கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் நீட்டிப்பு? - விரிவான தகவல்கள்

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் நீட்டிப்பு?

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு - அனுமதியும், நீட்டிப்பும்

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைய இருந்தது.

இதற்கிடையே கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என்ற கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை மாநில முதல்-அமைச்சர்களுடன் ஆலோசித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நேற்று முன்தினம் பிரதமர் மோதியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில், ஜூன் மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. அதேசமயம் பல கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது.

கட்டுப்பாட்டு பகுதிகள்

  • இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-
  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும். அங்கு எந்த தளர்வும் இன்றி நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லையை உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட நிர்வாகம் வரையறுக்க வேண்டும்.
  • கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், அவரச மருத்துவ தேவைகள் தவிர அந்த பகுதிகளில் இருந்து யாரும் வெளியே செல்லவோ, அந்த பகுதிக்குள் வரவோ கூடாது.
  • கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய்த்தொற்றை கண்டறிய வீடு வீடாக ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் தளர்வு

  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே மற்ற பகுதிகளில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அங்கு அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், சில கட்டுப்பாடுகள் தொடரும்.
  • கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே, நோய்த்தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கண்டறிந்து, அங்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

வழிபாட்டு தலங்கள்

  • முதல் கட்ட தளர்வாக 8-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்களை திறக்க அனுமதிக்கப்படுகிறது. விருந்தோம்பல் சேவைகளை தொடங்கலாம்.
  • அடுத்ததாக மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுடன் கலந்து ஆலோசித்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்படும்.
  • கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும். அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும்.
  • சூழ்நிலைகளை பொறுத்து சர்வதேச விமான சேவை, மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க முடிவு செய்யப்படும்.

சினிமா தியேட்டர்கள்

  • சூழ்நிலைகளை பொறுத்து சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான பார்கள், கலையரங்கங்கள் திறக்கப்படும்.
  • இதேபோல் சூழ்நிலைகளை பொறுத்தே சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாசார, மத விழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
  • அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை யாரும் வெளியே வரக்கூடாது. இதற்கான தடை உத்தரவை உள்ளூர் அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும்.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் நீட்டிப்பு?

பட மூலாதாரம், Getty Images

'இ பாஸ்' தேவை இல்லை

  • மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் சென்று வரவும், சரக்குகளை கொண்டு செல்லவும் தடை இல்லை. இதற்கு தனியாக அனுமதி அல்லது இணையதள பாஸ் (இ பாஸ்) போன்ற எதுவும் தேவை இல்லை. என்றாலும் இதை அரசுகள் ஒழுங்குபடுத்த வேண்டும்.
  • அண்டை நாடுகளுக்கான சரக்கு போக்குவரத்தை மாநிலங்கள் தடுக்கக்கூடாது.
  • வழிகாட்டு நெறிமுறைகளுடன் பயணிகள் ரயில்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சராமிக் சிறப்பு ரெயில்கள் உள்நாட்டு விமான போக்குவரத்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவது தொடர்ந்து நடைபெறும்.
  • அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவைகள் தவிர 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.

முகக்கவசம் கட்டாயம்

  • பொது இடங்களிலும், வழிபாட்டு தலங்களிலும், பயணத்தின் போதும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • பொது இடங்களில் குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • கடைகளில் ஒரே சமயத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
  • திருமண விழாவில் 50 பேருக்கு மேலும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 20 பேருக்கு மேலும் கூடக்கூடாது.
  • உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Presentational grey line
Banner image reading 'more about coronavirus'
Banner

இந்து தமிழ் திசை: பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வராது

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் நீட்டிப்பு?

பட மூலாதாரம், Getty Images

வெட்டுக்கிளிகள் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு என்றும், விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் என்றும் வேளாண்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.

ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் படையெடுத்த பாலைவன வெட்டுக்கிளிகள், வட மாநிலங்களில் உணவுப் பயிர் களுக்கு கடும் பாதிப்பை எற்படுத்தி வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் தமிழக பகுதிக்குள் வருவதற்கான வாய்ப்பு குறைவு எனக் கூறப்பட்டது.

இந்தச் சூழலில் கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் தென்படுவதாக வேளாண்துறைக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக எருக்கஞ்செடி மற்றும் வாழை மரங்களை ஆக்கிரமித்திருந்தன. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும், வேளாண் அதிகாரிகளும் நேற்று அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு காணப்பட்டவை பாலை வன வெட்டுக்கிளிகள் அல்ல. எருக்கஞ்செடிகள் உள்ளிட்ட பால் வகையான இலைகளை உண்ணக்கூடிய வெட்டுக்கிளிகள் என ஆய்வில் தெரியவந்தது. இதனால் விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:

பாலைவன வெட்டுக்கிளிகள் தென்னிந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவு. நீலகிரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் வெட்டுக்கிளிகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது. கிசான் விகாஸ் கேந்திரா மைய விஞ்ஞானிகள், வேளாண் அதிகாரிகளை சம்பவ இடங்களுக்கு அனுப்பி ஆய்வு மேற் கொண்டோம். அவை உள்ளூர் வெட்டுக்கிளிகள். இதுபோன்று தமிழகத்தில் 250 வகையான வெட்டுக்கிளிகள் உள்ளன. அதில் 50 வகை நன்மை செய்யும் வெட்டுக்கிளிகள் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலைவன வெட்டுக்கிளிகள் இங்கு வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக மத்திய அரசு கூறியிருந்தாலும், தமிழகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, மாவட்ட வாரியாக ஆட்சியர் தலைமையில் வேளாண்மை, தோட்டக்கலை, வனத்துறை, தீயணைப்புத் துறைகளைச் சேர்ந்தவர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழு அனைத்து பகுதிகளிலும் பிரச்சினை இருந்தால் விஞ்ஞானி கள் உதவியுடன் அவற்றை களைய வேண்டும்.

ஒருவேளை பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வந்தால் அவற்றை எப்படி அழிப்பது என்பது குறித்து, அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாலைவன வெட்டுக்கிளி வந்தால், அவை வயல்வெளிகளில் இருந் தால் உடனடியாக ரசாயன மருந்து அடிக்கக் கூடாது. வேம்பு அடிப்படையிலான அசாடிராக்டின் எனும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தாவர பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Presentational grey line

தினமணி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 'ரோபோ' - அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைப்பு

கொரோனா நோயாளிகள் மற்றும் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்களுக்கு உதவக்கூடிய வகையில் பிரத்யேக ரோபோ ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.

வைஃபை வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை 500 மீட்டா் தொலைவிலிருந்து இயக்க முடியும். இந்த ரோபோ நோயாளிகளின் உடல் நிலையை கண்காணிக்க மட்டுமின்றி அவா்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல, கிருமிநாசினிகளை தெளிக்கவும் உதவுகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவா்களும் செவிலியா்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருவதைத் தவிா்க்க இந்த ரோபோ பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி வளாகத்தில் பேராசிரியா் தியாகராஜன் தலைமையிலான ஆட்டோமொபைல் மின்னணு மற்றும் தகவல் தொடா்பியியல் துறையை சோ்ந்த குழுவினா் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனா்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: