கொரோனா பொது முடக்கம்: மே 31 க்குப் பிறகு இந்தியாவில் என்ன நடக்கும்? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சரோஜ் சிங்,
- பதவி, பிபிசி இந்தி
கோவிட் -19 பாதிப்பின் வேகத்தையும், விளைவுகளையும் கருத்தில் கொண்டு பொது முடக்கநிலையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
"உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் கலந்தாலோசித்தேன், முடக்க நிலையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற எனது கருத்தை அவருடன் பகிர்ந்துக் கொண்டேன்" என்று அவர் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும், 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் உணவகங்களை திறக்க அனுமதிக்கலாம் போன்ற சில தளர்வுகளையும், இந்த முடக்க நிலையின்போது அறிவிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் கூறுகிறார்.
தற்போது இந்தியாவில் அமலில் உள்ள நான்காம் கட்ட முடக்க நிலை நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறத. இதற்கிடையில், வியாழக்கிழமையன்று பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் எதிர்கால திட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்தாலோசனை நடத்தினார்.
இதுவரை பிரதமர் நரேந்திர மோதிதான் இதுகுறித்து மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னதாக, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் காபா, மாநிலங்களின் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனாவினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்ட 13 நகரங்கள் தொடர்பாக முக்கியமாகப் பேசப்பட்டது.
இந்த முயற்சிகள் அனைத்திற்கும் இடையில், நாட்டில் ஐந்தாம் கட்ட முடக்க நிலை அமலுக்கு வருமா என்பது முக்கிய விவாதமாக மாறியிருக்கிறது. ஐந்தாம் கட்ட முடக்க நிலை அமலுக்கு வந்தால் அதன் வடிவம் என்னவாக இருக்கும்?

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

ஐந்தாம் கட்ட முடக்க நிலைக்கு சாத்தியம் இருக்கிறதா?
நான்காம் கட்ட முடக்க நிலை அறிவித்த பிறகு நாட்டில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், இதுகுறித்த அச்சங்கள் முதலிலேயே இருந்ததுதான்.
ஆனால் அதிக அளவில் தொற்றுநோய் பாதிப்புகளைக் கொண்டுள்ள ஐந்து மாநிலங்களின் நிலவரம் மத்திய அரசின் கவலையை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம், முடக்க நிலையின் அடுத்த கட்டத்தில், அந்த ஐந்து மாநிலங்களிலும் குறிப்பாக அதிக கவனம் செலுத்தும்.
கடந்த முறையைப் போலவே அடுத்த கட்டத்திலும் மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களுக்கு, வேறு மாநிலங்களிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை அனுப்புமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கர்நாடக அரசு ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து சாலை வழியாக வருபவர்களுக்கும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. ரயில் சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை என்றும் கர்நாடக அரசு கூறுகிறது.
அடுத்த கட்ட முடக்க நிலையில், தங்களுடைய பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என மாநில அரசுகள் விரும்புகின்றன என்பதற்கான அறிகுறியே இது.
முதலமைச்சர்களின் கூட்டத்திற்கு முன்னதாக பேசிய ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இந்த முடக்க நிலையை படிப்படியாக தளர்த்துவதற்காக, சிறந்த மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.
மத்திய அரசின் முடிவை தனது அரசாங்கம் செயல்படுத்தும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஜெயந்த் பாட்டீல், சில சேவைகளில் தளர்வு கொடுப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், ஆனால் அது தொடர்பாக மத்திய அரசின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அண்மையில், இமாச்சல பிரதேச அரசு இரண்டு மாவட்டங்களில் முடக்க நிலைக்கு பதிலாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்வரும் நாட்களில் மாநில அரசுகள் இதுபோன்ற முடிவுகளை தங்கள் மட்டத்திலேயே தொடர்ந்து எடுக்கும் என்பதைக் கணிக்க முடிகிறது.
மத்திய அரசு அடுத்த கட்ட முடக்க நிலையை அறிவிக்குமா அல்லது அதை ஐந்தாம் கட்ட முடக்க நிலை என்று அழைக்குமா என்பது தெரியாது. ஆனால், அடுத்த 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்ட அல்லது செயல்பட அனுமதிக்கப்பட்ட பணிகள், சேவைகள் மற்றும் விதிமுறைகளின் பட்டியலாகவும் அது இருக்கலாம்.
சிவப்பு மண்டலத்தில் உள்ள சந்தைகள்

பட மூலாதாரம், Getty Images
இந்த முடக்க நிலைக்கு முன்னதாக தொழிற்துறையினர் ஒரு பொருளாதார தொகுப்பைக் கோரினார்கள். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டாலும், அவர்களின் சிக்கல் தீரவில்லை. தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சொற்ப எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டே வேலைகள் நடக்கின்றன.
கடைகளை திறந்த சில்லறை வர்த்தகர்களின் கடையில் பணியாளர்களும் இல்லை, வாடிக்கையாளர்களும் இல்லை. அவை தற்போது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் பிரவீன் கண்டேல்வாலிடம் பிபிசி பேசியது. தற்போது 10% கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. கடைகள் திறக்க அனுமதி கொடுத்த பிறகும், இன்னும் மக்களிடம் அச்சம் நிலவுகிறது என அவர் தெரிவித்தார்.
சிவப்பு மண்டலத்தில் இருக்கும் சில சந்தைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கடைகளைக் கொண்ட டெல்லியின் சதர் பஜார் மொத்த விற்பனை சந்தை பகுதியைப் போலவே, பல பெரிய சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பகுதி நோய்க்கட்டுப்பாட்டு மண்டலத்தில் வருகிறது.
கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் நீட்டிக்கப்பட வேண்டும், இதனால் வருமானம் அதிகரிக்கும் என்று வணிகர்கள் மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர். இதுமட்டுமல்ல, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படலாம்.
மெட்ரோ, உள்ளூர் ரயில் சேவை மற்றும் ரயில் சேவைகள்

பட மூலாதாரம், Getty Images
மெட்ரோவை இயக்குவதற்கான தனது ஏற்பாடுகள் தொடர்பான காட்சிகளை மே 23 அன்று ட்விட்டரில் பதிவு செய்த டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், மெட்ரோ ரயில் சேவையை இயக்க முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்தது. ஆனால் அவர்களுக்கு இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை.
டெல்லியில் வியாழக்கிழமையன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், மெட்ரோவை இயக்குவதற்கான முடிவு ஆபத்தானது. ஆனால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் டெல்லி மெட்ரோவும் தற்போது வருவாய் பற்றாக்குறை என்ற நெருக்கடியை எதிர்கொள்கிறது.
ஏழு இருக்கைகள் கொண்ட மெட்ரோவில் தனிநபர் இடைவெளியை பராமரித்து சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும் என்பது ஒருபுறம் என்றால், அத்தியாவசிய சேவைகளுடன் இணைந்தவர்களுக்கு மட்டுமே, மெட்ரோ பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்பது மெட்ரோவுக்கு மறுபுறத்தில் சிக்கலை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, சிவப்பு மண்டலத்தில் உள்ள எந்தவொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் மெட்ரோ நிறுத்தப்படாது. அதாவது அந்த மெட்ரோ நிலையங்களில் மெட்ரோ சேவை துவங்கப்படாது. எனவே மெட்ரோ பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்
அரசு ஊழியர்களின் போக்குவரத்திற்காக மும்பை உள்ளூர் ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மகாராஷ்டிர அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
உள்நாட்டு விமான சேவைகள் மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் முழுமையாக தொடங்கிய பிறகு மத்திய அரசு மீதான அழுத்தம் மேலும் அதிகரிக்கும்.
இருப்பினும், சர்வதேச விமானங்களை இயக்குவதற்காக ஆகஸ்ட் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் குறித்த மத்திய அரசின் முடிவு

பட மூலாதாரம், Getty Images
படிப்படியாக முடக்க நிலையில் தளர்வுகள் கொடுப்பது அதிகரித்து வருவதால், மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தவிர, பிற துறைகளுக்கும் அனுமதி கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 1 முதல் சில ஆலயங்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் திறக்கப்படலம் என கர்நாடக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. கர்நாடக கோயில்களில் பிரசாதங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் மட்டும் சுமார் 133.56 கோடி ரூபாய் அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆலயங்களில் பூசாரிகள் மற்றும் பிற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில ஆலயங்களிலும் இதே நிலைதான். "எங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிலையில் கூட நாங்கள் இல்லை. இந்த மாதத்தில் சுமார் 25% சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது," என்று பிபிசியிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் (TDB) தலைவர் என்.வாசு கவலை தெரிவிக்கிறார்.
கேரளாவில் சபரிமலைக் கோயில் உட்பட சுமார் 125 ஆலயங்களின் நிர்வாகத்தை திருவிதாங்கூர் தேவசம் வாரியம் மேற்பார்வையிடுகிறது. முடக்கநிலை அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த கோயில்களின் வருமானம் நின்றுபோய்விட்டது.
பஞ்சாபிலும் இதே போன்ற நிலைமைதான் நீடிக்கிறது. மதுபானக் கடைகளை திறக்கும்போது, குருத்வாராக்களை ஏன் திறக்கக்கூடாது என்று அகல் தக்த் அமைப்பு கேள்வி எழுப்புகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் காதம்பரி மடத்தின் தலைவர் துறவி நரேந்திர கிரியும் இதே கேள்வியை எழுப்புகிறார்.
ஆலயங்களை திறப்பதில் ஏற்படும் மிகப்பெரிய சிக்கல் பிரசாத விநியோகம்தான். கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு, எதையும் தொடாமல் இருப்பதும், அடிக்கடி கை கழுவுவதும் நல்லது என்றும் கூறும் நிலையில், பிரசாத விநியோகத்திற்கு வழிபாட்டுத்தலங்களில் என்ன ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதை, அவற்றை திறக்க அனுமதி கொடுப்பதற்கு முன்னதாக முடிவு செய்ய வேண்டும்.
சீரியல்கள் மற்றும் திரைப்படங்களின் படப்பிடிப்பு

பட மூலாதாரம், Getty Images
கடந்த இரண்டு மாதங்களாக, தொலைக்காட்சித் தொடர்களின் புதிய அத்தியாயங்கள் ஒளிபரப்பாகவில்லை. புதிய திரைப்படங்களும் வெளியிடப்படவில்லை, அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில், அக்ஷய் குமார் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டதாக செய்திகளும், காட்சிகளும் வெளியாகின. ஆனால் அவர் அரசுக்கு உதவுவதற்காக ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக பின்னர் செய்தி வெளியானது. உண்மையில் பொழுதுபோக்குத் துறையில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
மே 28ஆம் தேதியன்று, மகாராஷ்டிராவில் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த சிலர் மாநில அரசின் பிரதிநிதிகளுடன் பேசினர்.
தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்த திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பமாகிவிட்டன. திரைப்படங்களின் படப்பிடிப்பு பச்சை மண்டலத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் பொழுதுபோக்குத் துறைக்கும் ஓரளவு தளர்வுகள் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
ஆனால் மால்கள், திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கும், உணவகங்களிலேயே அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி கொடுப்பதற்கும் இன்னும் சிறிது காலம் ஆகலாம்.
நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) ஓரளவு தளர்வுகள் கொடுக்கப்படலாம். சமூக விலகலில், இரண்டு அடி தொலைவை தனிநபர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிவதும், அவ்வப்போது கைகளை கழுவ வேண்டும் என்ற விதியைப் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வலியுறுத்தப்படலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












