கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வு: தமிழக அரசுக்கு மருத்துவ வல்லுநர்கள் அளித்துள்ள ஆலோசனை என்ன?

கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வு

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் உள்ளதால், அந்த நான்கு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என தமிழக அரசின் மருத்துவ ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

மே31ம் தேதியுடன் நான்காம் கட்ட கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீடிக்கவேண்டுமா இல்லையா என்பது தொடர்பான ஆலோசானை கூட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் மருத்துவக் குழுவினர், செய்தியாளர்களிடம் பேசியபோது, நான்கு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பவேண்டும் என பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தனர்.

மருத்துவ வல்லுநர் குழுவின் பிரதிநிதியான மருத்துவர் பிரதீப் கவுர் பேசியபோது, ''சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும். பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளைத் தொடரப் பரிந்துரை செய்துள்ளோம். தமிழகத்தில் பதிவாகியுள்ள தொற்றில், 77 சதவீதம் இந்த நான்கு மாவட்டங்களில்தான் பதிவாகியுள்ளது.''

Banner image reading 'more about coronavirus'
Banner

''அதனால் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை இங்கு அதிகரிக்க வேண்டும். சென்னையில் பொது போக்குவரத்துக்கு பஸ், ரயில்களை இயக்கக்கூடாது. வழிபாட்டு தலங்களை திறக்கக்கூடாது என பரிந்துரை செய்துள்ளோம். கொரோனாவில் இருந்து வயதானவர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்,'' என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தொடரவேண்டுமே தவிர தளர்வுகள் அளிக்கக்கூடாது. மாவட்ட வாரியாக தளர்வுகளை அறிவிக்கலாம். மாநிலம் முழுவதும் மொத்தமாக அறிவிக்க முடியாது என்றும் பிரதீப் கவுர் கூறினார்.

தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை என்றும் சமூகப் பரவல் இருந்திருந்தால் , இறப்பு விகிதம் அதிகரித்திருக்கும் என்றும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்றும் நீரழிவு நோய் உள்ளவர்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் மருத்துவ வல்லுநர் குழுவினர் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: