பாகிஸ்தான் வழியாக சாரை சாரையாக வந்த வெட்டுக்கிளி கூட்டத்தினால் இந்தியாவுக்கு பேராபத்தா?

பட மூலாதாரம், ARIF ALI
பாகிஸ்தான் வழியாகப் பெருங்கூட்டமாக வரும் பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் பயிர்களை நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன.
கடந்த மூன்று தசாப்தங்களில் வெட்டுக்கிளிகளின் மிகப்பெரிய தாக்குதல் இது என்று நிபுணர்கள் நினைக்கின்றனர்.
இந்த வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டு, ட்ரோன்கள், டிராக்டர்கள் மற்றும் கார்கள் உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அவற்றை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டமானது இதுவரை 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களை சேதப்படுத்திவிட்டன.
"ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எட்டு முதல் பத்து வெட்டுக்கிளிகள் கொண்ட பல திரள்கள் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் தீவிரமாக செயல்படுகின்றன" என்று அரசின் வெட்டுகிளி எச்சரிக்கை அமைப்பான லோகஸ்ட் வார்னிங் நிறுவனத்தின் துணை இயக்குனர் கே.எல். குர்ஜார் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இரு மாநிலங்களிலும் பருவகால பயிர்களுக்கு பரவலான சேதங்களை ஏற்படுத்தியுள்ள வெட்டுக்கிளியின் தாக்குதலினால், பல விவசாயிகள் பேரழிவிற்கு ஆளாகியுள்ளனர்

பட மூலாதாரம், VISHAL BHATNAGAR/AFP VIA GETTY IMAGES
நாடு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் கொந்தளிப்பான இந்த நேரத்தில் இந்த வெட்டுக்கிளி தாக்குதல் கவலைகளை அதிகப்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானுக்குள் நுழைந்து இந்தியாவில் அழிவை ஏற்படுத்துவதற்கு முன்னதாக, இந்த வெட்டுக்கிளிகளின் பிரம்மாண்டமான கூட்டம் அண்டை நாடான பாகிஸ்தானில் மாபெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன.
"வெட்டுக்கிளியின் சிறிய அளவிலான கூட்டங்களை இந்தியாவின் வேறு சில மாநிலங்களிலும் காணமுடிகிறது" என்கிறார் லோகஸ்ட் வார்னிங் நிறுவனத்தின் துணை இயக்குனர் கே.எல். குர்ஜார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் கூற்றுப்படி, நான்கு கோடி வெட்டுக்கிளிகளைக் கொண்ட கூட்டமானது 35 ஆயிரம் மக்களுக்கு போதுமான உணவை அழித்துவிடும்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரின் குடியிருப்பு பகுதிகளிலும் இந்த வெட்டுக்கிளிகளை காண முடிந்தது.
வெட்டுக்கிளிகளை விரட்ட மக்கள் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். சிலர் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தார்கள். வேறு சிலர், பாத்திரங்களை தட்டி ஓசை எழுப்பி வெட்டுக்கிளிகளை விரட்ட முயல்கிறார்கள்.

பட மூலாதாரம், ANI
ஜூன் மாதத்தில் இந்த நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு தொடக்கத்தில் கனமழை மற்றும் சூறாவளி ஏற்பட்ட சமயத்தில், வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் அதீதமாக அதிகரித்தது. இதனால், அரேபிய தீபகற்பத்தில் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்க வழிவகுத்தது.
1993ஆம் ஆண்டுக்கு பிறகு, இவ்வளவு பெரிய அளவில் வெட்டுக்கிளி தாக்குதலை இந்தியா எதிர்கொண்டதில்லை.
பாகிஸ்தானின் எல்லையிலுள்ள ராஜஸ்தானின் சில பகுதிகளில், வெட்டுக்கிளி தாக்குதல்களால் ஆண்டுதோறும் பெருமளவிலான பயிர்கள் சேதமடைகின்றன.
ஆனால் இந்த முறை வெட்டுக்கிளிகள் தனது எல்லையை விரிவாக்கிக் கொண்டு, ராஜஸ்தானின் எல்லையைத் தாண்டி உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கும் வந்துவிட்டன. இது இதற்கு முன் எப்போதும் இல்லாத அரிய விஷயம் என்பதால் கவலை அதிகரித்துள்ளது.
காற்றின் வேகம் மற்றும் காற்று வீசும் திசையின் காரணமாக அவை தென்மேற்கு நோக்கி நகர்கின்றன என்று லோகஸ்ட் எச்சரிக்கை மையம் கூறுகிறது.
பாலைவன வெட்டுக்கிளிகள் எவ்வாறு பேரழிவாக மாறுகின்றன?
வெட்டுக்கிளி இனங்களில் ஒன்றான பாலைவன வெட்டுக்கிளிகள் பொதுவாக வெறிச்சோடிய பகுதிகளில் காணப்படுபவை. முட்டையிலிருந்து உருவாகி சிறகுகள் கொண்ட வெட்டுக்கிளியாக மாறும்.
ஆனால் சில நேரங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் ஆபத்தான வடிவத்தை எடுத்துவிடுகின்றன.
பச்சை புல்வெளிகளில் பாலைவன வெட்டுக்கிளிகள் திரளாக வரும்போது, அவை மக்கள் வசிக்காத இடங்களில் வாழும் சாதாரண பூச்சிகளைப் போல நடந்து கொள்வதில்லை.
மாறாக, அவை பயங்கரமான வடிவத்தை எடுக்கின்றன. இந்த கட்டத்தில், வெட்டுக்கிளிகள் தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொண்டு பேரழிவை ஏற்படுத்துகின்றன.
வானத்தில் பறக்கும் இந்த கூட்டங்களில் பத்து பில்லியன் வெட்டுக்கிளிகள் இருக்கும். இவை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பரப்பளவில் பரவிப் பறக்கும்.
இந்த வெட்டுக்கிளிகளின் பெருந்திரள்கள் ஒரே நாளில் 200 கிலோமீட்டர் பயணிக்கக்கூடியவை.
இந்த வெட்டுக்கிளிகள் தங்கள் உணவுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் பெரும்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் கூற்றுப்படி, ஒரு வெட்டுக்கிளி கூட்டமானது, சராசரியாக இரண்டாயிரத்து ஐநூறு மக்களுக்கு தேவையான உணவு தானியங்களை கபளீகரம் செய்துவிடும்.

பட மூலாதாரம், VISHAL BHATNAGAR/AFP VIA GETTY IMAGES
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2003-05 க்கு இடைப்பட்ட சமயத்தில் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கையில் இதேபோன்ற திடீர் அதிகரிப்பு ஏற்பட்டது. இதனால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இரண்டரை பில்லியன் டாலர்கள் மதிப்பிலான விவசாய இழப்பு ஏற்பட்டது.
அதற்கும் முன்னதாக, 1930 களிலும், 1940 மற்றும் 1950 களிலும் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
மிகவும் ஆபத்தான வெட்டுக்கிளிகளின் திரள்கள், பல பகுதிகளுக்கும் செல்கின்றன. அதிக அளவிலான எண்ணிக்கையின் காரணமாக அவற்றின் தாக்குதல் பிளேக் என்று அழைக்கப்படுகிறது.
பத்து பேரில் ஒருவர் பாதிக்கப்படுகிறார்
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் பத்தில் ஒருவரின் வாழ்க்கையில் பாலைவன வெட்டுக்கிளிகள் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இதனால்தான், உலகின் மிக ஆபத்தான பூச்சிகளின் பிரிவில் பாலைவன வெட்டுக்கிளிகள் பட்டியலிடப்படுகின்றன.
கடந்த தசாப்தங்களில் மிகவும் ஆபத்தான வெட்டுக்கிளி பெருங்கூட்டத்தைப் போலவே தற்போது வந்திருக்கும் இந்த வெட்டுக்கிளி படையானது, ஆப்பிரிக்காவின் புல்வெளிகளையும் வயல்களையும் சேதப்படுத்திவருகின்றன. இந்த வெட்டுக்கிளிகலின் தாக்குதல்கள் இந்த முழு பிராந்தியத்திலும் உணவு நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
ஒரு வெட்டுக்கிளி எவ்வளவு ஆபத்தானது?
ஒரு வெட்டுக்கிளி நாள்தோறும் தனது எடைக்குச் சமமான அதாவது சுமார் இரண்டு கிராம் உணவை சாப்பிடும்.
இது வெள்ளம் மற்றும் வறட்சியை எதிர்கொள்ளும் ஒரு மாபெரும் புவியியல் பகுதியில் கணிசமான அளவு உணவு நெருக்கடியை ஏற்படுத்தும்.
ஆனால் வெட்டுக்கிளியின் தாக்குதல்கள் எவ்வாறு பரவலாகின என்பதே மாபெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
2018-19ல் ஏற்பட்ட சூறாவளி புயல்கள் மற்றும் கடுமையான மழையே இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் 16 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாலைவன வெட்டுக்கிளிகள் பாரம்பரியமாக வாழ்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு அரேபிய தீபகற்பத்தில் இரண்டு தலைமுறை வெட்டுக்கிளிகள் ஈரமான மற்றும் சாதகமான சூழல் காரணமாக செழித்து வளர்ந்தன என்பது யாருக்கும் தெரியவில்லை.
2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வெட்டுக்கிளிகளின் முதல் கூட்டம், யேமன், சவுதி அரேபியாவை கடந்து இரானையும் பின்னர் கிழக்கு ஆப்பிரிக்காவையும் சென்றடைந்தது.
கடந்த ஆண்டு இறுதிக்குள் உருவான புதிய வெட்டுக்கிளிகள் கென்யா, ஜிபூட்டி மற்றும் எரித்திரியாவை அடைந்து, பின்னர் அங்கிருந்து உலகின் பிற நாடுகளுக்கும் பரவின.வெட்டுக்கிளி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற ஏதாவது வழி இருக்கிறதா?
ஆப்பிரிக்காவின் கொம்பு எனப்படும் பகுதியில் வெட்டுக்கிளிகள் பெருமளவில் அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, சில நாடுகள் இந்த விஷயங்களில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன.
சிறந்த கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பைப் பொறுத்துதான் தடுப்பு முறை பயனளிப்பதாக இருக்கும்.
உணவு மற்றும் வேளாண் அமைப்பால் நடத்தப்படும் பாலைவன வெட்டுக்கிளி தகவல் சேவையானது, வெட்டுக்கிளிகளின் திரள்கள், அவை தொடர்பான எச்சரிக்கைகள், அவை செல்லக்கூடிய இடங்கள் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான தகவல்களை வழங்குகிறது.
ஆனால் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை எல்லை மீறிச் செல்லும்போது, அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடுக்கவும் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இருப்பினும், இந்த சிக்கலை தீர்க்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியானது.
கரிம பூச்சிக்கொல்லிகளும், இயற்கையான வேட்டையாடிகளும் பாலைவன வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும். ஆனால் பொதுவாக அவற்றை எதிர்க்க பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
கை பம்புகள், ரயில்கள் மற்றும் விமானங்களின் உதவியுடன் குறுகிய நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பரவலாகத் தெளித்து வெட்டுக்கிளிகளை கொல்ல முடியும்.
வெட்டுக்கிளிகளால் தாக்கப்படாத நாடுகளால் வெட்டுக்கிளிகளை எதிர்கொள்வது இன்னும் பல தசாப்தங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
ஏனெனில் இந்த நாடுகளில், வெட்டுக்கிளிகள் தொடர்பான பொதுவான புரிதலும் உள்கட்டமைப்பும் இருப்பதில்லை.
இந்தியாவில் தற்போதைய நிலைமை என்ன?
பாகிஸ்தானின் எல்லையிலுள்ள ராஜஸ்தானின் சில பகுதிகள் ஆண்டுதோறும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களால் பலவிதமான நெருக்கடியை எதிர்கொள்கின்றன, ஆனால் கடந்த மூன்று தசாப்தங்களில் வெட்டுக்கிளி தாக்குதல்கள் மிகப் பரவலாக இருக்கின்றன. இவை, தற்போது உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்திலும் நுழைந்துவிட்டன.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வெட்டுக்கிளியின் பெருங்கூட்டமானது, குஜராத் மாநில விவசாயிகளை பெரிதும் பாதித்தது.
வடக்கு குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில், இந்த வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டமானது, கடுகு, ஆமணக்கு, வெந்தயம், கோதுமை மற்றும் சீரக பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த ஆண்டு, பாகிஸ்தான் வழியாக வந்த வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டமானது ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்திய பிறகு, உத்தரபிரதேசத்தில் ஜான்சிக்குள் நுழைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
தோட்டாக்களை பயன்படுத்தி இந்த விவசாயிகள் போராடுவது யாருடன்?
இந்த ஆண்டு ஏப்ரல் 11 அன்று ராஜஸ்தானின் கங்கநகரில் இந்தியாவில் முதல் வெட்டுக்கிளித் தாக்குதல் நடந்தது. இந்த வெட்டுக்கிளி திரள்கள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தன.
பிறகு இந்த வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம், ஜெய்ப்பூர் மற்றும் ராஜஸ்தானின் சுற்றியுள்ள பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்துவதற்காக, பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெட்டுக்கிளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீயணைப்பு குழுக்களும் ஈடுபடுத்தப்படுகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












