வெளிநாட்டு வேலை பெயரில் ஆன்லைனில் மோசடி: எப்படி தப்பிப்பது?

பெண்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் சைபர் பாதுகாப்பு தொடரின் ஆறாம் பகுதி இது.

புதுச்சேரியில் அண்மையில் வேலைக்கு விண்ணப்பித்த நபரின் ஆவணங்களை சேகரித்து கொண்டு அவரிடம் பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி மோசடி செய்துள்ளனர் ஒரு கும்பல்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ளது ரெட்டியார்பாளையம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 25. இவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பிரெஞ்சு துணை துாதரகம் என்ற பெயரில் மின்னஞ்சல் அனுப்பி, இணையம் மூலமாக சுமார் 5 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து, ஹேமா கொடுத்த புகாரின் அடிப்படையில் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குற்றத்தில் ஈடுபட்டது பெங்களூரில் வசித்து வந்த நைஜீரியா நாட்டின் அலிமோஷா பகுதியைச் சேர்ந்த 31 வயது டைவோ அத்வாலே என்று சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 419, 420 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 'D' ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் போலீஸ் அதிகாரிகள். கைப்பற்றப்பட்ட பணம், பொருள்கள்.
படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் போலீஸ் அதிகாரிகள். கைப்பற்றப்பட்ட பணம், பொருள்கள்.

ஏமாற்றியது எப்படி?

இதைத்தொடர்ந்து நீதிமன்ற அனுதியுடன் குற்றம்சாட்டப்பட்ட நபரை காவலில் வைத்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெங்களூருவுக்கு புதுச்சேரி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கணேஷ் தலைமையிலான காவல்துறையினர் சென்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட நபரின் பாஸ்போர்ட், 1.5 லட்சம் ரொக்கம் மற்றும் அவர் பயன்படுத்திய ஒரு ஆப்பிள் ஐபேட், 2 லேப்டாப்கள், செல்பேசிகள் உள்ளிட்ட 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவு முதுநிலை கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் கூறுகையில், "2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் இந்தியா வந்த டைவா அத்வாலேவிற்கு மூன்று ஆண்டுகளில் விசா அனுமதி முடிவடைந்த நிலையில், சட்டத்துக்கு புறம்பாக இந்தியாவில் தங்கியுள்ளார். பெங்களூருவில் தங்கியிருந்த இவர், அப்பகுதியில் உள்ள விவரம் தெரியாத மக்களிடம் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சிம்கார்டுகளை வாங்கியுள்ளார். அவற்றைக் கொண்டே இணையம் வழியாக மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது," என்று தெரிவித்தார்.

`வெளிநாட்டில் வேலை`

இந்த வழக்கை விசாரணை செய்த சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கணேஷை பிபிசி தமிழ் சந்தித்தபோது, குற்றம் நடந்தது எப்படி என்பதை விவரித்தார்.

"ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் உடைய குற்றவாளிகள் பிறரை ஏமாற்ற பெரிய அளவில் சிரமப்படுவதில்லை. அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே போலி சிம் கார்ட் மற்றும் வங்கி தகவல்களை சேகரிக்கின்றனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து பல்வேறு வலைதளங்களில் வெளிநாட்டில் வேலை தேடி விண்ணப்பித்து வந்துள்ளார். இந்த பெண் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புவதை அறிந்த சந்தேக நபர், போலி இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். சரியாக அந்த பெண் வேலைக்கு விண்ணப்பித்த நேரத்தில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து வேலை வழங்குவதாக தகவல் அனுப்பியுள்ளார்.

Presentational grey line
Presentational grey line

இதையடுத்து அந்த பெண்ணை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரான்ஸ் நாட்டில் அதிக சம்பளத்துடன் மேலாளர் பதவி இருப்பதாக கூறியுள்ளார். மேலும் பணி அனுமதி மற்றும் விசா விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சலை தொடர்ப்பு கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து சந்தேக நபர் பல்வேறு காரணங்களை கூறி பலமுறை ரூபாய் 5,25,400 வரை பணம் சம்பந்தப்பட்ட பெண்மிடம் இருந்து பறித்துள்ளார். பின்னர் அந்த நபர் சம்பந்தப்பட்ட பெண் உடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்து சைபர் கிரைமில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்தோம்," என்றார் கணேஷ்.

இதுபோன்ற வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என பல்வேறு தூதரகங்களே எச்சரிக்கும் நிலையில், இம்மாதிரியான மோசடிகளும் தொடர்ந்து கொண்டேதான் வருகின்றன.

கணினி

பட மூலாதாரம், Getty Images

தடுப்பது எப்படி?

பொதுவாக இம்மாதிரியான இணைய வழி குற்றங்களை தடுக்க வங்கி மற்றும் தனிநபர் சார்ந்த தகவல்களை பொதுவெளியிலோ அல்லது முன்பின் தெரியாதவர்களிடமோ பகிர்வதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

"சைபர் கிரைமை பொருத்தவரை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். நம்முடைய தனிப்பட்ட விவரங்களை சமூக வலைதளத்தில், மற்றும் வெளி நபர்களுக்கு பகிர எந்த அவசியமும் இல்லை. எடுத்துக்காட்டாக வணிக வளாகத்திற்கு பொருள் வாங்க செல்லும் போது நம்முடைய தொலைபேசி எண்ணை பகிர்ந்தால் தள்ளுபடி சலுகை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி நம் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொள்கின்றனர். அந்த சமயத்தில் இருந்து பகிர்பவரின் தனிப்பட்ட தகவல்கள் வெளியே வந்துவிட்டது என்று தான் பார்க்க வேண்டும். ஒரு நபரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குற்றவாளிக்கு கிடைத்தால் அதன் மூலமாக தனிப்பட்ட விவரங்களை சமூக வலைத்தளத்தில் ஆராய்ந்து நம்மை பற்றிய அனைத்து தகவலையும் சேகரித்து கொள்கின்றனர்," என்கிறார் சைபர் கிரைம் காவல் பிரிவு உதவி ஆய்வாளர் சந்தோஷ்.

வங்கி கணக்கு விவரங்கள் மட்டுமல்லாமல் ஆதார் மற்றும் ஆதார் நகலை பயன்படுத்தும் விதத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் சந்தோஷ்.

"புதிய தொலைபேசி எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை தவிர்ப்பது நல்லது. மேலும் நம்முடைய ஆதார் புகைப்பட நகலை வெளியே கொடுக்க நேர்ந்தால், காலியாக உள்ள வெள்ளை படிவத்தில் கையெழுத்திட கூடாது. சரியாக ஆதார் அச்சிடப்பட்ட படிவத்தில் மீது எந்த பயன்பாட்டிற்காக இதை கொடுக்கிறோம் என்று எழுதி, தேதி முதற்கொண்டு குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும்." என்கிறார்.

அதேபோன்று பொதுவெளியில் பயன்படுத்த ஒன்று தனிநபர் பயன்பாட்டிற்கு ஒன்று என இருவேறு மின்னஞ்சல்களை வைத்து கொள்ளலாம் என்கிறார். முடிந்தால் இருவேறு தொலைப்பேசி பயன்படுத்துவதும் பாதுகாப்பானது என்கிறார்.

"நம்முடைய தனிப்பட்ட தொலைபேசி எண், வங்கி செயலி இதை அனைத்தும் ஒரு தொலைபேசியில் வைத்துக் கொள்ளலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் விளையாட்டு செயலிகள் அனைத்தும் வேறு தொலைபேசியில் வைத்திருந்தால் தமது தனிப்பட்ட விவரங்களை மற்ற செயலிகள் எடுக்கும் முயற்சியை தவிர்க்க வழி செய்யலாம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நாம் விழிப்புடன் இருந்தால் நம்முடைய தகவல்கள் திருடப்படுவதை முழுமையாக தவிர்க்கலாம்," என்று சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சந்தோஷ் தெரிவிக்கிறார்.

நீங்கள் இதுபோன்ற சவால்களைச் சந்தித்திருந்தால், உங்கள் அனுபவங்களை [email protected] என்ற மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :