நரேந்திர மோதி 2.0ஆட்சி: டிஜிட்டல் இந்தியாவில் உதவித்தொகைக்காக வலுக்கும் போராட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்,
- பதவி, பிபிசி தமிழ்
ஆதார், மொபைல் எண்ணுடன் வங்கிக் கணக்கை இணைத்துள்ளதால், சமூக நலத்திட்டங்களை சரியாக செயல்படுவதாகப் பிரதமர் மோதி தலைமையிலான மத்திய அரசு ஒருபுறம் நம்பியிருக்க, பாஜவின் இரண்டாம் ஆட்சிக்காலத்தின் முதல் ஆண்டில் இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்களை மக்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எளிய மக்கள். அரசியல் கட்சிகள், கார்பரேட் நிறுவனங்களின் சாயங்களற்ற மக்கள். இந்தியாவின் கிராமம் மற்றும் நகரங்களில் தினசரி உணவுக்காக திட்டமிடவேண்டிய நிலையில் வாழும் மக்கள் அவர்கள்.
இந்தியா முழுவதும் அரசாங்க உதவித்தொகை முறையாக கிடைக்காமல் 2019ல் போராடிய பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒருவர், சென்னை செம்மஞ்சேரியில் வசிக்கும் 70 வயது தேசம்மா. கடந்த ஆண்டில் முதியோர் உதவித்தொகை ஏன் தாமதிக்கப்படுகிறது என கேள்வியெழுப்பியவர். அவருக்கு சொல்லப்பட்ட பதில்கள் எதுவும் திருப்தியளிக்கவில்லை என்கிறார். செம்மஞ்சேரியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான தோழமை அமைப்பில் உள்ளவர்கள், தேசம்மா போல பல முதியவர்களை ஒன்றுதிரட்டி, வங்கியிடமும், மத்திய, மாநில அரசுகளிடம் நியாயம் கேட்டிருக்கிறார்கள்.
''கடந்த 12 ஆண்டுகளாக இந்த உதவித்தொகையை மட்டும்தான் நம்பியிருக்கிறேன். முன்பு சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக இருந்தேன். ஒப்பந்த ஊழியராக வேலை செய்தேன். சென்னையில் பல தெருக்களை தூய்மை செய்திருக்கிறேன். இப்போது உழைக்க முடியாமல், முதுமையை சுமந்துகொண்டிருக்கிறேன். அரசாங்க உதவித்தொகை எனக்கு மிகவும் தேவை. வங்கி மூலம்தான் பணம் தருவோம் என்கிறார்கள். பணம் கிடைப்பதில் அதிக தாமதம். வங்கி முகவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தேதியில் பணம் கொடுக்கிறார். தாமதம் ஆகிறது என வங்கிக்கு சென்று கேட்டால், ஒரு நாள் அங்கே உட்காரவைத்துவிட்டு, பணம் வந்ததும் முகவர் வருவார் என்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் சிரமப்படுகிறோம்,'' என்கிறார் வருத்தத்துடன்.

அரசு தரும் ரூ.1,000 உதவித்தொகையை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள் இருக்கிறார்களா? உதவித்தொகை வரவில்லை அல்லது தாமதமானால் என்ன ஆகிறார்கள்?
உதவித்தொகையை நம்பி வாழும் குடும்பம்
நாகை மாவட்டம் திருமணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த வளர்ச்சி மாற்றுத்திறனாளியான பாலாஜியின் குடும்பம் பதில் தருகிறது.மூன்று அடி உயரம் கொண்ட பாலாஜி மற்றும் இவரது குடும்பத்தார் நால்வர் மாற்றுத்திறனாளிகள். சுமார் ஆறு மாதங்கள் உதவித்தொகை கிடைக்காமல் அவர்கள் கண்ணீர் வடித்தனர்.
''நான் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி, என் இரண்டு சகோதரர்களும் உயரம் குறைந்தவர்கள், என் அம்மா மற்றும் சித்தி வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள். எங்கள் அனைவருக்கும் அரசாங்கத்தின் உதவித்தொகை மட்டும்தான் ஒரே நம்பிக்கை. நான் தொடங்கியிருந்த சுயஉதவிக் குழுவில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் வாங்கிய ரூ.20,000 திருப்பி செலுத்த முடியவில்லை. இதனை காரணமாக கொண்டு எங்கள் குடும்பத்துக்கு அளிக்கப்படவேண்டிய ரூ.5,000 உதவித்தொகை கொடுப்பதை வங்கியில் நிறுத்திவிட்டார்கள். பல விதமான போராட்டங்களை அடுத்து, நேரடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டபின்னர்த்தான் உதவித்தொகை கிடைத்தது. ஆனால் நாங்கள் ஆறு மாதங்கள் பட்ட துன்பம் சொல்லிமாளாது,''என்கிறார் பாலாஜி.

''எங்கள் ஐந்து பேருக்கும் பணம் நிறுத்தப்பட்டதால் மிகுந்த அவதிப்பட்டோம். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, சுயஉதவிக் குழு கடனுக்கும், மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கும் சம்பந்தம் இல்லை. ஆறு மாதம் தரவேண்டிய உதவித்தொகையை வங்கி நிர்வாகம் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டபின்தான் கொடுத்தார்கள். உரிய தேதியில் ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை கிடைத்தால்தான் எங்களால் வாழமுடியும். நாங்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள் என்பதால், வேலை கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த முறை எங்களுக்கு கலெக்டர் வந்து உதவினார். இதுபோல உதவி கிடைக்காதவர்கள் என்ன ஆவார்கள்?,''என்கிறார் பாலாஜி.
டிஜிட்டல் இந்தியாவில் அதிகரித்த போரட்டம்
மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முதியவர்கள், தனிப்பெண்கள், குழந்தை தொழிலாளர்கள், விவசாயத்தொழிலாளர்கள், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிவோர் என பலருக்கும் சமூக நலத்திட்டங்கள் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்திய அரசு ஏறக்குறைய 400 சமூக நலத்திட்டங்களை நடத்துகிறது. இந்தியா முழுவதும் பல கிராமங்களில் தேசம்மா, பாலாஜி போன்ற பலரும் உதவித்தொகைக்காகக் காத்திருக்கிறார்கள். உதவித்தொகை தாமதமாவது, உதவித்தொகை திடீரென நிறுத்தப்படுவது என பலவிதமான காரணங்களால், இந்தியாவில் கிராமங்களில், நகரங்களில் 2019ல் மக்கள் போராட்டம் நடத்தினர் என்று பதிவு உள்ளது.
உதவித்தொகை கிடைப்பதில் உள்ள தாமதத்தை முன்னிறுத்தி தமிழகத்தில் 2019ல் பல போராட்டங்களை நடத்தியவர் மாற்றுத்திறனாளி நலன் செயற்பாட்டாளர் நம்புராஜன்.
''ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கு இணைத்துள்ளதால், அவர்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்ததும் எஸ்எம்எஸ் வருவதாக கூறும் பயனாளிகள், வங்கி முகவர் வருவதில் தாமதம் இருப்பதாகக் கூறுகிறார்கள். வங்கி கணக்கிற்கான டெபிட் கார்ட் வசதியை அரசாங்கம் அளிக்கவில்லை. பயனாளியின் பணத்தை பிறர் எடுக்கும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசாங்க அதிகாரிகள். ஆனால் டெபிட் கார்ட் கொடுக்காத போது, வங்கி முகவர் சரியான நேரத்தில் பணத்தைக் கொடுப்பதை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும். 2019ல் பல முறை உதவித்தொகை கிடைக்கவில்லை என போராட்டம் நடத்திவிட்டோம். டிஜிட்டல் இந்தியாவில், உதவித்தொகையில் தாமதம் ஏற்படுவதை எதிர்த்து போராட்டங்கள் நடப்பதை ஏன் மத்திய அரசு கவனிப்பதில்லை?,''என்கிறார் நம்புராஜன்.
ஒரே இந்தியா ஒரே நடைமுறை ஒத்துவருமா?

பட மூலாதாரம், getty Images
இந்தியாவில் சமூக நலத்திட்டங்களை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு நடத்தினால்தான் முழுமையான பயனை மக்கள் பெறுவார்கள் என்கிறார் பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ்.
''வங்கி மூலம் பணம் கொடுப்பது அல்லது தபால் நிலையம் மூலம் கொடுப்பது, நேரடியாக பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்துவது என பல வழிகள் உள்ளன. வங்கி மூலம் கொடுப்பதால் மக்களுக்கு முழுத்தொகையும் சென்றுசேரும் என அரசாங்கம் நம்புகிறது. ஆனால் கிராமங்களில் வங்கிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால், முதியவர்கள் உள்பட பலரும் உதவித்தொகைக்காகக் காத்திருக்கவேண்டியுள்ளது. நான் சமீபத்தில் ஒதிஷாவில் சமூக நலத்திட்டங்களின் உதவித்தொகை அந்தந்த கிரம பஞ்சாயத்து அலுவலகத்தில் வெளிப்படையாகப் பெயர்கள் வாசிக்கப்பட்டு முழு உதவித்தொகை அளிக்கப்படுவதைப் பார்த்தேன். இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்துவதற்கு ஏற்ற நடைமுறையை பின்பற்றினால் எளிய மக்களின் துன்பம் குறையும்,''என்கிறார்.

பட மூலாதாரம், getty images
''இந்தியா முழுவதும் ஓரே மாதிரியான வழிமுறை என்பது சரியானதா என்பதை யோசிக்கவேண்டும். ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கை இணைத்துவிட்டதால், உதவித்தொகை சரியாக சென்று சேர்ந்துவிடும் என அரசாங்கம் நம்புகிறது. இந்த வங்கி-ஆதார் எண் இணைப்பு திட்டம் குறித்த விரிவான ஆய்வை அமெரிக்காவின் தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகம் மேற்கொண்டது. இதற்காக ஜார்க்கண்டில் 15மில்லியன் பயனாளிகளை உள்ளடக்கிய ஆய்வு நடத்தப்பட்டது.அதில், வங்கிக்கணக்குடன் ஆதார் இணைப்பு என்ற திட்டம்,உதவித்தொகையில் கசிவைக் குறைப்பதில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது,''என்கிறார்.
''சில கிராமங்களில் 100நாள் வேலைத்திட்டத்திற்கான பணம் அளிக்கப்படுவது பற்றி மக்கள் பேசுகிறார்கள், தங்களுக்கான உரிமையை ஒன்றிணைந்து கோருகிறார்கள், அவர்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்கிறது என்கிறார்கள்.கொரோனா ஊரடங்கு காலத்தில், வங்கிக்குப் போக முடியாததால், முகவர்கள் மூலம் நேரடியாகப் பயனாளிகளுக்கு உதவித்தொகை வந்ததாக கூறுகிறார்கள். உதவித்தொகை ஊரடங்கு சமயத்தில், சரியான நேரத்தில் கிடைத்ததாகப் பயனாளிகள் கூறினர். இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் செயல்படுத்துவதுபோலவே பிற சமயத்திலும் உதவித்தொகையை மக்களுக்கு சென்றுசேர்ப்பதில்தான் அந்த திட்டங்களின் வெற்றி அடங்கியுள்ளது,''என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












