இஸ்மாயில் சப்ரி யாகூப்: மலேசிய துணைப் பிரதமர் 40 நாள்களில் பிரதமர் ஆனது எப்படி?

பட மூலாதாரம், SHAFIQ HASHIM/Bernama
- எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராகப் பதவியேற்றுள்ளார் இஸ்மாயில் சப்ரி யாகூப். கடந்த ஒன்றரை மாதங்களில் மலேசிய அரசியல் களம் அடுத்தடுத்துப் பல்வேறு திருப்பங்களை சந்தித்துள்ளது.
இவ்வாறு நடக்கும் என்றோ, நாட்டை வழிநடத்தும் பொறுப்புக்கு தாம்வருவோம் என்றோ இஸ்மாயில் சப்ரி மட்டுமல்ல, அவரது சக அரசியல் தலைவர்களும், மலேசிய மக்களும் கூட எதிர்பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது அதுதான் நடந்திருக்கிறது.
சரியாக ஒன்றரை மாதங்களுக்கு முன்னர், பெரிக்கத்தான் நேசனல் எனப்படும் தேசிய கூட்டணியின் தலைவரான அன்றைய பிரதமர் மொஹிதின் யாசின் தலைமையிலான அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தார் இஸ்மாயில் சப்ரி. தேசிய கூட்டணியில் இடம்பெற்றிருந்த அம்னோ கட்சியின் உதவித் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்த மொஹிதின் யாசினுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் எனில், தாங்கள் முன்வைக்கும் சில பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என அம்னோ கட்சித் தலைமை வலியுறுத்தியது. ஆனால் மொஹிதின் யாசின் இதற்கு செவிசாய்க்கவில்லை.
பெரிக்கத்தான் நேசனல் கூட்டணியில் பெர்சாத்து, அம்னோ, மலேசிய இந்திய காங்கிரஸ், மலேசிய சீன சங்கம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மலேசிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 222 இடங்கள் உள்ளன. பெரிக்கத்தான் நேசனல் கூட்டணிக்கு 114 எம்பிக்களின் ஆதரவு இருந்தது. இவற்றுள் 38 பேர் அம்னோவை சேர்ந்தவர்கள். எனவே அம்னோவின் ஆதரவு இன்றி மொஹிதின் யாசின் பதவியில் தாக்குப்பிடிப்பது சாத்தியம் இல்லை.
எனினும், அம்னோ முன்வைத்த கோரிக்கைகளை அவர் ஏற்காததால் பிரச்னை ஏற்பட்டது. கடும் அதிருப்தி அடைந்த அம்னோ கட்சித் தலைமை, பிரதமர் மொஹிதினுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. எனினும் மொஹிதின் அசைந்து கொடுக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
அம்னோ கட்சித் தலைமையுடன் சமரசம் செய்து கொள்வதை விடுத்து, அக்கட்சி சார்பில் தமது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இஸ்மாயில் சப்ரி உள்ளிட்டோருடன் வெளிப்படையாக ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் முடிவில் மூத்த அமைச்சராக இருந்த இஸ்மாயில் சப்ரி, திடீரென துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அம்னோவின் மற்றொரு அமைச்சரான ஹிஷாமுடின் மூத்த அமைச்சர் ஆனார். இதனால் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர், கட்சித் தலைமையை மீறி மொஹிதின் யாசினுக்கு ஆதரவாக மாறினர்.
அதிர்ச்சி அடைந்த அம்னோ கட்சித் தலைமை, பெரிக்கத்தான் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அம்னோ எம்பிக்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், கட்சிக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்து.
பதவி விலக மறுத்த இஸ்மாயில் சப்ரி
அப்போது திடீர் திருப்பமாக, பதவி விலக மறுத்தார் இஸ்மாயில் சப்ரி. மேலும், மொஹிதின் யாசின் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக மாறிய அம்னோ எம்பிக்களுக்கு தலைமையேற்று, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அவரது இந்த முடிவும் செயல்பாடும்தான் இன்று அவரை பிரதமர் நாற்காலியில் அமர வைத்துள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இஸ்மாயில் சப்ரியின் காய் நகர்த்தல்களால் அதிர்ந்த அம்னோ தலைமை, பின்னர் சுதாரித்து பதிலடி கொடுத்தது. பிரதமரை அடுத்து, பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கத்துக்கு அளித்து வந்த ஆதரவையும் திரும்பப் பெற்றது. இதனால் பிரதமர் மொஹிதின் யாசின் அரசு பெரும்பான்மையை இழந்தது தெளிவானது. மொஹிதின் பதவி விலகினார்.

பட மூலாதாரம், Getty Images
இஸ்மாயில் சப்ரியால் நாற்பது நாள்கள் மட்டுமே துணைப் பிரதமர் பதவியில் நீடிக்க முடிந்தது.
எனினும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தரப்பால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இஸ்மாயில் சப்ரி தரப்போ சத்தமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசியது. முதற்கட்டமாக மொஹிதின் யாசின் வசமுள்ள ஐம்பது எம்பிக்களின் ஆதரவு கிடைத்தது. அடுத்து அம்னோவின் 38 எம்பிக்களின் ஆதரவும் உறுதியானது.
"கடந்த தேர்தலில் அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது அம்னோ. இப்போது அக்கட்சியை சேர்ந்த ஒருவருக்குப் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே அவருக்குப் பிளவுபடாத ஆதரவை அளிக்க வேண்டும்," என்று அம்னோவில் பேச்சு எழுந்தது.
இதனால் அக்கட்சியின் தேசியத் தலைவர் சாஹித் ஹமிதிக்கு நெருக்கடி ஏற்பட்டது. வேறு வழியின்றி, இஸ்மாயில் சப்ரிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தார். சில சிறிய கட்சிகளும் ஆதரவளித்தன.
மலேசியாவில் அடுத்த பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன. எனினும் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததும் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என அனைத்து கட்சிகளுமே வலியுறுத்தி உள்ளன.
அதுவரை கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தமது தலைமையிலான புதிய அரசாங்கம் கவிழ்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வது இஸ்மாயில் சப்ரிக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? சில புரிதல்களும் விளக்கங்களும்
- ஆஃப்கனில் அஞ்சி நடுங்கும் ஒருபாலுறவினர் - 'தாலிபனால் கண்ட இடத்திலேயே கொல்லப்படுவேன்'
- நள்ளிரவில் கறிக் கோழியைத் திருடிய 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு
- அல்லா கோயிலுக்கு அலங்காரம்; பூக்குழி இறங்கி மொஹரம் கொண்டாடிய இந்துக்கள்
- மழலைக் குழந்தை போல ஒலி எழுப்பும் வெளவால் குட்டிகள்: ஒட்டுக்கேட்ட ஆய்வாளர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












