"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைய கொரோனா வைரஸ் மட்டுமே காரணமல்ல"

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
2019-20ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.1% ஆக குறைந்துள்ளது. ஆனால், இதற்கு கொரோனா தாக்குதல் மட்டுமே காரணமில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்கள் வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டன.
அதன்படி, 2019-20 நிதியாண்டின் கடைசி காலாண்டில் வளர்ச்சி 3.1 சதவீதமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பல ரேட்டிங் ஏஜென்சிகள், கடைசி காலாண்டில் 2.2 சதவீத வளர்ச்சி இருக்குமெனக் கணித்திருந்த நிலையில், 3.1 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
மேலும், கடந்த நிதியாண்டில் (2019-20) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.2% ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 11 நிதியாண்டுகளிலேயே மிகவும் குறைவான வளர்ச்சி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தித் துறையில் வளர்ச்சி மைனஸ் 1.4 சதவீதமாக இருந்தபோதும் விவசாயம், சுரங்கத்துறையில் வளர்ச்சி விகிதம் முறையே 5.9 மற்றும் 5.2ஆக இருந்தது இந்த வளர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
முன்னதாக, 2019-20ல் பொருளாதார வளர்ச்சியானது 8.5 சதவீதமாக இருக்குமெனக் கருதப்பட்டது. பிறகு அந்த கணிப்பு திருத்தப்பட்டு வளர்ச்சி 5 சதவீதம்தான் இருக்குமெனக் கூறப்பட்டது. இப்போது அதுவும் குறைந்து வளர்ச்சி 4.2 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, அதாவது 2018-19ல் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்தது.

"கடந்த 7 காலாண்டுகளாகவே இந்தியப் பொருளாதாரம் தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்துவந்திருக்கிறது. இந்தத் தருணத்தில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்தச் சரிவு எல்லாமே கொரோனா தாக்குதலுக்கு முன்பு நிகழ்ந்தது. இப்போது கடைசி காலாண்டுக்கான எண்கள் வெளிவந்திருக்கின்றன."
"இதில் ஏற்பட்டிருக்கும் சரிவுக்கு கொரோனாவைக் காரணம் சொல்ல முடியாது. இந்த காலாண்டில் ஒரு வாரம் மட்டுமே ஊரடங்கு அமலில் இருந்தது. ஆகவே பொருளாதார வளர்ச்சி 3.1ஆக சரிந்ததற்கு கொரோனாவைக் காரணமாகச் சொல்ல முடியாது" என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
கடந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம் எனக் கணிக்கப்பட்டிருப்பதையும் கேள்விக்குட்படுத்துகிறார் அவர்.
"இந்த பொருளாதார வளர்ச்சியை கடந்த 11 ஆண்டுகளில் குறைவு எனச் சொல்லக்கூடாது. காரணம், இந்த அரசு பதவியேற்றதிலிருந்து பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடும் முறை மூன்று தடவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியம் சொல்வதுபடி, தற்போதைய வளர்ச்சி என்று சொல்லப்படுவது உண்மையான வளர்ச்சி சதவீதத்திலிருந்து 2.5 சதவீதம் அதிகம். அதனை இப்போது கழித்துவிட்டுப் பார்த்தால், கடந்த ஆண்டில் நம்முடைய உண்மையான பொருளாதார வளர்ச்சி வெறும் 1.7 சதவீதம்தான்" என்கிறார் ஜோதி சிவஞானம்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

கொரனா தடுப்புக்காக செய்யப்பட்ட ஊரடங்கின் காரணமாக வரும் நிதியாண்டில் நிலைமை மிக மோசமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்துவிட்டன. SBI Ecowrap அளித்த அறிக்கையின்படி, வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் 1.1 சதவீதமாகத்தான் இருக்கும். நிதி கமிஷனும் இதே அளவில்தான் பொருளாதார வளர்ச்சி இருக்குமெனக் கணிக்கிறது.
" 1.1 சதவீத வளர்ச்சி என்பது காலனியாதிக்கக் காலத்தில் இருந்த வளர்ச்சி. இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி இவ்வளவு மோசமான நிலையில் இருந்ததேயில்லை. உண்மையில், நிலைமை இதைவிட மோசமடையலாம். வரும் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக (மைனஸில்) இருக்கக்கூடும்" எனவும் எச்சரிக்கிறார் ஜோதி சிவஞானம்.
பொருளாதர வளர்ச்சி குறைந்தது ஒருபக்கமிருக்க, மத்திய அரசின் வரி வருவாயும் 2019-20ல் 3.4 சதவீதம் அளவுக்குக் குறைந்திருக்கிறது. மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 3.8 சதவீதமாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 4.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.












