நரேந்திர மோதி 2.0: 5 ட்ரில்லியன் பொருளாதாரம், 100 லட்சம் கோடி முதலீடு - சொன்னதும், செய்ததும்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நரேந்திர மோதி இந்தியப் பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவியேற்று ஒராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டில் பொருளாதார ரீதியாக அவரது அரசு சென்ற பாதை சரியா?
கடந்த ஆண்டு மே மாதம் 30ஆம் தேதியன்று மீண்டும் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோதி. அவருடைய முந்தைய ஆட்சிக் காலத்தில் அவர் மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் ஆகியவை கடுமையான விமர்சனங்களைச் சந்தித்திருந்தன.
2014-2019 ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜேட்லி. அவர் உடல்நலக் குறைவின் காரணமாக நரேந்திர மோதியின் இரண்டாவது அமைச்சரவையில் பங்குவகிக்க விரும்பவில்லையெனத் தெரிவித்துவிட்ட நிலையில், புதிய அரசின் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டர்.
2015ஆம் ஆண்டில் வர்த்தகத் துறை இணையமைச்சராக அவருக்குக் கிடைத்த அனுபவம், நிதியமைச்சர் பதவியில் உதவியாக இருக்குமெனக் கருதப்பட்டது. மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அவர் படித்த பொருளாதாரமும் இந்தப் புதிய பணியில் கைகொடுக்கும் எனக் கருதப்பட்டது.
5 ட்ரில்லியன் பொருளாதாரம்
2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதே அந்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சமாக இருந்தது. மேலும் இந்தியா 2025க்குள் 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக வளர்ச்சியடையும் என்றும் கூறப்பட்டது.
தற்போது இந்தியப் பொருளாதாரத்தின் அளவு 2 ட்ரில்லியன் டாலர்களுக்குள் இருக்கும் நிலையில், 2025ல் இதனை 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற, அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருக்க வேண்டுமென பொருளாதார ஆய்வறிக்கை கூறியது.
ஆனால், பொருளாதார வளர்ச்சி அரசின் எதிர்பார்ப்புக்கேற்றபடி இல்லை. கடந்த ஆண்டின் பொருளாதார (திருத்தப்பட்ட) வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக பொருளாதார வளர்ச்சி 2 சதவீதத்தைத் தொடுவதற்கே வாய்ப்பு குறைவு என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஆகவே, 2025ல் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை இந்தியா அடையச் சாத்தியமே இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நரேந்திர மோதியின் கடந்த ஓராண்டு கால நடவடிக்கைகளை மட்டும் தனித்துப் பார்க்க முடியாது; கடந்த ஐந்தாண்டு கால நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும் என்கிறார் பொருளாதாரப் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
"கடந்த ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை முறைசாரா பணிகளில் ஈடுபட்டிருப்போரைக் கடுமையாக பாதித்தது. சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை பாதித்தது. அதன் பின் இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் மிக மோசமாக அமைந்ததால், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த முறைசாரா துறையும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறையும் மேலும் பாதிக்கப்பட்டன. இப்போது கோவிட் - 19க்காக போடப்பட்ட ஊரடங்கு எல்லாத் துறைகளையும் பாதித்திருக்கிறது" என்கிறார் ஜோதி சிவஞானம்.
ஒரு நோயால் ஏற்பட்ட முடக்கத்திற்கு அரசு என்ன செய்ய முடியுமெனக் கேட்கலாம். ஆனால், அதை நிர்வகித்த விதம் ஆட்சியாளர்கள் செய்வதுதானே என்று கேள்வியெழுப்பும் ஜோதி சிவஞானம், இந்த பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ள மத்திய அரசு அறிவித்த ஊக்க நடவடிக்கை, முற்றிலும் தோல்வி என்கிறார்.
இந்து மட்டுமல்ல, கடந்த ஓராண்டில் நடந்த பல பொருளாதார நடவடிக்கைகள், இந்த அரசு பொருளாதாரத்தைக் கையாளும் விதம் குறித்த நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தியிருக்கின்றன.
யெஸ் பேங்க் விவகாரம்

பட மூலாதாரம், Getty Images
உதாரணமாக யெஸ் பேங்க் விவகாரம். யெஸ் வங்கியின் பிரச்சனை என்பது கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தொடர்ந்து இருந்துவந்த ஒரு பிரச்சனை. முதலில் வங்கியின் பேலன்ஸ் ஷீட்டில் பிரச்சனைகள் இருப்பதை ரிசர்வ் வங்கி கண்டறிந்தது. இதற்கு அடுத்ததாக நிர்வாகத்தில் பிரச்சனை இருப்பதையும் ரிசர்வ் வங்கி கண்டறிந்தது. இருந்தபோதும், உடனடியாக கடும் நடவடிக்கைகள் எதையும் ரிசர்வ் வங்கி எடுக்கவில்லை. யெஸ் வங்கி அளித்திருந்த கடன்களின் அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக வேகமாக அதிகரித்திருந்தது. வராக்கடன் ஏழாயிரம் கோடி ரூபாயாக இருந்தது.
இந்த விவகாரம் வெளியில் வந்ததையடுத்து, சேமிப்புக் கணக்கு வைத்திருந்தவர்கள் பணம் எடுக்கக்கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. யெஸ் வங்கியின் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் கடுமையான இழப்பைச் சந்தித்தார்கள்.
முடிவில் இந்த வங்கியில் இந்திய ஸ்டேட் வங்கி முதலீடுசெய்ய வைக்கப்பட்டு விவகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதனால், ஸ்டேட் வங்கியின் பங்குகளின் விலையும் குறைந்தது.
இம்மாதிரி முறைகேடு நடந்ததை முன்பே அறிந்த ரிசர்வ் வங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இந்தியாவில் உள்ள ரிசர்வ் வங்கி, செபி போன்ற நிதி கண்காணிப்பு அமைப்புகள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்கின்றனவா என்ற கேள்வியை இந்த எஸ் வங்கி விவகாரம் எழுப்பியது.
அடுத்ததாக, ஐந்தாண்டுகளில் 100 லட்சம் கோடி முதலீடு என்ற அறிவிப்பு. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோதி, நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த வரும் ஐந்து ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இதற்குப் பிறகு, டிசம்பர் இறுதியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்கட்டமைப்புத் துறையில் 100 லட்சம் கோடி அடுத்த ஐந்தாண்டுகளில் முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.
ஐந்தாண்டுகளில் 100 லட்சம் கோடி என்றால் ஆண்டுக்கு இருபது லட்சம் கோடியை உள்கட்டமைப்புத் திட்டங்களில் செலவிட வேண்டும். மத்திய அரசு தற்போதைய செலவுகளுக்கே கடன் வாங்கிவரும் நிலையில், இவ்வளவு பெரிய முதலீடு சாத்தியமில்லாத ஒன்று என அந்தத் தருணத்திலேயே பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
எதிர்பார்த்தபடியே, இந்த ஆண்டு (2020-21) பட்ஜெட்டில் முதலீட்டுச் செலவாக 3.4 லட்சம் கோடி ரூபாய்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த சில வாரங்களிலேயே கொரோனா தாக்குதல் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட இந்த 3.4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுச் செலவே சாத்தியமா என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
வரவிருக்கும் ஆண்டுகளும் பொருளாதார பிரச்சனைகள் நிறைந்த ஆண்டுகளாகவே இருக்குமென்பதால் ஐந்தாண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதற்கு அடுத்ததாக, ரிசர்வ் வங்கியின் உபரி நிதியிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாய் எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இந்த நிதி எதற்குப் பயன்படுத்தப்படும் என்பதை மத்திய அரசு அறிவிக்கவில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, அரசுக்கு இருந்த பொருளாதார நெருக்கடியை தெளிவாக உணர்த்துவதாக இருந்தது.
இப்படி பல்வேறு புள்ளிகளில் பொருளாதார நெருக்கடியில் அரசு இந்த நிலையில்தான் கொரோனாவின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், வரி வருவாய் கடுமையாகக் குறைந்து, வழக்கமான செலவுகளுக்கே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான ரேட்டிங் ஏஜென்சிகள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்டதைவிட மிகக் குறைவாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டிவிட்டார்கள்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
வெளிமாநில தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images
நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஃபைனான்ஸ் அண்ட் பப்ளிக் பாலிசி வரும் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 1.1 சதவீதமே இருக்குமெனக் கணித்திருப்பதை சுட்டிக்காட்டும் பொருளாதார நிபுணர்கள், மத்திய அரசின் நிறுவனமே இந்த கணிப்புக்கு வந்திருப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது என்கின்றனர்.
மேலும், மத்திய அமைச்சர்கள் பேசுவது, தற்போதைய நிலைமையை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. "மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மாநில அரசுகள் இதுபோல 20 லட்சம் கோடி நிதிச் சலுகைகளை அறிவிக்கலாம்; நாங்கள் மேலும் பத்து லட்சம் கோடிக்கு சலுகைகளை அறிவிப்போம் என்கிறார். மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாயை செலழித்துவிட்டதைப் போலவே அவர் பேசுகிறார். மாநிலங்கள் தங்கள் வழக்கமான செலவுகளைச் செய்யவே திண்டாடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், அவர்களை பத்து லட்சம் கோடிக்கு சலுகைகளை அறிவிக்கச் சொன்னால் எப்படி?" என்கிறார் ஜோதி சிவஞானம்.
தற்போது கொரோனா ஊரடங்கின் முக்கிய பாதிப்பாக வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்தைப் பார்க்கிறோம். "அவர்கள் நாடு முழுவதும் நடந்தே சொந்த ஊர் திரும்புவதால் இந்த விவகாரம் எளிதாக வெளியில் தெரிகிறது. ஆனால், உண்மையில், சிறு நகரங்களில் உள்ள முறைசாரா தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் பட்டியில் வாடுகின்றனர். இதுதான் இந்த நோய் ஏற்படுத்தியுள்ள உண்மையான தாக்கம். அடிப்படையில் இந்த நோயே ஒரு பிரச்சனையல்ல. அந்த நோய் ஏற்படுத்தியுள்ள பொருளாதாரத் தாக்கம்தான் பிரச்சனை. இது ஒரு மிகப் பெரிய மனிதப் பேரிடர்" என்று சுட்டிக்காட்டுகிறார் ஜோதி சிவஞானம்.
இந்த நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோதி தற்சார்பு இந்தியா என்ற கருத்தாக்கத்தை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்த ஆண்டின் தாக்கம் வரவிருக்கும் ஆண்டுகளிலும் எதிரொலிக்கவிருக்கும் நிலையில், இந்த முழக்கம் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












