கொரோனா பொது முடக்கம்: நீடிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா? மோதி - அமித் ஷா ஆலோசனை

கொரோனா பொது முடக்கம்: ஐந்தாவது கட்டமாக நீட்டிப்பா அல்லது தளர்வா? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: கொரோனா பொது முடக்கம்: நீடிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா?

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஊரடங்கு நாளை முடிகிறது

4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் கொரோனாவின் தாக்கமும், உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 799 ஆகவும், உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 4,706 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

கட்டுப்பாடுகள் தளர்வு

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தளர்த்தின.

இதனால் நிபந்தனைகளுடன் கடைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. வாகன போக்குவரத்துக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளன. விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. என்றாலும் பேருந்து, ரயில் சேவைகள் முழுமையாக இயங்காததால் மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

கொரோனா பொது முடக்கம்: ஐந்தாவது கட்டமாக நீட்டிப்பா அல்லது தளர்வா? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

உள்துறை அமைச்சர் அமித்ஷா

கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய இருப்பதால், அது மேலும் நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால் எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும்? மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்து உள்ளன.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் மாநில முதலமைச்சர்களை தொலைபேசியில் தனித்தனியாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு விவாகாரத்தில் அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்தார். எந்தெந்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்பது பற்றிய அவர்களுடைய யோசனைகளையும் கேட்டார்.

முதலமைச்சர்கள் யோசனை

அப்போது, நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கை நீட்டிக்கலாம் என்றும், மற்ற பகுதிகளில் மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்து மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வழிவகுக்க வேண்டும் என்றும் பெரும்பாலான முதலமைச்சர்கள் யோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுவரை, ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன் பிரதமர் மோதிதான் மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அமித்ஷாவும் அவருடன் இருந்துள்ளார். இந்த தடவை முதன் முதலாக அமித்ஷா தொலைபேசி மூலம் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

அமித்ஷாவுடன் பேசிய பின் கோவா முதல்-அமைச்சர் பிரமோத் சாவந்த் கூறுகையில், ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்று தெரிவித்தார்.

மோதியுடன் ஆலோசனை

இந்த நிலையில் அமித்ஷா நேற்று பிரதமர் மோதியை சந்தித்து பேசினார். அப்போது மாநில முதலமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளை அவர் பிரதமரிடம் விளக்கி கூறினார். அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது? என்னென்ன கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது குறித்து அவர்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.

கொரோனா பாதிப்பு எப்போது முடியும் என்று தெரியாத நிலை உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை முழுமையாக நீக்கிவிட்டால் கொரோனா சமூக பரவலாக மாறி உயிர் இழப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி இருக்கிறது.

மாநிலங்களுக்கு அதிகாரம்

எனவே நாட்டில் தற்போது உள்ள நிலவரப்படி கொரோனா பரவல் அதிகமாக உள்ள நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படலாம் என்றும், மற்ற பகுதிகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதுபற்றி மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜூன் 1-ந் தேதி முதல் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை விதிப்பது, தளர்த்துவதில் மத்திய அரசின் பங்கு அதிகம் இருக்காது என்றும், உள்ளூர் சூழ்நிலையை பொறுத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களே இந்த விஷயத்தில் முடிவு எடுத்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இனி 15 நாட்களுக்கு ஒருமுறை ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், கட்டுப்பாடுகள், தளர்வுகள் பற்றி மாநிலங்கள்தான் தீர்மானிக்கவேண்டி இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சினிமா தியேட்டர்கள்

வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கும், அரசியல் கூட்டங்களுக்கும் மற்றும் வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்களை திறக்கவும் இருந்து வரும் தடையை மத்திய அரசு தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது.

பள்ளிகளை திறப்பது, மெட்ரோ ரெயில்களை இயக்குவது பற்றி முடிவு செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கே வழங்கப்படும் என்று தெரிகிறது.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 30 மாநகராட்சி பகுதிகளில் உள்ளனர். தமிழகத்தில் சென்னை நகரில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. எனவே இந்த பகுதிகளில் ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக் கொள்ளும் என்று தெரிகிறது.

Presentational grey line
Banner image reading 'more about coronavirus'
Banner

தினமணி: 4-ஆவது நாளில் 494 விமானங்களில் 38,078 போ் பயணம்

4-ஆவது நாளில் 494 விமானங்களில் 38,078 போ் பயணம்

பட மூலாதாரம், Getty Images

நாடு முழுவதும் 494 உள்நாட்டு விமானங்களில் 38,078 போ் வியாழக்கிழமை பயணம் செய்தனா் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி கூறினாா்.

இதுகுறித்து அவா் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், 'உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்ட 4-ஆவது நாளான வியாழக்கிழமை நள்ளிரவு வரை, 494 விமானங்களில் 38,078 போ் பயணம் செய்தனா்' என்று குறிப்பிட்டுள்ளாா்.

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், கடந்த மாா்ச் 25-ஆம் தேதியில் இருந்து ரயில், பேருந்து, விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு மே 25-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையும் (மே 26), உம்பான் புயல் பாதிப்பால் மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமையும் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.

கொரோனா தொற்று பரவல் அதிகம் காணப்படும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரம், தெலங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் குறைந்த பயணிகளே அனுமதிக்கப்படுகிறாா்கள்.

முதல் நாளான திங்கள்கிழமை 428 விமானங்களில் 30,550 பேரும், செவ்வாய்க்கிழமை 445 விமானங்களில் 62,641 பேரும், புதன்கிழமை 460 விமானங்களில் 34,366 பேரும் பயணம் செய்தனா்.

பொதுமுடக்கத்துக்கு முன்பு, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக 3,000 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

Presentational grey line

இந்து தமிழ் திசை: ரூ.913 கோடி சொத்து - தீபாவும், தீபக்கும் ஜெ.வின் நேரடி வாரிசுதாரர்கள்

கொரோனா பொது முடக்கம்: ஐந்தாவது கட்டமாக நீட்டிப்பா அல்லது தளர்வா? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

தீபாவும் தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுதாரர்கள் என தீர்ப்பில் திருத்தம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க வாரிசுகள் என்ற அடிப்படையில் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது சகோதரர் ஜெ.தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கடந்த 27-ம் தேதி அளித்த தீர்ப்பில், ''ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளுக்கும் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் இரண்டாம் நிலை வாரிசுகள்'' என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தீபாவும், தீபக்கும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், 'எங்களது பாட்டி சந்தியாவின் சொத்துகள் பாரம்பரிய முறைப்படி எங்களது தந்தைக்கும் அத்தைக்கும் கிடைத்தது. எங்களது அத்தை ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லாத சூழலில் நாங்களே அவருடைய நேரடி வாரிசு தாரர்கள். எனவே, எங்களை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதை மாற்றி, இந்திய வாரிசுரிமை சட்டப்படி நேரடி வாரிசுகள் என திருத்தம் செய்து அறிவிக்க வேண்டும்' என கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு:

நாங்கள் கடந்த மே 27 அன்று பிறப்பித்த தீர்ப்பில், தீபா மற்றும் தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் என அறிவித்து இருந்தோம். ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு இவர்கள் இருவர் மட்டுமே வாரிசுகள் என கூறியிருந்தோம்.

இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 15(1)(d) ன்படி திருமணமாகாத ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை என்பதால் தீபாவும், தீபக்கும் அவரது நேரடி வாரிசுகள் என தீர்ப்பில் திருத்தம் செய்கிறோம். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள் அல்ல. நேரடி வாரிசுதாரர்கள் ஆவர். இவ்வாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிபதிகள் அறிவுரை

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளிடம், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டதும் தீபா தனது கணவருடன் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்'' என்றார்.

அது தொடர்பாக தீபா தரப்பு வழக்கறிஞர் சாய்குமரனிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர், ''தீர்ப்பு வெளியானதும் போயஸ் கார்டன் இல்லத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அங்கு சென்று இருக்கலாம். மற்றபடி எந்த பிரச்சனையிலும் ஈடுபடவில்லை'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ''ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என தீபாவையும் தீபக்கையும் இந்த உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே, ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி சட்டம் இயற்றினால், அதை எதிர்த்து இருவரும் சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாமே அன்றி, தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபடக் கூடாது'' என அறிவுரை வழங்கினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: