாசஸை வாங்குவதாகப் பல நாட்டின் அரசுகள் கூறினாலும், அவை மக்களை வேவு பார்க்க இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்திய அரசு பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்துகிறதா என்று, ஆகஸ்ட் மாதம் வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதில் அளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதுபோன்ற தகவல்களை பொதுவெளியில் வெளியிடுவது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கூறினார்.

வேண்டுமானால் இந்த விவகாரத்தில் தவறான தகவல்கள் பரவுவதை தவிர்க்கும் விதமாக சிறப்புக் குழுவை மத்திய அரசு நியமிக்க தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற விவகாரத்தில் தேச நலனுக்கு எது தேவையோ அதை மட்டுமே அரசு செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால், கடைசி வரை பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி சாமானியர்களையும் முக்கிய பிரமுகர்களையும் அரசு வேவு பார்த்ததாக என்ற விவரத்தை அவர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தவில்லை.

பெகாசஸ் உளவு மென்பொருள் எப்படி வேலை செய்கிறது?

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒருவரின் ஐபோன் அல்லது ஆண்டிராய்ட் போனை தொலைவிலிருந்தே ஹேக் செய்யலாம்.

இதன் மூலம் ஹேக்கர்கள், அந்த போனில் இருந்து மெசேஜ், புகைப்படங்கள், மின்னஞ்சல், பயனாளர் செல்லும் இடம் போன்ற அனைத்து தகவல்களையும் திருட முடியும். தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்க முடியும்.

அத்துடன் மறையாக்கம் செய்யப்பட்ட ( encrypted) மேசேஜ்களை கூட பெகாசஸ் மூலம் படிக்கலாம் என கெஸ்பர்ஸ்கி சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெகாசஸ்

மறையாக்கம் செய்யப்பட்ட மேசேஜ்களை அனுப்புநர் மற்றும் பெறுநரால் மட்டுமே படிக்க முடியும். மெசேஜிங் தளங்களை நடத்தும் வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களால் கூட அதை பார்க்க முடியாது.

ஒரு நபரின் ஃபோனில் பெகாசஸ் நுழைந்தவுடன், வேவு பார்ப்பதற்குத் தேவையான மாட்யூல்களை இன்ஸ்டால் செய்யும். பின்னர் ஃபோனின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்ளும்.

மேலும் அதைக் கட்டுப்படுத்துபவர்களுடன் 60 நாட்களுக்கு மேலாக தொடர்புகொள்ள முடியவில்லை என்றாலோ அல்லது தவறான ஃபோனில் இன்ஸ்டால் செய்யப்பட்டாலோ தானாக அழிந்துகொள்ளும் வகையில் அது வடிவமைப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :