இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடிதம்: “இந்தியா முன்னுதாரணமாக திகழப்போகிறது”

நரேந்திர மோதி கடிதம்: "இந்தியா முன்னுதாரணமாக திகழப்போகிறது"

பட மூலாதாரம், Getty Images

வரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து, இந்தியா கடந்த ஓராண்டுக் காலத்தில் வேகமான முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், எப்படி கொரோனாவை எதிர்கொண்டு உலகத்தை ஆச்சரியப்படுத்தியதோ அதுபோல பொருளாதாரத்தை மீட்டு உருவாக்கி உலகத்தை ஆச்சரியப்படுத்துவோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இரண்டாவது முறையாக மோதி பிரதமராகப் பதவி ஏற்று ஓராண்டு முடிந்துள்ளது.

இந்த நிலையில் மோதி மக்களுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

கொரோனா, பொருளாதாரம், புலம்பெயர் தொழிலாளர்கள், தற்சார்பு என பல்வேறு விஷயங்களை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கனவின் பாதை

இந்தியாவை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்காக 2019-ம் ஆண்டில் இந்திய மக்கள் வாக்களித்துள்ளனர். இந்தியாவை உலக அளவில் முன்னோடி நாடாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கடந்த ஓராண்டுக் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், இந்தக் கனவை நிறைவேற்றும் பாதையை நோக்கியவையாக உள்ளன என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை அடிக்கோடிட்டு குறிப்பிட்டுள்ள மோதி, ஜல் ஜீவன் மிஷன் மூலமாக, கிராமப்புறங்களில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும், வர்த்தகர்களின் பிரச்சனைகளுக்கு உரிய காலத்தில் தீர்வு காண்பதற்காக வியாபாரி கல்யாண் வாரியத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

கொரோனா காலம்

நரேந்திர மோதி கடிதம்: "இந்தியா முன்னுதாரணமாக திகழப்போகிறது"

பட மூலாதாரம், Getty Images

இந்த கடிதத்தில் கொரோனா குறித்தும், அது பொருளாதாரத்தில் செலுத்தி உள்ள தாக்கம் குறித்தும் மோதி குறிப்பிட்டுள்ளார்.

"உலகை உலுக்கி வரும் கொரோனா நம் நாட்டையும் பிடித்துள்ளது. இதுபோன்ற ஒரு மோசமான நோய் பாதிப்பு காலகட்டத்தில், எவரொருவரும் துன்பம் அடையவில்லை என்று கூறிவிடமுடியாது. புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு குறு தொழில் நடத்துவோர், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்" என்று கூறி உள்ளார்.

"விளக்கு ஏற்றுதல், கை தட்டுதல் தொடங்கி, கொரோனாவை எதிர்த்துப் போராடுபவர்களை கௌரவிக்க இந்திய ராணுவத்தினர் நடத்திய நிகழ்ச்சிகள், மக்கள் ஊரடங்கு அல்லது தேசிய அளவிலான முடக்கநிலை காலத்தில் விதிமுறைகளை உறுதியாக கடைப்பிடிப்பது போன்றவை உன்னத பாரதம் என்ற நிலையை எட்டுவதற்கான உத்தரவாதமாக உள்ளன."

முன் உதாரணமாக திகழ்வோம்

"இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் எப்படி மீட்சி பெறும் என்ற விவாதம் பரவலாக நடைபெற்று வருகிறது. பொருளாதார மீட்டுருவாக்கத்திலும் நாம் முன்னுதாரணத்தை ஏற்படுத்துவோம் என்ற உறுதியான நம்பிக்கை இருக்கிறது. நாம் தற்சார்பாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. நமது சொந்தத் திறன்களின் அடிப்படையில் நமது பாதையில் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதைச் செய்வதற்கு தற்சார்பு இந்தியா என்ற ஒரே வழிதான் இருக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்த இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் புதிய வாய்ப்புகளைத் தரும் காலகட்டமாக இது இருக்கும்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, குடியுரிமை திருத்த சட்டம், அயோத்தி விவகாரம், முத்தலாக் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மோதி.

"என்னிடம் சில போதாமைகள் இருக்கலாம். ஆனால், இந்த நாட்டில் இல்லை. நான் என்னை நம்புவதைவிட உங்களை அதிகம் நம்புகிறேன். உங்கள் திறமையை, சக்தியை நம்புகிறேன்" என அந்த கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: