'கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்குள்ளது'

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி -' கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியாவும் பெரும் பங்குள்ளது'

டெல்லியில் இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதர் இம்மானுவேல் லெனைன், "மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை பெருமளவில் தயாரிப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது," என்று தெரிவித்தார் என்கிறது தினத்தந்தியின் செய்தி.
உலகமெங்கும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி சந்தைக்கு கொண்டு வருவதில் போட்டி போடுகின்றனர். இந்த தடுப்பூசியை அல்லது மருந்தை தயாரித்து உலகளவில் சமமாக வினியோகிக்கப்பட வேண்டும் என்றால், அதில் நாடுகளை ஒருங்கிணைப்பது மிகவும் முக்கியம் ஆகும்.
மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை பெருமளவில் தயாரிப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது.
உலகளவில் தடுப்பூசிகளை, பொதுவான மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. கொரோனா வைரசுக்கு ஒரு தடுப்பூசியை கண்டுபிடிக்க இந்தியாவில் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் தனித்தனியே திட்டங்களை வைத்துக் கொண்டு செயல்படுகின்றன.
உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய 2 நாள் மாநாட்டில் இந்த பிரச்சினை முக்கிய பிரச்சினையாக எழுந்தது. அங்கு பல நாடுகள் தடுப்பூசியை தயாரிக்கவும், அனைத்து நாடுகளுக்கு கிடைக்கச் செய்யவும் அழுத்தம் கொடுத்தன.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்ப்பதற்கான அனைத்து தயாரிப்புகளும் உலகளவில், சரியான நேரத்தில், சமமான அளவில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற ஐரோப்பிய கூட்டமைப்பின் தீர்மானத்தை இந்தியாவும் பிரான்சும் ஆதரித்தன. மேலும் கொரோனா வைரசுக்கு எதிரான விரிவான நோய்த்தடுப்பு மருந்தை (தடுப்பூசியை) உலகளாவிய பொது நன்மையாக அடிக்கோடிட்டு காட்டின.
கொரோனா வைரஸ் தொற்று வெடித்ததில் இருந்து, இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் ஒருங்கிணைந்த உலகளாவிய அணுகுமுறையை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்தியா ஏற்கனவே 44 கோடியே 60 லட்சம் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளையும், 154 கோடி பாரசிட்டமால் மாத்திரைகளையும் 133 நாடுகளுக்கு வழங்கி உலகத்தலைவர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. கடந்த வாரம் இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிறிங்கலா, கொரோனா வைரஸ் தொற்றுநோய், உலகின் மருந்தகமாக இந்தியாவின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது என குறிப்பிட்டார். என விவரிக்கிறது அச்செய்தி.

தி நியூ இந்தியன் எக்பிரஸ் - தமிழக அரசின் கட்டுப்பாடுகள்

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் உள்நாட்டு விமானங்கள் அனுமதிக்கப்படுமா இல்லையா என்பது அதிகாரப்பூர்வ 'நிலையான இயக்க நடைமுறைகளை' வெளியிட்டு தெளிவுப்படுத்தியுள்ளது தமிழக அரசு என்கிறது தி நியூ இந்தியன் எக்பிரஸ் செய்தி.
தமிழக அரசு ஞாயிறு இரவு வெளியிட்டுள்ள நிலையான இயக்க நடைமுறையில், 25 நகரங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் விமானங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது தமிழக அரசு. மேலும் கோயம்புத்தூர், மதுரை, திருச்சிக்கும் விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு வருகைத்தரும் பயணிகள் தமிழக அரசின் வலைதளத்தில் தங்கள் விவரங்களை பதிந்து ஈ பாஸ் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பயணிகளின் கையிலும் தேதியுடன் கூடிய குவாரண்டின் சீல் அடிக்கப்படும்.

தினமணி - சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொடங்கும் பணி

பட மூலாதாரம், Getty Images
சென்னை எல்லைக்குட்பட்ட 17 தொழிற்பேட்டைகள் திங்கட்கிழமை (இன்று) முதல் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்கிறது தினமணியின் செய்தி.
இதன்மூலம் ஆயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இரு மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
அதே வேளையில் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நிறுவனங்களில் 25 சதவீத தொழிலாளர்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த முடியும் என்றும், உரிய விதிகளுடன் தொழில் நிறுவனங்கள் இயங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என விவரிக்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: ஊரடங்கு முடியும் நேரத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
- சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது - அண்மைய தகவல்கள்
- பாகிஸ்தான் விமான விபத்து: உடை மற்றும் கடிகாரத்தினால் அண்ணனின் உடலை அடையாளம் கண்டேன்
- ஹாங்காங் போராட்டம்: சீனாவின் புதிய சட்டம் - எதிர்க்கும் மக்கள், கண்ணீர் புகை குண்டுகளை வீசும் போலீஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












