கொரோனா வைரஸ்: மலேசியாவில் அந்நியத் தொழிலாளர்கள் பரிசோதனை செய்து கொள்ள மானியம்

பட மூலாதாரம், Getty Images
மலேசியாவில் புதிதாக 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 7,819 என்றும், கடந்த 24 மணிநேரத்தில் 23 பேர் கோவிட்-19 நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் என்றும் மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அந்நியத் தொழிலாளர்கள் கோவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள 150 மலேசிய ரிங்கிட் மானியமாக வழங்கப்படும் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.
அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததை அடுத்து நாட்டில் உள்ள அந்நியத் தொழிலாளர்கள் அனைவரும் இப்பரிசோதனையை செய்து கொள்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனால் அவர்களை பணிக்கு அமர்த்தியுள்ள முதலாளிகள், நிறுவனங்களுக்கு பெரும் தொகை செலவாகும் என்றும், அரசாங்கம் இதற்கான மானியத்தை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலா 150 ரிங்கிட் மானியம் வழங்கப்படும் என மலேசிய மனிதவள அமைச்சர் சரவணன் அறிவித்துள்ளார்.
ஹோட்டல் துறையில் 30 ஆயிரம் பேர் வேலை இழந்தனர்
இதற்கிடையே மலேசியாவில் தங்குவிடுதி (ஹோட்டல்) துறையில் சுமார் 30 ஆயிரம் பேர் வேலை இழந்திருப்பதாக மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இது போக, கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு 10 ஆயிரம் பேர் வற்புறுத்தப்படுவதாகவும், 6 ஆயிரம் ஊழியர்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்க காங்கிரஸ் சுட்டிக்காட்டி உள்ளது.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இத்தகைய பிரச்சினைகள் தொடர்பாக தங்களுக்கு நூற்றுக்கணக்கான புகார்கள் வருவதாக தெரிவித்துள்ள தொழிற்சங்க காங்கிரஸ், பல்வேறு துறைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பி இருக்கும் போக்கை மாற்றிக்கொண்டு மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க மலேசிய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
சிங்கப்பூர் நிலவரம்
சிங்கப்பூரில் மேலும் புதிதாக 518 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியானது. இதையடுத்து நோய்த்தொற்றியோரின் எண்ணிக்கை 34,884ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரு மாதங்களாக அமலில் இருந்த முடக்க நிலைக் கட்டுப்பாடுகளை ஜூன் 2ஆம் தேதி முதல் தளர்த்தி உள்ளது சிங்கப்பூர் அரசு. இதையடுத்து பெரும்பாலான துறைகள் மீண்டும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கும் என்றும், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிக்குத் திரும்புவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் வைரஸ் தொற்றுப்பரவல் அதிகமாக இருப்பதால், அவர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு சிங்கப்பூர் அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
தங்குவிடுதிகளில் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அவர்களது முதலாளிகளுடன் தங்கும் விடுதிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தி உள்ளது.
தங்குவிடுதிகளுக்கு வந்து செல்வோரை கண்காணிக்க வேண்டும், விடுதிகள் இயங்கும் கட்டடத் தொகுப்புகளில் ஒரு தொழிலாளி மற்றொரு பகுதிக்குச் செல்லாமல் தடுக்க வேண்டும், இதற்காக தடுப்புகள் அமைக்க வேண்டும், விடுதிகளிலும் தனிமைப்படுத்தும் இடங்களை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை சிங்கப்பூர் அரசு வழங்கி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு ஊழியர்கள் விடுமுறை நாட்களில் வெளியே செல்லக் கூடாது என்று தெரிவித்துள்ள சிங்கப்பூர் அரசாங்கம், விடுமுறை நாட்களில் ஊழியர்களுக்கு தேவையான, அத்தியாவசியப் பொருட்களும் உணவும் கிடைப்பதை அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களும் முதலாளிகளும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
விதிமுறைகளை மீறும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறு அளவிலான அபராதத்தை தங்கும் விடுதி நடத்தும் நிறுவனங்கள் விதிக்கலாம் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிற செய்திகள்:
- இந்திய மாணவர்களின் வெளிநாட்டுக் கனவை தகர்த்த கொரோனா வைரஸ்
- கொரோனா வைரஸ்: தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு - விரிவான தகவல்கள்
- பாகிஸ்தான் வழியாக சாரை சாரையாக வந்த வெட்டுக்கிளி கூட்டத்தினால் இந்தியாவுக்கு பேராபத்தா?
- மோதி 2.0ஆட்சி: டிஜிட்டல் இந்தியாவில் உதவித்தொகைக்காக வலுக்கும் போராட்டங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












