கொரோனா வைரஸ்: போக்குவரத்து, உணவகம், இ பாஸ் - இவைதான் நாளை முதல் தமிழகத்தில் அமலாகும் தளர்வுகள்

புதிய தளர்வுகள்

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை ஜூன் 30 வரை தளர்வுகளுடன் மாநில அரசு நீடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி பொது முடக்கத்தை நீட்டித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது போக்குவரத்தை அனுமதிப்பது உள்ளிட்ட முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது.

அதிக பாதிப்புள்ள சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டுவந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன என முதல்வர் தெரிவித்துள்ளார்.

பொது பேருந்து போக்குவரத்தைப் பொருத்தவரை, மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1ம்தேதி முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 1) கோயம்புத்துhர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்

2) தர்மபுரி,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி

3) விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

Banner image reading 'more about coronavirus'
Banner

4) நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை

5) திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்

6) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

7) காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

8) சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

மண்டலம் ஏழு மற்றும் எட்டில் உள்ள பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும். அதிக பாதிப்புள்ள நான்கு மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு தடை நீடிக்கிறது.

பிற மாவட்டங்களில்,

• அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

• பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

• மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை.

• அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.

• அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும்.

புதிய தளர்வுகள்

பட மூலாதாரம், Getty Images

இ-பாஸ் முறை:

• அனைத்து வகையான வாகனங்களும் ஒன்று முதல் ஆறு மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.

• வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

• பொது இடங்களில் மக்கள் கூட்டமாகக் கூடுவதை தடுக்க, ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

• நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

• பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்விகற்றல் தொடர்வதுதான், அதனை ஊக்கப்படுத்தலாம்.

• மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டு பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

• மெட்ரோ ரயில் / மின்சார ரயில் இயங்காது.

புதிய தளர்வுகள்

பட மூலாதாரம், Getty Images

• திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் , பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கிறது.

• அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

• மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.

இந்த கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி ஊர்வலங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள்:

• இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

• திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்டு பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதைத் தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம் . மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். கடைகளில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக்கூடாது.

மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக்கூடாது.

புதிய தளர்வுகள்

பட மூலாதாரம், Getty Images

டீ கடைகள் , உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு பயன்படுத்தலாம்.

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.

முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

தொழில் நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.

அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள்

வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம் . மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அனுமதிக்கப்படவேண்டும். குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக்கூடாது.

டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள் , மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக்கூடாது.

புதிய தளர்வுகள்

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர்க்கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

வாடகை மற்றும் டாக்சி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ஆட்டோவில் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.

பொது இடங்களில் பின்பற்றவேண்டியவை:

• குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

• தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி , எந்தவிதமான தளர்வுகளும் இல்லை.

• அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

• பொது மக்கள் இ-பாஸ் அனுமதியில்லாமல், தனியார் போக்குவரத்துக்கு அரசினால் அனுமதிக்கப்பட்டாலும், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள், இந்நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் அவர்களது பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் மீது, குறிப்பாக, வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் போன்ற வெளி நபர்கள் உள்ளே பிரவேசிக்கத் தேவையான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: